ஸ்வாதியை கொன்றது யார்?



‘‘பச்சை சட்டையும், கறுப்பு பேன்ட்டும் போட்டவன்தான்’’ என்கிறார்கள். உண்மையில் அவன் மட்டும்தானா? மக்கள் பலர் புழங்கும் ஒரு ரயில் நிலையத்தில், பத்து நிமிடம் வாக்குவாதம் செய்து, சாவகாசமாக அரிவாளை எடுத்து வெட்டிவிட்டு, சுவரேறிக் குதித்து நடந்து சென்ற கொலைகாரனைப் பார்த்து குறைந்தபட்சம் சத்தம்கூட போடாமல் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?



உடுமலைப்பேட்டையில் நடுரோட்டில் சங்கரையும், கௌசல்யாவையும் வெட்டி வீழ்த்தியபோதும், ஓசூரின் பிரதான வீதியில் கொள்ளையர்களோடு போராடி ஏட்டு முனுசாமி கத்திக்குத்து பட்டு உயிரிழந்தபோதும்கூட இப்படித்தான் வேடிக்கை பார்த்தார்கள். செயின் பறிப்பு, மிரட்டல், பாலியல் வன்முறை என கண்முன் நடக்கும் எல்லாக் குற்றங்களையும் ரசித்தபடி, பயந்தபடி, பதற்றப்பட்டபடியே கடந்து செல்கிறது இந்த சமூகம். வீட்டில் தன்னைக் காக்க ஒரு குடும்பம் இருக்கிறது என்று நம்புகிற பெண், பொதுவெளியில் தனக்குப் பாதுகாப்பாக இந்த சமூகம் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் வெளியே வருகிறாள். ஆனால், எதையும் வேடிக்கை பார்க்கும் மௌன சமூகமாக நாம் ஏன் மாறிப் போனோம்?

பொதுப் பிரச்னைகளுக்காகப் போராடி, உயிர் நீத்து, சரித்திரமாக மாறிப் போன மனிதர்கள் வாழ்ந்த இந்த நிலத்தில் ஏன் இந்த மாற்றம்?  ‘‘இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். தன் குடும்பம், தன் வாழ்க்கை, தன் பாதுகாப்பு என வாழ்க்கை மிகவும் சுருங்கி விட்டது. மனித மதிப்பீடுகள் மாறிவிட்டன. தனி குடும்பங்கள் அதிகரித்து, உரையாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இல்லாமல் போய்விட்டன.

மற்றவர்களைப் பற்றி கவலையே படாத வாழ்க்கையை நாம் பிள்ளைகளுக்கு பயிற்றுவித்து வளர்க்கிறோம்’’ என்கிறார் பல்வேறு பொதுப் பிரச்னைகளுக்காக களத்தில் நிற்கும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ். ‘‘நான்கைந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பொது இடத்தில் தண்ணீர் குடித்துவிட்டு வாட்டர் பாக்கெட்டை வீசுகிறார்கள். ‘இப்படி வீசாதே தம்பி’ என்று சொன்னால், ‘உனக்கென்ன... உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ’ என்கிறார்கள்.

30 லட்ச ரூபாய் காரில் வருகிற ஒருவர், சிக்னலில் நிற்கும்போது ஜன்னலைத் திறந்து நடுரோட்டில் எச்சிலைத் துப்புகிறார். நம் வாழ்க்கை முறையே மற்றவர்களைப் பற்றி கவலைப்படாததாக மாறியிருக்கிறது. சமூக ஒழுக்கம், அறம், கடமை உணர்ச்சி எதுவும் இல்லாத சமூகமாக நாம் திட்டமிட்டு மாற்றப்படுகிறோம். இதன் நீட்சிதான் குற்றங்களை வேடிக்கை பார்க்கிற மனோபாவம்.

இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. போலீஸ் என்றாலே நம் மக்களுக்கு அச்சம் வருகிறது. காவல்துறையை மக்கள் வெறுக்கிறார்கள். வேறு வழியே இல்லாவிட்டால் மட்டுமே மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகிறார்கள். ஒரு குடும்பம், தன் மகளின் ஆபாசப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி விட்டார்கள் என்ற பரிதவிப்போடு காவல் நிலையத்துக்குப் போகிறது. கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சைபர் கிரைம் வரை அலைக்கழிக்கிறார்கள். அவநம்பிக்கையாகப் பேசுகிறார்கள்.

ஒரு ஏட்டு, ‘2000 ரூபாய் பணமும் மொபைலும் வாங்கித்தா’ என்று பேரம் பேசுகிறார். இந்த லட்சணத்தில்தான் காவல்துறை செயல்படுகிறது. இந்த சூழல் மாற வேண்டுமானால் காவல்துறை திறந்த மனதோடு மக்களிடம் வரவேண்டும். நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மாமூல் இல்லாத, நேர்மையான, மக்களை அவமானப்படுத்தாத, அலைக்கழிக்காத, அரசியல்வாதிகளின் ஆளுமை இல்லாத, மக்களுக்கான இடமாக காவல் நிலையங்கள் மாறவேண்டும்.

