உள்ள(த்)தைச் சொல்கிறோம்



* ஒளிர்ந்த அட்சர சக்திகள்

அளவிலா ஆற்றலை அள்ளித்தரும் அட்சச் சக்திகளாய் நவராத்திரி நாயகியாம் அன்னை பராசக்தி திகழ்ந்து வருகிறாள். ‘அம்’ முதல் ‘க்ஷம்’ வரையிலான 51 அட்சர சக்திகளின் மூல எழுத்துக்களையும், ஓவியங்களையும் அவை குறித்த விளக்கங்களையும் இதழ் முழுவதும் முத்துச்சிதறலாய் ஒளிரச் செய்துவிட்ட தங்களின் தெய்வீக முயற்சி மகத்தானது. நவராத்திரி சிறப்பிதழுக்கு இந்த ஒரு நவரத்ன மகுடமாய் மின்னுகிறது. பாராட்டுக்கள். - அயன்புரம் த.சத்திய நாராயணன்,சென்னை-72.

முனைவர் செ. ராஜேஸ்வரி எழுதிய உலகளாவிய காளி கோட்பாடு கட்டுரை தெளிவு தந்து, நன்கு புரிய வைத்தது. எந்த கோயில்? என்ன பிரசாதம் பகுதியில் வன்னிவேடு பீட்ரூட் சாதம் முருகப் பெருமானுக்கு நிவேதித்தால், செவ்வாய் தோஷம் நீக்கும் என்ற தகவல் என்னை வியக்க வைத்தது. - சு.இலக்குமணசுவாமி, திருநகர், மதுரை.

முனைவர். மா.சிதம்பரம் அவர்களது வெற்றி தருவாள் கொற்றவை நல்லாள் என்ற கட்டுரை அருமையாக இருந்தது. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
 
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்  தனிச்சிறப்பாக பி.என்.பரசுராமன் ஞானத்தில் ஒளிர்கிறது. ‘அங்கதன்’ கதாபாத்திரத்தின் பெருமையை அலசித் தந்து ஆச்சரியப்பட வைத்த அவர் ராமர் பட்டாபிஷேகத்தில் வாளை அங்கதன் சுமந்த பெருமையை தொகுத்த விதம் ஆனந்தமடைய வைத்தது. - ஆர்.ஜே.கலியாணி, மணலிவிளை.

 ‘நவராத்திரி’க்கு அட்வான்ஸ் விழா துவக்கியதுபோல் அமைந்துள்ளது கொலுப்படிகள் கூறும் தத்துவம் குறித்த தொகுப்பு!  ஆறுபக்க விளக்கமும் படங்களும் ஆத்மாவை நிரப்பி விட்டதோடு ஆனந்த தாண்டவம் ஆட வைத்தது.
- ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி.

 ‘சக்தி’ வழிபாடு குறித்த வரிசைப்பாடு அருமை. ‘அறிதுயில் நாட்கள்’ என்று நவராத்திரி குறித்த இரவின் விழிப்பிற்கு தந்த விளக்கம் அபாரம்.- ஆர்.விநாயகராமன், திசையன்விளை.

திரஸ்கரணீ தேவி, தியாகராஜப் பெருமானின் ரகசியங்களைத் திரை வடிவில் காக்கும் தேவி என ஆன்மிக பலன் வாயிலாக அறிய முடிந்தது. - இராம.கண்ணன், திருநெல்வேலி.

 அட்சர சக்திகள் ஐம்பத்தொன்றும் சரி, பஞ்ச பஞ்சிகா (இருபத்தைந்து) தேவியரின் படங்களோடு சேர்ந்த விளக்கங்களை அழகுற எழுதிய ந.பரணிகுமார் அவர்களுக்கு நன்றி. பாதுகாக்க வேண்டிய நவராத்திரி பக்தி ஸ்பெஷல் இது.
- சுகந்தி நாராயண், வியாசர் காலனி.

 உள்ள(த்)தைச் சொல்ல ஒளிய  வேண்டியதில்லை. ஆன்மிகம் பலன் இதர கதைப் புத்தகங்கள்போல படித்துவிட்டு வீசி விட வேண்டியது அல்ல. கருத்துக் கருவூலம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். புதுப்புது அர்த்தங்கள்.
-  காவிரி புனிதர் அரிமளம். R.தளவாய் நாராயணசாமி, பெங்களூர்-76.

 ‘ஆன்மிகம் பலன்’ நவராத்திரி பக்தி ஸ்பெஷல் அம்மனின் அற்புதங்களை வண்ணப் படங்களோடும், ‘கொலுப்படிகள் கூறும் தத்துவங்களையும் எங்களுக்கு அளித்து ஆன்மிகக் கடலில் ஆழ்த்தியிருப்பது வாசகர்களின் பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியதாகும். - எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

 நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது, அதன் தத்துவம் என்ன? அம்பாள் காட்டும் சௌபாக்கிய தண்டினீ முத்திரையின் விளக்கம் என்ன என்பது பற்றியெல்லாம் ‘அறிதுயில் நாட்கள்’ என்ற தலைப்பில் அலசி ஆராய்ந்திருந்தது உண்மையை எடுத்துரைத்தது - மு.மதிவாணன், அரூர்-636903.