துர்காஷ்டமி..!



தெளிவு பெறு ஓம்  

* பல வீடுகளிலும், வியாபார ஸ்தலங்களிலும் காமாட்சி திருவிளக்கினை ஏற்றுதல்  நடைமுறையில் உள்ளது. உலோகம் எளிதில் கடத்தி என்பது யாவரும் அறிந்ததே.  அவ்வாறு இருக்க ஏற்றப்படும் தீபத்தின் உஷ்ணத்தால் காமாட்சி திருவுருவம்  உஷ்ணம் அடையாதா? குளிர்ச்சியாக இருக்க வேண்டிய காமாட்சி அன்னையை நாமாக  வலியச் சென்று உஷ்ணப்படுத்தி அபசாரம் தேடிக்கொள்வது நியாயமா? - ஜி. பாஸ்கர், குரோம்பேட்டை.

அம்பிகையின் மீதுள்ள அளவு கடந்த பக்தியால் இந்த ஐயம் உங்கள் மனதில் தோன்றி  இருக்கிறது. தீபம் ஏற்றுவது எதற்காக என்பதை சிந்தித்துப் பாருங்கள்.  இறைவன் ஜோதி ஸ்வரூபமாக உள்ளான் என்ற கருத்தினை உணர்த்துவதே தீபம்  ஏற்றுவதற்கான தாத்பர்யம். அணு குறித்த ஆராய்ச்சியில் அணுவைப் பிளந்தபோது  அங்கே ஒரு பெரும் ஒளிவெள்ளம்தான் தோன்றியது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்த  நிகழ்வின்போது அளவிடமுடியாத உஷ்ணம் வெளிப்பட்டதால் அதனை பூமிக்கு அடியில்  மிகுந்த பாதுகாப்புடன் நடத்திப் பார்த்தார்கள்.

அந்தத் துகளுக்கு கடவுளின்  துகள் என்றுதான் பெயரிட்டார்கள். ஹிக்ஸ் போஸன் விளைவு என்று இயற்பியல்  ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை இது.  மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் ஒருசேர ஏற்றுக்கொள்கின்ற விஷயம் இறைசக்தி  என்பது ஒரு ஒளி வெள்ளம் ஆக காட்சியளிக்கிறது என்பதே. அந்த சக்தியானது  நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாத அளவில் உஷ்ணம் நிறைந்தது. அதனால்  தான் இறைவனின் திருவுருவங்களில் அக்னியை வைத்திருக்கிறார்கள் நம்  முன்னோர்கள். நடராஜப்பெருமானின் கரத்தினில் அக்னி இருக்கும்.  

பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலம் ஆக திருவண்ணாமலையை வழிபடுகிறோம். அம்பிகையின்  சிரசினைச் சுற்றிலும் ஜடராக்னி என்பதைக் காண இயலும். எல்லாவற்றிற்கும்  மேலாக இறைவனை ஒளி வெள்ளத்தில் தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கற்பூர  தீபாராதனை செய்து வழிபடுகிறோம். எங்கெல்லாம் அக்னி என்பது உண்டோ அங்கே  இறைசக்தியும் உண்டு. அம்பிகையை நம்மால் உஷ்ணமடையச் செய்ய இயலாது.  வெப்பத்தினை ஹீட் எனர்ஜி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

எனர்ஜி என்ற  ஆங்கில வார்த்தைக்கு சக்தி என்று பொருள். சக்தி என்றாலே அது அம்பிகையைக்  குறிக்கும். அவளே ஜோதி ஸ்வரூபம். அவளே அக்னி, அவளே அதிலிருந்து வெளிப்படும்  உஷ்ணசக்தி. ஆக காமாட்சி விளக்கினை ஏற்றுவதால் நாமாக வலியச்சென்று  அம்பிகையை உஷ்ணப்படுத்துகிறோம் என்ற எண்ணம் தேவையில்லை. விளக்கில்  ஏற்றப்படுகின்ற ஜோதியின் வழியாக நாம் அம்பிகையை கண் குளிர தரிசிக்கிறோம்  என்பதே அதன் உண்மையான தாத்பர்யம் ஆகும்.

