குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

அழியாத கோலங்கள் : சாருஹாசன்

(சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை  600 004. விலை ரூ.150/ தொடர்புக்கு: 72990 27361) சென்னை புத்தகக் கண்காட்சி விற்பனையில் முன்னணியில் நின்ற புத்தகங்களில் ஒன்று. சாருஹாசனின் கனிந்த அனுபவத்தில், ‘குங்குமம்’ வார இதழில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள். வானத்திற்குக் கீழான எல்லா பிரச்னைகளையும் கொண்டு வந்து நிறுத்தி எடை போட்டு சொல்கிறார்.



அன்றாடம் புழங்கக் கூடிய எளிய மொழியில், சினிமா, சட்ட நுணுக்கம், அவரது வயதையொட்டிய தமிழக வரலாறு என உயிரோட்டமாக நிகழ்த்திப் போகிறார். எதையும் திரித்துக் கூறாமல் அப்படி அப்படியே பேசும் உண்மை நூலெங்கும் வெளிப்படுகிறது. நகைச்சுவைதான் அவருக்குக் கவச குண்டலம். தம்பி கமல்ஹாசன் வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போதெல்லாம், நாம் பக்கத்தில் இருந்து பார்க்கிற அழகு. மனோகரின் ஓவியங்கள் கருப்பு வெள்ளையில் வேறு திசை காட்டுகின்றன. கஷ்டம் இல்லாமல் படித்துக் கையாள முடிகிற புத்தகம்.

புதுசு ரவுசு!

‘கல்யாணப் பத்திரிகை’ என்பதற்கு முழுமையான அர்த்தம் சேர்த்திருக்கிறார் இயக்குநரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜ். நாற்பது பக்கங்களில் ஒரு சிற்றிதழ் போலவே ரெடியாகியிருக்கிறது அவரின் திருமண அழைப்பிதழ். தன் பழைய காதலை மனைவியாகப் போகிறவளுக்கு மறைக்காமல் சொல்வது போல ஒரு நீள சிறுகதையே அதில் எழுதப்பட்டிருக்கிறது. ஜாதிக் கொடுமைகள் தாளாது ஜோடியாகத் தற்கொலையின் விளிம்பு வரை சென்று வந்த காதல் அது. நிஜத்தின் வீச்சு நெஞ்சை உருக்குகிறது. பொதுவாக, பலரும் திருமணப் பேச்சின்போதோ... முதலிரவிலோ... மனைவியிடம் சொல்லும் காதல் Confession, இங்கே அழைப்பிதழ் வழியே அனைவர் பார்வைக்கும் வந்தது புதிது, அரிது!

டெக் டிக்!

இதுவரை ‘கடவுள் இல்லை’ என்றவர்கள் எல்லாம் சமூக நீதியையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி நல்லதையே செய்திருக்கிறார்கள். ஆனால், மொபைல் உலகில் இன்று ‘கடவுள் இல்லை’தான் நம்பர் ஒன் வில்லன். ஆண்ட்ராய்டு மொபைல்களைத் தாக்கி அதன் பாதுகாப்பு அம்சங்களை காலி பண்ணும் வைரஸ்தான் ‘Godless’. ட்ரெண்ட் மைக்ரோ எனும் மொபைல் பாதுகாப்பு நிறுவனம் இந்த வைரஸைக் கண்டுபிடித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக பழைய ஆண்ட்ராய்டு போன்களில் அட்டகாசம் செய்து வரும் ‘Godless’, இந்தியாவில் மட்டும் 4 லட்சம் ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கிவிட்டதாம்! அடக் கடவுளே!

நிகழ்ச்சி... மகிழ்ச்சி!

‘ரெமோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு... ஏவி.எம் சரவணன், இயக்குநர்கள் ஷங்கர், மோகன்ராஜா, பி.சி.ஸ்ரீராம், அனிருத், கீர்த்தி சுரேஷ் என கலர்ஃபுல் வி.ஐ.பிக்களால் நிரம்பியது அரங்கம். ‘‘ ‘ரஜினி முருகன்’ பார்த்துட்டு லிங்குசாமிகிட்ட கீர்த்தி சுரேஷை ரொம்பவே பாராட்டினேன். வொர்க் பிஸியினால கீர்த்தியை நேரடியா விஷ் பண்ண மறந்துட்டேன். சிவகார்த்திகேயன் அட்ராக்ட்டிவான ப்ராஜெக்ட்ஸ் பண்றார். அடுத்தடுத்து அவர் பெரிய உயரத்துக்குப் போவார்!’’ என ஷங்கர் பேசியதுதான் விழாவின் ஹைலைட்!

