ராஜா கணக்கு தப்பாது!



இசைஞானியின் ஆங்கில ஹிட் பாடல்!

‘‘இளையராஜா ஒரு முழுமையான ஆங்கிலப்படத்துக்கு இசையமைப்பது இதுதாங்க முதல் முறை. அந்தப் பெருமை என்னோட ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ படத்துக்குத்தான்!’’  உற்சாகம் பொங்கப் பேசுகிறார் ஆஸ்திரேலியத் தமிழர் ஜூலியன் கரிகாலன். ஆஸ்திரேலியாவுக்குப் போனோம்... வேலை பார்த்தோம்... சொத்து பத்து சேர்த்தோம் என்று நின்று விடாமல் அந்த ஊர் சினிமாவிலும் ஒரு கை பார்க்க இறங்கிவிட்டார் இந்த மனிதர். அதுவும் நம் பெருமைக்குரிய இசைஞானியை ஆஸ்திரேலிய சினிமா ரசிகர்களுக்குக் காட்டி ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார்!



‘‘இந்திய இளைஞனுக்கும் ஆஸ்திரேலியப் பெண்ணுக்கும் இடையில மலரும் காதல்தாங்க கதை. படம் பேரே ‘லவ் அண்ட்  லவ் ஒன்லி’. காதல்னா நமக்கெல்லாம் ராஜா சாரின் ட்யூன் ஏதாவதுதானே மனசில் ஓடும்? இந்தப் படத்தை யோசிச்சதுமே எனக்குள்ளேயும் ராஜா சார்தான் ஓடினார். ஆனா, ரொம்பவே லோ பட்ஜெட்டுக்குள்ளே நான் சிக்கியிருந்தேன். அவரை அணுக முடியுமானு தயக்கம். ‘புதுசா படம் பண்றவங்களுக்கு என் ஆதரவு உண்டு’னு அவர் ஒருமுறை சொன்னது நினைவிருந்தது. அதனால தைரியமா பேசிப் பார்த்தேன். ஆர்வமா இசையமைச்சுக் கொடுத்தார்.

‘Am I in love’னு ஒரு பாட்டு... இப்ப அது யூ டியூபில் செம ஹிட். ‘இப்படி ஒரு ஜீனியஸ் ஹாலிவுட்டில் கூட இல்லைனு உலக மக்கள் எல்லாம் பாராட்டுறாங்க. அந்தப் பாட்டை முதல்ல சென்னைப் பாடகி ஒருத்தங்கதான் பாடினாங்க. ராஜா சாருக்கு திருப்தி இல்ல. ‘இது ஆங்கிலப் படம். அந்த நாட்டுப் பாடகி பாடினால்தான், ஆஸ்திரேலியாவின் ஆங்கில உச்சரிப்பு சரியா கிடைக்கும்...’னு சொன்னார். உடனே ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் பாடகியான Rachael Leahcarஐப் பிடிச்சோம்.

தன் பேரையே தலைகீழாக்கி சர் நேமா பயன்படுத்துற வித்தியாசப் பொண்ணு. 90 சதவீதம் பார்வையில்லாதவங்க. அவங்க பாடினப்போ பாட்டுக்கு வேற ஃபீல் கிடைச்சது. ராஜா கணக்கு தப்பாதுனு அப்பதான் புரிஞ்சுது!’’ என்கிற ஜூலியன்தான் இந்தப் படத்தின் இயக்குநர் கம் தயாரிப்பாளர். ‘‘என் சேமிப்பு மொத்தத்தையும் போட்டு மேற்கொண்டு கடனும் வாங்கித்தான் படத்தை முடிச்சிருக்கேன். ஹீரோவுக்காக 200 இந்திய முகங்களைத் தேடி, சலிச்சு எடுத்து ரோஹித் காலியானு ஒரு பஞ்சாப் பையனைக் கொண்டு வந்திருக்கேன்.

ஆஸ்திரேலிய  நடிகையான ஜியார்ஜியா நிகோலஸ்தான் ஹீரோயின். இந்தப் படத்துக்கு ஒரு ஹாலிவுட் தரத்தை அவர் கொடுத்திருக்கார். இதில் காதல் மட்டுமில்ல... படிக்கவும் வேலை பார்க்கவும் ஆஸ்திரேலியா போகிற இந்திய இளைஞர்கள் சந்திக்கும் ஊரறியாத சிக்கல்களை, சங்கடங்களை உலகத்துக்காகத் திறந்து விட்டிருக்கேன்.

சான் ஃப்ரான்ஸிஸ்கோ குளோபல் திரைப்பட விழாவில் படத்தைத் திரையிட்டாச்சு. ‘Am I in love...’ பாடலுக்காக அவங்க இசைஞானிக்கு விருதும் வழங்கினாங்க. ஜூலையில் சிட்னி முழுக்க படம் ரிலீஸ். அமெரிக்காவிலும் வெளியிட  ஒப்பந்தம் ரெடியாகிட்டிருக்கு. இளையராஜாவால ஆசீர்வதிக்கப்பட்ட நானும் என் படமும் ஜெயிச்சே தீருவோம்!’’

-பிஸ்மி பரிணாமன்