* துர்க்காஷ்டமி என்ற நாளை விசேஷமாகச் சொல்கிறார்களே. துர்கைக்கும் அஷ்டமிக்கும் தொடர்பு உண்டா? துர்க்காஷ்டமி நாளின் மகிமை என்ன?  - ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை.

துர்க்கைக்கும் அஷ்டமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். சிறையில் இருந்த வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் அவதரித்த அதே நேரத்தில் நந்தகோபனின் மனைவி யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இறைவனின் ஆணைப்படி வசுதேவர் யாருக்கும் தெரியாமல் இந்த இரு குழந்தைகளையும் இடம்மாற்றி வைத்து விடுகிறார். குழந்தை பிறந்த செய்தியறிந்த கம்சன் சிறைக்கு வந்து வசுதேவரால் இடம் மாற்றி வைக்கப்பட்ட பெண் குழந்தையை வீசியெறிந்து கொல்ல முயற்சிக்கும்போது அவன் கையில் இருந்த குழந்தை உயரே பறந்து துர்க்கையாக காட்சியளித்தாள் என்பதை புராணத்தில் படிக்கிறோம்.

அப்பெடியென்றால் கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமியில்தான் துர்கையும் அவதரித்திருக்கிறாள் என்பது புலனாகிறது. துர்கை பிறந்தது அஷ்டமி திதியில் என்பதால் அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்தியில் வருகின்ற அஷ்டமி நாள் துர்க்காஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. துர்க்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று இந்த நாட்கள் போற்றப்படுகின்றன.

குறிப்பாக துர்க்காஷ்டமி என்றும் மஹாஷ்டமி என்றும் வீராஷ்டமி என்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரியின் எட்டாம் நாள் அபரிமிதமான சக்தியைப் பெற்ற நாள் என்பது அனுபவ பூர்வமாக பலரும் அறிந்த உண்மை. வராஹ புராணத்தில், அஞ்ஞான ரூபமான மஹிஷன் என்ற அசுரன் அம்பிகை எனும் ஞானத்தினால் அழிக்கப்படுவதால் துர்க்காதேவி ஞானசக்தி என்று போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக துர்க்காஷ்டமி நாளன்று விசேஷ யாகங்களைச் செய்து மனநிலை சரியில்லாதவர்களைக் கூட ஒருநிலைப்படுத்தி அவர்களை சரிசெய்த அதிசயங்களும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மகிஷாசுரனோடு யுத்தம் நடந்த காலத்தில் இந்த துர்க்காஷ்டமி நாளன்று, சண்ட - முண்டர்களையும், ரக்தபீஜன் எனும் அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்காதேவியின் நெற்றியிலிருந்து காளிதேவி தோன்றியதாகக் கூறுவார்கள். கொல்கத்தா போன்ற நகரங்களில் துர்க்காஷ்டமி நாளன்று மிக விசேஷமாக காளி பூஜை செய்யப்படுவதை இன்றும் காண்கிறோம். அன்றைய தினத்தில் துர்காதேவியின் 64 யோகினிகளும், பிராம்மி, மாஹேஸ்வரி,மஹாலக்ஷ்மி வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்த்ராணி, சாமுண்டா ஆகிய அஷ்ட சக்திகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக அம்பிகையின் உபாஸகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் துர்காதேவியின் மற்ற வடிவங்களான சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்ரீ, மஹாகௌரி, சித்திதாத்ரி ஆகிய நவதுர்க்கைகளும் ஒன்றாக இணைந்து துர்க்காஷ்டமி நாளன்று நமக்கு அருள்புரிவதாக ஐதீகம். இவர்களில் குறிப்பாக சித்திதாத்ரி தேவி அஷ்டமாசித்திகள் எனப்படும் அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகம்யா, ஈஸித்வம் வஷித்வா ஆகியவற்றை தன்னிடத்தே கொண்டவள். சிவபெருமான் மஹாசக்தியைப் பிரார்த்தித்து இந்த அஷ்டமாசித்திகளை அடைந்ததாக தேவிபுராணம் கூறுகிறது.

