லிங்குசாமி in Download மனசு



சினிமாவை புரிந்துகொள்வது:

‘‘சினிமா பார்க்கும்போது எப்படி சந்தோஷமா இருக்குமோ, அதுமாதிரிதான் சினிமா எடுக்கிறதும் இருக்கும்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு கஷ்டம்னு நினைக்கலை. காமெடி சீனெல்லாம் சிரிச்சுக்கிட்டே எடுப்பாங்கன்னு நம்புனேன். எல்லாரும் ஒண்ணுமண்ணா ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பாங்க, வேணுங்கிற ஆளை வரிசையா பயன்படுத்திப்பாங்கன்னு அப்பாவியா நினைச்சிருக்கேன். இங்கே சினிமா ஒரே நேரத்தில் ஈஸியாவும் தெரியுது.. ஒரே நேரத்தில் கஷ்டமாகவும் தெரியுது. உண்மையிலேயே சினிமாவை புரிஞ்சுக்கிட்ட யாராவது இருப்பாங்களான்னு தெரியல. அவங்களை நானும் பார்த்ததில்லை.

சினிமாவை தியேட்டரில் போய்ப் பார்த்துத்தான் கத்துக்க முடியும். வீட்ல ஓய்வா சாஞ்சுக்கிட்டு பார்த்தால் அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் ஆகிடும். இப்ப திரைப்படத்தைப் பார்க்க வருபவர்கள் குதூகலமாக பொழுதைக் கழிக்கணும்னு வர்றாங்க. மக்களின் மனநிலை அப்படி. எதையும் நான் இங்கே இழந்ததாக சொல்ல முடியாது. அப்படி நான் உணர்ந்ததில்லை. இதுவே ஒரு இன்பம். எல்லோருக்கும் பிடிச்ச ஒரு கலை வடிவத்தை நாம் செய்கிறோம்ங்கறதே ஒரு ஆசீர்வாதம்தான்.’’

கேட்க விரும்புகிற கேள்வி:

‘‘எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் ஒரு பரபரப்பு தேவைப்பட்டுக்கிட்டே இருக்கு. அதிகம் பேர் பெரிய மழை, பெரிய பூகம்பம், பெரிய சுனாமின்னு பரபரப்பை எதிர்பார்த்திருக்காங்க. தனக்கான மௌனத்தை கொண்டாட முடியாதவன்தான் வெளியே பரபரப்பை தேடுவான். தினமும் நான் பேப்பரை முழுக்க உட்கார்ந்து படிக்கிறது கிடையாது. தேவையான செய்திகள் மட்டும் என் காதுக்கு வந்திடும். கவிதைகள், நாவல்கள் மட்டும் மனசு தேடும்.

ஏதாவது ஒரு விபத்தில கொஞ்சப் பேர் செத்திருந்தால் கூட ‘இருக்காதே, நிறையப் பேர் போய்ச் சேர்ந்திருக்கணும்.. பொய் சொல்றாங்க’னு சொல்றாங்க. இப்படித்தான் சில பேர் மனசு இருக்கு. இந்த மாதிரி பரபரப்பை தேடுவது எனக்கு வருத்தத்தைத் தருது. மனசு எப்போதும் அமைதியை தேடினாேல தெய்வீகத்தின் சாயல் வந்திடும். கலகலக்கிறவர்களை எளிதில் வென்று  விடலாம். ஆனால் எதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டால் அதுதான் அழகு.’’

பாதித்த விஷயம்:

‘‘நா. முத்துக்குமார்... அவனோட நினைவை அழிக்கிறது முடியாமப் போச்சு. அவன் ஏதோ ஊருக்குப் போயிருக்கான்.. அல்லது கம்போஸிங் போயிருப்பான்னு  நினைச்சிட்டிருக்கேன். அவன் அலைபேசி எண்ணை எடுக்க முடியலை. அவன் வயசையும் மீறி வேலை பார்த்திருக்கான். ரொம்ப முக்கியமான ஆட்கள் இந்த வயதில் போயிட்ட விஷயம் இப்பத்தான் தெரியுது. சினிமாவை விடுங்க, அவன் பெரிய அறிவாளி.

