நியூஸ் வே



* அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பயணத்துக்கான தென் மாவட்ட ரயில்களின் டிக்கெட்கள், ஐந்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து விட்டன. இதில் 75 சதவிகித டிக்கெட்கள் ஆன்லைனில் புக் செய்யப்பட்டுள்ளன.



* ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு இந்திய சென்சார் போர்டு கொடுத்தது 89 கட்கள். கோர்ட்டுக்குப் போய் போராடி படத்தை ரிலீஸ் செய்தார்கள். பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய, அந்த நாட்டு சென்சார் போர்டு 100 இடங்களில் கத்தரி போடச் சொன்னதாம். ‘‘இவ்வளவு காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்வதில் அர்த்தமில்லை. படம் சொல்லும் மெசேஜ் ரசிகனுக்குப் போய்ச் சேராது. வருமானம் போனாலும் பரவாயில்லை என அங்கு ரிலீஸ் செய்யவில்லை’’ என்கிறார் படத்தின் இயக்குனர் அபிஷேக் சௌபே. படம் பாகிஸ்தானுக்கும் சேர்த்து இங்கேயே நிறைய வசூல் செய்துவிட்டது.

* மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலை 6 கட்டங்களாக பிரித்து நடத்தியதால், தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மீது கடும் கோபத்தில் இருந்தார், முதல்வர் மம்தா பானர்ஜி. தேர்தலில் மீண்டும் வென்று முதல்வர் ஆனதும், தேர்தல் ஆணையருக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அனுப்பினார் மம்தா, அது, மேற்கு வங்கத்தின் ஆறு ரக சுவையான மாம்பழங்கள் அடங்கிய கூடை. ஆறு கட்டத் தேர்தலை ஞாபகப்படுத்தவோ!  

* இந்தியாவில் அன்னிய முதலீடு குவிகிறது, வேலைவாய்ப்பு வெட்டி முறிக்கிறது என புரூடா விடுபவர்கள் தலையில் நங்கென்று குட்டியிருக்கிறது மகாராஷ்டிர பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டிருக்கும் ஒரு தகவல். மும்பையில் ஐந்தே ஐந்து போர்ட்டர் வேலைக்கு 2424 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. இதில் 984 பேர் பட்டதாரிகள், 253 பேர் முதுகலை பட்டதாரிகள், 5 பேர் எம்.ஃபில் ஆராய்ச்சி முடித்தவர்கள். இத்தனை பேர் போட்டி போடும் இந்த வேலைக்கு அடிப்படைத் தகுதி, நாலாம் கிளாஸ் பாஸ்!

* பாலிவுட் ஹீரோவும் இயக்குநர் ஏக்தா கபூரின் தம்பியுமான துஷார் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதில் என்ன இருக்கு என்கிறீர்களா? துஷார் இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. தனது உயிரணுவைக் கொண்டு வாடகைத் தாய் மூலம் இந்த ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து சிங்கிள் அப்பாவாகியிருக்கிறார்.

லக்‌ஷ்யா எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் குழந்தையே ஜிதேந்திரா குடும்பத்தின் முதல் பேரன். அயல் நாடுகளில் இப்படிப்பட்ட குழந்தைகளெல்லாம் ‘சகஜமப்பா’தான். இந்தியா போன்ற சென்டிமென்ட் நாட்டில் துணிச்சலாக இதைத் துவக்கி வைத்திருக்கும் பெருமை துஷாருக்கு!

* இந்த முறை கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் வருத்தமான ஹைலைட்... அர்ஜென்டினாவின் ஹீரோ மெஸ்சியின் ஓய்வு அறிவிப்பு! 2014 உலகக் கோப்பை, 2015, 2016ல் கோபா கால்பந்து என அனைத்திலும் ஃபைனல் தோல்வி துரதிர்ஷ்டம் அர்ஜென்டினாவைத் துரத்த, விரக்தியில் இந்த முடிவை எடுத்துவிட்டார் மெஸ்சி. இப்போது, ‘திரும்பி வா தங்கமே’ என உருக ஆரம்பித்திருக்கிறார்கள் உலக கால்பந்து ரசிகர்கள்!

இதன் உச்சமாக அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரின் மேயர், அங்குள்ள ரிவர் பிளேட் கடற்
கரையில் வெண்கல மெஸ்சி சிலையை வைத்துவிட்டார். மெஸ்சி ரசிகர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தும் இடமாகி விட்டது அது. அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மாக்சி கூட, மெஸ்சியிடம் ஓய்வு முடிவை திரும்பப் பெறக் கோரியுள்ளார்!

* ‘கூகுளில் தேடினால் எல்லாம் கிடைக்கும்’ என்பார்கள். இதை சோதித்துப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி அதிர்ந்துவிட்டார். ‘இந்தியாவில் வரிகள் கட்டுவது எப்படி?’ என தேடியபோது 7 கோடி பக்கங்கள் வந்தன. அவருக்கு சந்தோஷம். அடுத்து, ‘இந்தியாவில் வரி கட்டாமல் தவிர்ப்பது எப்படி?’ எனத் தேடியபோது மோடி அதிர்ந்துவிட்டார். 12 கோடி பக்கங்கள் வந்தன. உயர் அதிகாரிகள் கூட்டத்தில் இதை விவரித்து, வரி விஷயத்தில் கிடுக்கிப்பிடி போடச் சொல்லியிருக்கிறார் மோடி.

* ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்... பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற பிரசாரத் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், ‘‘அந்த ஸ்லோகன் எனக்குச் சொந்தமானது. அதை மத்திய அரசு திருடிவிட்டது’’ என்று குற்றம் சாட்டி இருக்கிறார் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் செட்னாபதி.

‘‘கடந்த 1999ல் நான் எழுதிய இந்த வரிகளை மாநில அரசு பிரசாரத்துக்குப் பயன்படுத்தியது. அதை எனது அனுமதி இல்லாமல் மத்திய அரசு பயன்படுத்துகிறது. இதற்காக எனக்கு பணமோ, விளம்பரமோ அவசியமில்லை. இந்த வரிகள் என்னுடையதுதான் என்ற அங்கீகாரம் போதும்!’’ என்கிறார் செட்னாபதி.

* இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் திடீர் ஹிட் அடித்தது இ.சி.இ பிரிவு. டாப் 7 இடங்களைப் பிடித்த மாணவர்களில் நான்கு பேர் இந்தப் பிரிவில் சேர்ந்தனர். கம்ப்யூட்டர் சயின்ஸும் இதே அளவுக்கு மவுசு பெற்றிருக்கிறது.

* விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாக இருந்த தமிழினி  எழுதிய ‘கூர்வாளின் நிழலில்’     நூல் சிங்களத்தில்  மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது. போருக்குப் பிறகு தமிழில் இருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள முதல் புத்தகம் இது. தமிழ்சிங்கள சமூகங்கள் இடையேயான பரஸ்பர புரிதலுக்காக இந்த முயற்சி!