கபாலி பிரியாணி

‘கபாலி’ ரிலீஸ் அன்று பெங்களூரு to சென்னை விமான ட்ரிப் அறிவித்த அதே ஏர் ஏஷியா நிறுவனம்தான் இப்போது கபாலி பிரியாணியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மலேசியா to சென்னை பறக்கிற மக்கள் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் இந்த ஸ்பெஷல் பிரியாணி, சுத்த சைவ உணவு. பிரியாணிக்கான மலேசிய ரெசிபியையும் தமிழ்நாட்டு ரெசிபியையும் கலந்து, பாதி புலவ், பாதி பிரியாணியாக செய்யப்பட்டிருப்பதால்தான் இந்தப் பெயர்!

சிற்றிதழ் Talk

‘‘மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது மேல்நிலைக் கல்வியைக் கேலிக்கூத்தாக்கி விடும். வணிகமயமான பயிற்சிக் கூடங்கள் பல்கிப் பெருகிவிடும். ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்குத் தயாராக, ராஜஸ்தானின் கோடா என்ற நகரில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கொடூர நடைமுறைகளால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் பதிவாகியிருக்கிறது.

பொது நுழைவுத்தேர்வு பல ‘கோடா’க்களை நாடு முழுவதும் உருவாக்கிவிடும். மருத்துவக் கல்வியின் தரத்தைப் பேணும் கடமை இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குத்தான் இருக்கிறது. சகல அதிகாரமும் இருப்பதால் சிலர் அதன் உறுப்பினர் ஆவதற்கு பல கோடிகள் செலவழிக்க முற்படுகின்றனர். உறுப்பினரான பின் கோடிகளை மீட்பதோடு மேலும் சம்பாதிக்க முற்படுவதுதான் நடைமுறையாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் கிரிக்கெட் வாரிய ஊழலில் அக்கறையைக் காட்டுவது போல, மருத்துவக் கவுன்சிலின் செயல்பாட்டினையும் நேர்படுத்த முயல வேண்டும்.’’ கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன், ‘புதிய ஆசிரியன்’ ஜூன்2016 இதழில்...

யு டியூப் லைட்!

இது தணிக்கை அதிகாரிகளுக்கும் சினிமாக்காரர்களுக்கும் லடாய் ஆகும் சீஸன் போல! பாலிவுட்டில் ‘உத்தா பஞ்சாப்’ போலவே மல்லுவுட்டில் ‘கதகளி’ படமும் தணிக்கை பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறது. இதன் க்ளைமேக்ஸில் கதாநாயகன் தன் கதகளி உடைகளைக் களைந்து நிர்வாணமாக நடந்து போவது போலக் காட்சி உள்ளது. அதை நீக்கினால்தான் படத்தைத் திரையிட முடியும் என சென்சார் கறார் காட்டுகிறது. அறிமுக இயக்குநர் சிஜோ கன்னனாய்கலுக்காக மலையாள திரைத்துறையே தர்ணா செய்தும் பலனில்லாமல் கோர்ட் படியேறியிருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, தணிக்கை அதிகாரிகளை கேலி செய்து சிஜோ உருவாக்கியிருக்கும் பாடல் வீடியோ ஒன்று இப்போது யு டியூபில் பற்றி எரிகிறது. ‘எனக்கு நிர்வாணமாக ஆசை... நான் நிர்வாணமாகத்தான் பிறந்தேன்... நீங்கள் ஆடைகளால் என்னைக் கட்டி வைத்தீர்கள்...’  இப்படிக் கவிதையாகச் செல்லும் அந்தப் பாடலில் அவர்கள் ஆட்சேபித்த அதே நிர்வாணக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இப்ப என்ன செய்வீங்க?