மஹிஷாசுரமர்த்தினி, துர்க்கமன் என்ற அசுரனை அழித்ததால் துர்க்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். சர்வ துக்கங்களையும் போக்கிடும் இந்த துர்க்கா தேவியானவள், அவளது உபாஸகர்களால் சூலினி துர்க்கா, வனதுர்க்கா, சாந்தி துர்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரீ துர்க்கா என்று விதவிதமான மந்திரங்களால் பலவிதமாகப் போற்றப்படுகிறாள். துர்க்கா பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்க்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன், புத்திர பௌத்திர விருத்தியையும், சுபிட்சத்தையும், தன விருத்தியையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான். சர்ப்பங்கள், ராட்சர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்க்கா பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்றும் தேவீ பாகவதத்தில் வியாஸ பகவான் கூறுவதே இதற்கு ஆதாரம்.

மேலும், துர்க்கா எனும் சப்தத்திலேயே தகாரம், உகாரம், ரேபம், சுகாரம், ஆகாரம் என்ற ஐந்து வர்ணங்கள் உள்ளன. இவற்றில் தகாரமானது அசுரர்களின் அழிவையும், உகாரம் விக்ன நாசனத்தையும், ரேபம் ரோக நிவாரணத்தையும், சுகாரம் பாபம் தொலைவதையும், ஆகாரம் பயம், சத்ரு இவர்களின் அழிவையும் குறிக்கும். துர்க்கையின் பெயரை உச்சரிப்பவன் மேற்சொன்ன பலன்களை அடைவான் என்பது நிதர்சனமான உண்மை. ஆக, சத்ரு (எதிரி), ரோகம் (வியாதி), ருணம் (கடன்), ஆவி போன்ற அமானுஷ்ய சக்திகளால் உண்டான தொல்லைகள், சித்தப் பிரமை, பில்லி, சூனியம், ஏவல், பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக ரோஷம், புத்திர தோஷம் இன்ன பிற குறைகளாலும் அவதிப்படுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் வருகின்ற சர்வசக்தி படைத்த இந்த துர்க்காஷ்டமி நாளன்று விரதம் இருந்து தங்கள் சக்திக்கு இயன்ற அளவில் துர்கைக்கு பூஜை செய்து வழிபட சர்வ தோஷங்களும் விலகி வாழ்வினில் வளம் பெறுவார்கள் என்பதே இந்த நாளின் மகத்துவமாகும்.

* திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கின்றனர். சாஸ்திரம் திருமணத்தை ரத்து  செய்து கொள்ளுதலை எப்படி பார்க்கின்றது? ஏன் விவாகரத்தை சாஸ்திரப்படி பாவம் என்கிறார்கள்? விளக்கமாக பதில் கூறுங்கள்.  
- அயன்புரம் த.சத்தியநாராயணன்

நிச்சயமாக. விவாகரத்து என்ற வார்த்தையை உச்சரிப்பது கூட பாவம் தான். இந்த வார்த்தை இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாக எல்லோர் மத்தியிலும் உலா வருகிறது. முதலில் விவாகம் என்றால் என்ன என்பதை சற்று விரிவாகவே காண்போம். இரு மனங்கள் இணையும் நிகழ்வே திருமணம். இந்தத் திருமணம் பிராம்மம், தெய்வம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசரம், காந்தர்வம், ராக்ஷசம், பைசாசம் என்று எட்டு வகைப்படும். ‘பிராம்மம்’ என்பது வேதங்களைக் கற்றறிந்து அவற்றை ஓதி வருபவனாகவும், நல்லொழுக்கம் நிறைந்தவனாகவும் உள்ள பிரம்மச்சாரியை தானாகவே அழைத்து வந்து தனது பெண்ணை தானம் செய்து தருவது ஆகும். அடுத்து வருகின்ற ‘தெய்வம்’ என்ற முறையில் தன் குடும்பத்திற்கு புரோகிதனாக இருப்பவருக்கு தனது மகளை தானம் செய்து தருகின்ற முறை.

