டிஜிட்டல் சினிமா வரமா சாபமா? க்யூப் என்ன சொல்கிறது?



தமிழ் சினிமா சிக்கல்கள்

- மை.பாரதிராஜா

‘‘வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சொன்னால் உடனே தியேட்டர்களின் எண்ணிக்கையை ‘க்யூப்’ வழியே அதிகரிக்க முடியும்...’’ என பேச ஆரம்பிக்கிறார் ‘க்யூப் சினிமா’வின் நிறுவனரான ஜெயேந்திரா. ‘‘ஒரு வாரத்துக்கு திரையிட திரையரங்கம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்கிறோம். வாரக்கணக்கில் என்றால் அது ஃப்ளாட் ரேட். இந்திய அளவில் 2400 திரையரங்குகள் டிஜிட்டல் வசதி பெற்றுள்ளன.

தமிழகத்தில் மட்டும் 759 திரையரங்குகள் க்யூப் வசதி கொண்டவை. நாங்கள் என்கிரிப்ஷன் முறையை கடைப்பிடிப்பதால், திருட்டுத்தனமாக டிவிடியில் பதிவேற்ற முடியாது. Time code, cam code வழியே பைரஸியை தடுக்கிறோம். அதையும் மீறி எங்காவது படத்தை காப்பி செய்தால் கூட கோட் எண்ணை வைத்து எந்த தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்துவிடலாம்...’’ என்கிறார் ஜெயேந்திரா. தயாரிப்பாளர்களின் நிலை என்ன?

‘‘ஒரு தயாரிப்பாளரின் பார்வையில் இந்தத் தொழில்நுட்பம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இது ஃபிலிமைக் காட்டிலும் இப்போது அதிக செலவு பிடிக்கிறது...’’ என மனம் திறக்கிறார் ‘மாயா’, ‘ஜோக்கர்’, ‘மாநகரம்’ போன்ற ஹிட் படங்களின் தயாரிப்பாளரான Potential Studios எஸ்.ஆர்.பிரபு. ‘‘இப்போது ஃபிலிம் இல்லை. டிஜிட்டல்தான். அதனால் திரையரங்கங்களும் டிஜிட்டல் முறைக்கு மாறினால்தான் டிஜிட்டலில் படத்தைத் திரையிட முடியும்.

ஒரு தயாரிப்பாளரால் படத்தை மட்டும்தான் கொடுக்க முடியும். தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்ஷன் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க முடியாது. டிஜிட்டல் புரொஜெக்டரை திரையரங்குக்கு வாங்கிக் கொடுக்க முடியாது. ஃபிலிம் இருந்தபோது ஒரு பிரிண்டுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவானது. இதுவே ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்தைத் தொட்டது.

அப்போது 400 பிரிண்ட் போடும் வழக்கமெல்லாம் இல்லை. 200 பிரிண்ட் போடுவதாக வைத்துக் கொண்டாலும் - இதுவே அதிகம்தான். அப்போது 50 பிரிண்ட் என்றாலே அது மெகா - ரூ.50 ஆயிரம் X 200 என்ற அடிப்படையில் ரூபாய் ஒரு கோடி செலவானது. டிஜிட்டல் வந்தபிறகு இந்த செலவு குறையும் என்றார்கள்.

பிரிண்டையும் அதிகரித்தார்கள். 400 திரையரங்குகள் வரை ரிலீஸ் செய்ய முடியும் என்கிறார்கள். இந்த அடிப்படையில் ஒரு டிஜிட்டல் பிரிண்டுக்கு ரூ.20 ஆயிரம் என வைத்துக் கொண்டால் 400 பிரிண்டுக்கு ரூ.2 கோடி வரை செலவாகிறது. இதுபோக டிடிஎஸ் சவுண்ட் சேர்ப்பது அது இது என தனித்தனி செலவுகள். ‘ரியல் இமேஜ்’ நிறுவனம், ‘தியேட்டரில் புரொஜெக்‌ஷன் செய்யும் செலவு, சவுண்ட் டெக்னாலஜி என அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.

பதிலுக்கு தியேட்டர் புரொமோஷன் ஸ்லாட் கொடுத்தால் போதும்’ என்றார்கள். தயாரிப்பாளருக்கு செலவு மிச்சமாகும் என நாங்களும் அதை ஏற்றோம். ‘க்யூப்’ மாதிரி நிறுவனங்கள் தியேட்டர் புரொமோஷனை தாங்களே பார்த்துக் கொண்டார்கள். அவை எங்களுக்கு ப்ளஸ் ஆகவும் அமைந்தன. ஆனால், ஒரு தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்டர் அமைக்க ரூ.20 லட்சம் ஆகும் என வைத்துக்கொள்வோம்.

அதை சம்பந்தப்பட்ட ‘ரியல் இமேஜ்’ போன்ற நிறுவனங்கள் ஏற்று, புரொஜெக்‌ஷனை மாற்றிக் கொடுத்து பதிலுக்கு தியேட்டர் புரொமோஷனை எடுத்துக் கொள்கின்றன என்றால்... அதுவும் ஐந்து வருடங்களில் போட்ட முதலீட்டை எடுத்துக் கொண்ட பிறகும் இதையே தொடர்கிறார்கள் என்றால்... அது சரியா? மாஸ்டர், லோடிங் இன்ஸ்டல்லே ஷன் காஸ்ட்டை எல்லாம் இனி குறைப்பதுதானே முறை? இது போதாதென்று கரெக்‌ஷன்களுக்கு வேறு அதிகம் செலவாகிறது.

இந்த இடத்தில் தியேட்டர்களை இடித்துவிட்டு திருமண மண்டபங்களாக ஏன் மாற்றுகிறார்கள் என்ற கேள்வி எழும். சென்னை மாதிரி மாநகரங்களில் ஒருநாள் மண்டப வாடகை ஆறு லட்சம் ரூபாய். அதுவே அவுட்டரில் என்றால் மூன்று லட்சம் ரூபாய். ஒரு மாதத்துக்கு 15 திருமணங்கள் நடந்தால் கூட பெரிய தொகையை வருவாயாக எடுத்துவிடலாம். தவிர மண்டபங்களுக்கு சர்வீஸ் டேக்ஸ் வெறும் 15%தான். ஆனால், சினிமாவுக்கு கமர்ஷியல் டேக்ஸ் 30%. லாபகரமாக நடக்கும் தொழிலுக்கு குறைந்த வரியும் நஷ்டத்தில் இயங்கும் தொழிலுக்கு அதிக வரியும் விதித்தால் தியேட்டர்கள் எப்படி இயங்கும்..?’’ என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.