அவுட் போஸ்ட்டில் இருந்து டி.ஜி.பி. அலுவலகம் வரை இதற்கான வேலைகள் நடக்க வேண்டும். போலீஸ், லோக்கல் மாஃபியா, அரசியல்வாதிகள் தொடர்புகள் களையப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் தைரியமாக காவல்துறையோடு கைகோர்த்து நிற்பார்கள். பொது இடத்தில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்பார்கள்...’’ என்கிறார் அவர். நம் ஊரில் மக்கள்தொகை உயர்ந்த அளவுக்கு காவல்
துறையினரின் எண்ணிக்கை கூடவில்லை.

பணிச்சுமை காரணமாக காவல்துறையின் இயல்பே மாறிவிட்டது. புகார் தர வரும் மக்களையும், குற்றவாளிகளையும் ஒன்று போலவே பார்க்கின்றன போலீஸ் கண்கள். இதன் காரணமாகவே மக்கள் குற்றங்களைக் கண்டு விலகி ஓடுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் கவலை தொனிக்கப் பேசினார் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் முன்னாள் முதல்வர் வீ.சித்தண்ணன். ‘‘இந்திய அரசியல் மற்றும் குற்றவியல் சட்டங்கள், பொதுமக்களுக்கு பல்வேறு அதிகாரங்களைத் தந்திருக்கின்றன.

‘ஓரிடத்தில் குற்றம் நடந்தாலோ, நடக்க இருந்தாலோ, நடந்து கொண்டிருந்தாலோ, மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பது கடமை’ என்கிறது சி.ஆர்.பி.சி.யின் 39வது பிரிவு. அதுமட்டுமல்ல, குற்றம் செய்பவரை காவல்துறைதான் வந்து கைது செய்ய வேண்டும் என்றில்லை. ‘பிடியாணை தேவைப்படாத குற்றங்கள் நடக்கிறபோது குற்றவாளியை பொதுமக்களே கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கலாம்.

அதற்குத் தேவைப்பட்டால் பலப் பிரயோகமும் செய்யலாம்...’ என்கிறது சி.ஆர்.பி.சி.யின் 43வது பிரிவு. ‘ஒரு நபர் தன்னையோ, தனக்கு அருகில் நிற்கும் எவரையோ, கொலை செய்யவோ, கொடுங்காயம் ஏற்படுத்தவோ, வல்லுறவு கொள்ளவோ, இயற்கைக்கு மாறான சூழலுக்கு உட்படுத்தவோ, கடத்தவோ, ரகசியமாக அடைத்து வைக்கவோ, ஆசிட் ஊற்றவோ முயன்றால், தற்காப்பு உரிமையின்படி கொலையும் செய்யலாம்’ என்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி.) 100வது பிரிவு.

ஸ்வாதியைக் கொலை செய்ய முயன்றவனைப் பிடிக்கும் முயற்சியில் குற்றவாளி கொல்லப்பட்டிருந்தால் கூட சட்டப்படி அது கொலைக்குற்றம் ஆகாது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பொதுமக்கள் இதுபோன்ற தங்கள் கடமைகளில் இருந்து தவறினால் தண்டனை உண்டு. நம் நாட்டில் தண்டனை இல்லை. வெறும் கடமையாக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சலுகைகள் தரப்பட்டும், ஏன் அதைப் பயன்படுத்த மக்கள் அஞ்சுகிறார்கள்? இந்தக் கேள்விக்கு இரண்டு காரணங்களை பதிலாகச் சொல்லலாம். ஒன்று, காவல்துறை. மற்றொன்று, நீதித்துறை.

புகார் கொடுப்பவரையே குற்றவாளிகளைப் போல அலைக்கழிப்பது, அவமானப்படுத்துவது. ஒரு வழியாக சார்ஜ்ஷீட் போட்டு கோர்ட்டுக்கு அனுப்பினால் அங்கே வாய்தா மேல் வாய்தா கொடுத்து, ‘ஏன்தான் இதில் தலையிட்டோமோ’ என்ற மன உளைச்சலை உருவாக்கி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் குற்றவாளிகளின் மிரட்டல்.

எல்லோருக்கும் இதில் பங்கிருக்கிறது. ஊடகங்கள் ரவுடிகளை ஹீரோவாக சித்தரிப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சியைப் பயன்படுத்தும் ரவுடிகளை வெளியேற்ற வேண்டும். பள்ளியில் இருந்து குழந்தைகளுக்கு தற்காப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புக் கல்வியைக் கொண்டு வரவேண்டும். காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் அனைத்திலும் மனோபாவம் மாற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலானவர்கள் மக்களே என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும்.

அப்போதுதான் நாம் எதிர்பார்க்கிற மாற்றம் வரும்’’ என்கிறார் சித்தண்ணன். மக்களே! தேசம் பற்றி எரிகிறபோது எனக்கென்ன என்று இருந்தால், அந்த தீ உங்கள் தேகத்திலும் பற்றிக் கொள்ளும். மௌனம் கலையுங்கள். குறைந்தபட்சம் குற்றங்களைக் கண்டித்து குரலையாவது உயர்த்துங்கள்!

ஸ்வாதியை கொலை செய்ய முயன்றவனைப் பிடிக்கும் முயற்சியில் குற்றவாளி கொல்லப்பட்டிருந்தால் கூட சட்டப்படி அது கொலைக்குற்றம் ஆகாது.

 வெ.நீலகண்டன்