 மூன்றாவதாக வருகின்ற ‘ஆருஷம்’ என்ற வகையைப் பொறுத்த வரை தான் செய்ய வேண்டிய யாகாதி கர்மத்திற்காக வரனிடம் சென்று ஒன்று அல்லது இரண்டு பசு மற்றும் காளைகளை வாங்கிக்கொண்டு தன் மகளை கல்யாணம் செய்து கொடுப்பது ஆகும். இந்த எட்டு வகைத் திருமணங்களில் நான்காவதாக வருகின்ற ‘பிரஜாபத்யம்’ என்ற வகையில் செய்யப்படுகின்ற திருமணமே சிறந்த முறை என்று சாஸ்திரம் அறிந்த பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டு பெரும்பாலும் நம் இந்திய தேசத்தில் இந்த முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையை சற்று விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால் அடுத்து வருகின்ற முறைகளையும் அறிந்துகொள்வோம். ‘ஆசரம்’ என்பது பெண்ணின் தந்தை கேட்கும் பணத்தை கொடுத்து பெண்ணை விலைகொடுத்து வாங்கி விவாகம் செய்து கொள்வதாகும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலித்து மனம் ஒத்து மணம் புரிதல் ‘காந்தர்வம்’.

இந்த காந்தர்வ முறை திருமணங்களை நாம் பல புராணங்களில் படிப்பதோடு தற்காலத்திலும் நடைமுறையில் உள்ளதைக் காண இயலும். ராக்ஷஸம் என்பது ஒருவன் தன்னுடைய உடல் வலிமையினால் ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகவும், அவள் அழும்போதும் அவளது உறவினர்களை அடித்தும் துன்புறுத்தியும் வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து கொள்ளும் முறை. கடைசியாக வருகின்ற பைசாசம் என்பது ஒரு பெண் தூங்கும்போதும், புத்தி சுவாதீனம் இல்லாதபோதும் அவளோடு புணர்ந்து திருமணம் செய்து கொள்வது. இந்த எட்டு வகைத் திருமணங்களில் பிரஜாபத்யம் என்று அழைக்கப்படுகின்ற நான்காவது வகைத் திருமணமே பெரும்பாலும் நமது இந்திய தேசத்தில் கடைபிடிக்கப்பட்டு வருவதால் அதைப் பற்றி சற்று தெளிவாக அறிந்து கொள்வோம்.

பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் தங்கள் குழந்தைகளின் ஜாதகங்களைப் பொருத்திப் பார்த்துப் பேசி, அதன் பின் பிள்ளை வீட்டார் நல்ல நாள் பார்த்து மஞ்சள், குங்குமம், புஷ்பம், பழம், தேங்காய், தாம்பூலம், பெண்ணிற்கு சேலை, அணிகலன் ஆகியவற்றுடன் பெண் வீட்டிற்குச் சென்று முறையாகப் பேசி முடிவு செய்ய வேண்டும். அதன் பின் இன்ன கோத்திரத்தைச் சேர்ந்த வருக்கு இந்த கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துத் தருவதாக பத்திரிகை எழுதி புரோஹிதரை சாட்சியாகக் கொண்டு சபையோர்கள் முன்னிலையில் மூன்று முறை உறுதிமொழி சொல்லி தாம்பூலம் மாற்றிக்கொள்ள வேண்டும். தொடர்நிகழ்வாக பிள்ளை வீட்டார் தந்த சேலை மற்றும் அணிகலனை பெண்ணிற்கு அணிவித்து ஆசிர்வதிப்பார்கள். திருமணத்திற்கு முன்னதாக இரு வீட்டினரும் பந்தல்கால் நட்டு நலங்கு முதலான வேடிக்கை நிகழ்வுகளை நடத்தி மனதளவில் மகிழ்ச்சியில் திளைத்திருப்பர்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற வார்த்தையை மெய்ப்பிக்கும் விதமாக திருமண நாள் அன்று அவரவரின் பொருளாதார வசதிக்கு ஏற்ப மணமேடையை அலங்கரித்து ஒவ்வொரு திசைக்கும் உரிய தேவதையை நினைத்து பூஜை செய்வார்கள். கிழக்கில் இந்திரனை தியானித்து அலங்கார விளக்கு ஏற்றி வைத்து ஆவாஹனம் செய்வார்கள். இந்த அலங்கார விளக்கு என்பது மரத்தால் ஆன பல்வேறு கிளைகளைக் கொண்ட விளக்கு ஆகும். இதன் ஒவ்வொரு கிளைகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்திருப்பார்கள். ஆயிரம் கண்ணுடைய இந்திரனாக இதனை பாவித்து வணங்குவர்.