அவனிடமிருந்து எதுக்கும் ஒரு தீர்வு பெறலாம். அவனை நினைத்துக் கொண்டால் கொஞ்சம் பித்து பிடிக்க வைக்குது. பய ஏதோ ஒரு மாயம் பண்ணிட்டு போயிருக்கான். வாழ்க்கை இப்படித்தான். வாத்தியார் கரும்பலகையில் எழுதி எழுதி அழிக்கிற மாதிரி செஞ்சுக்கிட்டே போகுது. இந்தத் தருணத்தில் எனக்கு அவன் கையைப் பிடிச்சுக்கிட்டு நின்னா நல்லாயிருக்கும்னு தோணுது.’’

கற்ற பாடம்:

‘‘எதிரிகள், வஞ்சம், துரோகம் எல்லாம் சினிமாவில்தான் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இதெல்லாம் சினிமாவில கிரியேட் பண்றாங்கன்னு நினைச்சேன். நம்பியார் மாதிரி ஒருத்தர் உலகில் இருக்க முடியாதுன்னு சத்தியமா நம்பினேன். என் பக்கத்தில் சமீபத்தில் சில துரோகங்கள் நடந்தன. நல்லவேளை, நான் மீளக்கூடிய வயசில நடந்திருக்கு. அதையும் தாண்டிப் போயிட்டு இருக்கேன். நீங்கள் கையாளும் மனிதர்களின் மனநிலைகளைப் பார்த்து பழகிக்கணும். துரோகம் செய்யப் போகிறவர்களிடம் நீங்கள் ஒருபோதும் வாழ முடியாது.

அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது. இந்த மனிதர்களுடன் அனுபவத்தை பெற்றதும், பாடம் கத்துக்கிட்டதும் கூட ஒரு திறமைதான். அதுவும் நம்பிக்கைத் துரோகம்னு ஒண்ணு இருக்கே... அதை இங்கே சட்டப்படி தண்டிக்க முடியாது. அவனைக் கேட்டால், நாலு பேரை இடிக்காம, இரண்டு பேரை மிதிக்காம இப்போ பீக் ஹவரில் ஒரு பஸ்ல கூட ஏற முடியாதுன்னு சொல்லுவான். அவங்கவங்க பக்கத்து நியாயம்னு ஒண்ணு இருக்கே.. என்ன செய்யிறது? நீ, ஒன்று நண்பனோடவோ.. அல்லது பகைவனோடவோதான் வாழ வேண்டியிருக்கு. தெரிஞ்சுக்கணும்.’’

மறக்கமுடியாத மனிதர்கள்

‘‘என்னை கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் கூடவே இருந்து பார்த்துக்கறவங்க சிலபேர் இருக்காங்க. அதுல பிருந்தாசாரதி, நந்தா பெரியசாமி, வசந்தபாலன், சசி, பாலாஜி சக்திவேல், பி.ஆர்.வி.ரவிச்சந்திரன், அசோக் இவங்களை எல்லாம் என் சுயமாகவே நினைக்கறேன்.’’

படித்த புத்தகம்:

‘‘ சச்சிதானந்தத்தின் ‘ஆலிலையும் நெற்கதிரும்’ கவிதைப் புத்தகத்தை படிச்சேன். சிற்பி மொழிபெயர்த்தது. ‘வாழ்க்கையின் வறண்டு போன உதடுகளைத் தன் நுனி நாக்கால் இன்னும் ஈரப்படுத்திக்கிட்டே இருக்கு கவிதை’னு சொல்வாங்க. பிரியம், துயரம், தேடல், ஆராதனை, பெருங்கோபம்னு எளிமையாக பேசிட்டுப் போகுது. இந்த எளிமைக்ேக கொண்டாடலாம்.