தென்கிழக்கில் அக்னிதேவனை ஆவாஹனம் செய்யும் விதமாக குடவிளக்கு என்ற ஒன்றினை ஏற்றி வைத்திருப்பார்கள். இந்த குடவிளக்கு என்பது ஒரு குடத்தில் பச்சைநெல்உமியை நிரப்பி அதன் மீது மடக்கு எனும் பெரிய அகன்ற மூடியை வைத்து அதில் விளக்கெண்ணெய் ஊற்றி பெரிய திரியை இட்டு ஏற்றி வைக்க வேண்டும். தெற்கில் தர்மராஜனை நினைத்து தர்மசாஸ்திரம் கற்றறிந்த புரோஹிதரை பூஜிக்க வேண்டும். தென்மேற்கில் நிருருதி எனும் தேவதைக்கு ப்ரீதியாக ஒரு தோழியை நிறுத்தி வைக்க வேண்டும். வடமேற்கில் வாயு ப்ரீதியாக மாப்பிள்ளைத் தோழனை நிறுத்தி வைத்து அவன் கையில் விசிறி தந்து உபசரிக்கச் செய்ய வேண்டும்.

வடக்கில் குபேரன் என பணப்பையை வைத்திருப்பவரை அமரச் செய்ய வேண்டும். பெரும்பாலும் மொய் வசூலிப்பவர் அந்த இடத்தில் அமர்ந்திருப்பதைக் காண இயலும். அதனை அடுத்து வடகிழக்கில் ஈசானமூர்த்தியை எண்ணி அம்மியையும், குழவியையும் பூஜித்து அமைக்க வேண்டும். பின் நவகிரக ப்ரீதியாக நவதானியங்களை பாலிகைகளில் பரப்பி வைத்து பூஜிக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் வடிவாக அரசமரத்தின் கிளையை அரசாணிக்கால் என்ற பெயரில் நட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். முன் வைத்திருக்கும் பானைகளில் நீர் நிரப்பி அவற்றை முன்னோர்களாக பாவித்து மணப்பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏழு தேங்காய் அல்லது கும்பங்களை வைத்து சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்து வணங்க வேண்டும். மாப்பிள்ளைத் தோழனின் துணையுடன் மணமகனை மணமேடைக்கு வரவழைத்து விநாயகர் பூசை செய்வித்து உபநயனம் என்று அழைக்கப்படும் பூணூல் அணிவித்து மாப்பிள்ளைத் தோழனின் மூலமாக சம்சார பந்தத்தினை அறியச் செய்ய வேண்டும்.

இந்த சம்சார பந்தம் ஆனது தனது உயர்கல்வி மற்றும் ஆன்ம விசாரத்திற்கு தடையாக இருக்கும் என்று எண்ணி மாப்பிள்ளை காசியாத்திரை போக முடிவெடுத்துச் செல்வதாகவும், அதனைத் தடுக்கும் விதமாக மணமகள் வீட்டார் எதிர்கொண்டு வந்து நின்று சம்சார பந்தம் எந்த வகையிலும் ஆன்ம விசாரத்திற்குத் தடையாக இருக்காது, மாறாக கிரஹஸ்தாச்ரமத்தால் மட்டுமே ஒருவன் தனது வாழ்வில் பூரணத்துவம் அடைய இயலும் என்பதை எடுத்துச் சொல்லி மணமகனை அழைத்து வந்து கால் அலம்பி காலில் மிஞ்சி என்ற வெள்ளியினால் ஆன ஆபரணத்தை அணிவித்து அழைத்து வந்து மணமேடையில் அமரச் செய்வதாகவும் அடுத்த நிகழ்வு அமையும். அதனைத் தொடர்ந்து திருமணம் தடையின்றி நடக்க வேண்டி மணமக்களுக்கு கங்கணம் கட்டி விடுவார். மணமக்கள் இருவரும் தாங்கள் முதன்முதலாக சம்சார சாகரம் எனும் பெருங்கடலில் இறங்க உள்ளதால் அதற்கு முன்னதாக தங்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்து வணங்குவார்கள்.