சில கவிதைகள் குழந்தை முத்தம் மாதிரி இருக்கு. சிலது ஊஞ்சல் உற்சாகம். இன்னும் சிலது வாழ்பனுபவம் பொங்கி வழியுது. நண்பர்களோடு விவாதித்தால், அவரைப் படிச்சபின்னாடிதான் கவிதை பிடிச்சது, ஆசான்ங்கிறாங்க. இன்னொரு பக்கம் ஜா. தீபா மொழிபெயர்த்த ‘மேதைகளின் குரல்’. உலக சினிமா இயக்குநர்களின் நேர்காணல். சினிமாவின் மொழி அப்படி அப்படியே அருமையா இருக்கு.’’

ஆசைப்பட்டு நடக்காத விஷயம்:

‘‘நடக்காது, ஆகாது, கிடைக்காதுன்னு ஒண்ணுமே இல்லை. தியேட்டருக்கு போய் டிக்கெட் கிடைக்கலேன்னு திரும்பி வந்ததே இல்லை. யாராவது ஒருத்தன் டிக்கெட் கொண்டுட்டு வருவான், ‘ஒரு டிக்கெட்டுக்கு ஆளு வர்லை. எடுத்துக்கிறீங்களா?’ன்னு சொல்லுவான்னு நம்பிட்டு இருப்பேன். நம்புங்க, வருவான். முன்ன சொன்ன மாதிரி துரோகத்தை மட்டுமே சந்திச் சிருக்கேன். ஏமாற்றத்தை சந்தித்ததில்லை.’’

காதல் / திருமணம்:

‘‘காலேஜ் படிக்கும்போது பஸ்ஸில் இருக்கற பொண்ணை லவ் பண்ணுவேன். இறங்கி வரும்போது எனக்கு முன்னால் நடந்துபோகிற பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவேன். அந்தந்த நிமிஷங்களுக்கு அந்தக் காதலில் உண்மையாக இருப்பேன். எனக்கு கௌதம்மேனன் படத்தில் காஃபி ஷாப்ல உட்கார்ந்து உருகி, மருகி, தவிச்சு காதலிக்கிற வாய்ப்பு வந்ததில்லை. நான் ஒரு நாள் வீட்டுக்கு போன் பண்ணி ‘எனக்கு கல்யாணம் பண்ணிவைம்மா’னு கேட்டேன். பிறகு என் அத்தை பொண்ணையே கட்டிக்கிட்டேன்.

ரொம்ப லேட்டாய் எங்க அம்மா, ‘ஏண்டா ஒரு பொண்ணை கையோட கூட்டிட்டு வந்து இவள கட்டி வைம்மான்னு சொல்லுவேன்னு நினைச்சேன்.. கடைசில அத்தை பொண்ணை கட்டிக்கிட்டியேடா’னு குறும்பாகச் சொல்லி சிரிச்சாங்க. என் மனசு புரிஞ்ச பொண்ணு என் மனைவி. நான் சௌந்தர்ய உபாசகன்னு அவங்களுக்குத் தெரியும்.

அனுஷ்காவை இப்ப ரொம்பப் பிடிக்குது. ‘டி.வி.யில உங்க ஹீரோயின் வந்திட்டாங்களே, பார்க்கலையாக்கும்’னு கண்ணுல குறும்ப வச்சுக்கிட்டு போவாங்க. ‘அய்யா ஆளு வந்தாச்சு’ன்னு டி.வி. முன்னாலே உட்காருவாங்க பசங்க. இது ஒரு கொடுப்பினை. ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். வீடு உங்களை நிம்மதியாக வைச்சிருந்தால்தான் உங்களால் நிம்மதியாக வேைல செய்ய முடியும். சத்தியம் அய்யா சத்தியம்.’’

- நா. கதிர்வேலன்
படங்கள் : ஆ. வின்சென்ட் பால்