தங்கத்தால் ஆன திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் முடித்து தேங்காயில் சுற்றி வைத்து உற்றார் உறவினர்களின் ஆசிர்வாதத்திற்கு எடுத்துச் செல்வர். எல்லோரும் ஆசிர்வதித்த திருமாங்கல்யத்திற்கு பூஜை செய்து அக்னியை மூட்டி அந்த அக்னியை சாட்சியாகக் கொண்டு கன்யாதானம் செய்வார்கள். கன்யாதானம் செய்யும்போது மணமகளின் தந்தை சொல்லும் வாக்கியம் மிகவும் முக்கியமானது. இந்த கோத்திரத்தைச் சேர்ந்த எனது குமாரத்தியை இந்த கோத்திரத்தைச் சேர்ந்த இந்த ஆண்மகனுக்கு அக்னிசாட்சியாய், அரசாணிக்கால் சாட்சியாய், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாய், சப்தரிஷிகள் சாட்சியாய், ஆகாயம் சாட்சியாய், பூமிதேவி சாட்சியாய் மற்றும் இங்கே வீற்றிருக்கும் உற்றார் உறவினர்கள் சாட்சியாய் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன் என்பதாக அந்த வாக்கியம் அமைந்திருக்கும்.

அதன்பின்னர் மணமகன் மணமகளைப் பார்த்து நீயும் நானும் நூறு ஆண்டுகள் இணைபிரியாமல் வாழும்பொருட்டு இந்த மங்கலநாணை உன் கழுத்தில் அணிவிக்கிறேன் என்ற பொருள் பொதிந்த மந்திரத்தைச் சொல்லி தாலி எனும் திருமாங்கல்யத்துடன் கூடிய மஞ்சள் கயிற்றினை கட்டி மூன்று முடிச்சு இடுவார். மணமகளின் நெற்றியிலும், நெற்றி வகிட்டிலும் மங்களகரமான குங்குமத்தை மணமகன் தனது மோதிரவிரலால் இட்டுவிடுவார். அதனைத் தொடர்ந்து சப்தபதி என்ற அதிமுக்கியமான ஏழு மந்திரங்களை உச்சரித்து மணமகன் தன் கைகளால் மணமகளின் காலைப் பற்றி ஏழு அடி எடுத்து வைத்து அவளது கால் விரல்களில் மெட்டியை அணிவிப்பார். ஒரு ஆண்மகன் ஆயிரம்பேர் கொண்ட சபையில் ஒரு பெண்ணின் காலைப் பற்றிக் கொண்டு அவளுக்கு உபதேசம் செய்யும் விதமாக சொல்கின்ற இந்த மந்திரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அதனைத் தொடர்ந்து மணமேடையில் ஆவாஹனம் செய்யப்பட்டிருக்கும் அத்தனை தேவதைகளையும் மூன்று முறை வலம் வருவதோடு மைத்துனனின் துணையுடன் ஹோம அக்னியில் பொரியிட்டு வணங்குவர். அதன்பின் மணவறையில் ஆவாஹனம் செய்த அத்தனை தேவதைகளையும் யதாஸ்தானம் செய்து பாலிகைகளைக் கரைத்து அரசாணிக்காலை அசைத்துவிடுவர். மேற்சொன்ன இத்தனை சடங்குகளையும் கொண்டு செய்யப்படுவதே நமது திருமண முறையாகும். இந்து மதம் மட்டுமல்லாது எல்லா மதத்திலும் திருமண பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்னால் பல்வேறு உறுதிமொழிகளை மணமக்கள் மேற்கொண்ட பின்னரே திருமணம் என்பது நடத்தப்படுகிறது. இப்பொழுது ஒரேயொரு முறை மீண்டும் யோசித்துப் பாருங்கள்.

 உற்றார் உறவினர்களின் ஆசிர்வாதத்தோடும், மணமேடையில் ஆவாஹனம் செய்யப்பட்ட தேவதைகளின் துணையோடும் நடத்தப்பட்ட அந்த திருமணத்தை ரத்து செய்வது என்பது சாதாரணமான விஷயமா? ஒருவருக்கு ஒருத்தி என்பது நமது கலாச்சாரம். இந்த கலாச்சாரத்திற்கு எதிராக ஆங்காங்கே ஒரு சில நிகழ்வுகள் நடக்கலாம். அதற்காக விவாகரத்து என்று எடுத்தவுடன் முடிவெடுத்து விடலாமா? ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தாங்கள் செய்த சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதுவும் சாதாரணமாக செய்த சத்தியம் அல்ல, ஆயிரம்பேருக்கு முன்னால் அக்னி சாட்சியாய் செய்த சத்தியத்தைக் காப்பாற்றவில்லை என்றால் அவர்கள் மனிதப் பிறவியே கிடையாது.
தற்காலத்தில் விவாகரத்து என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

மாமியார் கொடுமை, கணவனின் துன்புறுத்தல், ஒழுங்கீனமான நடவடிக்கைகள், பெண்ணிற்கு விருப்பமின்மை, பெண்ணை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதது, பெண்வீட்டாரின் தலையீடு என்று ஒவ்வொருவரும் தங்கள் தரப்பினை நியாயப்படுத்த பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள். ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் இரு தரப்பிலும் பொறுமையின்மை என்பதே விவாகரத்து என்ற முடிவிற்குக் காரணமாக அமைகிறது. திருமணத்தை நடத்துவதற்கு முன்னால் மணமக்கள் இருவருக்கும் மனப்பொருத்தம் இருக்கிறதா என்பதை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் முடிவெடுக்க வேண்டும்.

முடிவெடுத்த பின்னால் ஆராயக்கூடாது. திருமணத்திற்குப் பின்னர் எது நடந்தாலும் அது அவரவர் விதிப்பயனே என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று சொல்வதெல்லாம் அந்தக்காலம் என்று விதண்டாவாதம் பேசக்கூடாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு, மனைவியே மனிதனின் மறுபக்கம் என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட நாம் மேலே கண்டது போல இத்தனை விதமான சடங்குகளைச் செய்து, முப்பத்து முக்கோடி தேவர்களின் துணையுடன் உறுதிமொழி தந்து செய்துகொண்ட திருமணத்தை தங்களது சௌகரியத்திற்காக ரத்து செய்தல் என்பது சாஸ்திர விரோதம் மாத்திரமல்ல, விமோசனமே இல்லாத பாவச்செயலும் ஆகும். வேதமந்திரங்கள் முழங்க நடந்த திருமணத்தை ரத்து செய்வது என்பது அந்த வேதமாதாவையே அவமதிக்கும் செயல் ஆகும். வேதமாதாவை அவமதிப்பு செய்வது என்பது சந்தேகமே இல்லாமல் கடுமையான பாவச்செயலே.

இத்தகைய பாவச்செயல்கள் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது என்பதை எண்ணும்போது நெஞ்சம் பதைக்கிறது. இந்த பாவத்திற்கான சம்பளத்தை வருங்காலச் சந்ததியினர் அனுபவிக்க நேரிடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். விவாகரத்து செய்வது மட்டுமல்ல, அந்த வார்த்தையை வாயால் உச்சரிப்பது மட்டுமல்ல, அதனை மனதால் நினைப்பது கூட பாவம்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா