ரீ என்ட்ரி Popcorn



-ரோனி

திருடு போன பொருளை போலீஸ் மீட்டாலே கால்பங்குதான் நம் கையில் கிடைக்கும். அதிலும் ஸ்நாக்ஸ் திருடுபோனால்..? பாலித்தீன் பேப்பர் கூட டவுட்தான். ஆனால், இங்கே கிடைத்திருக்கிற பொருள் ஆச்சரியத்தை அள்ளித்தருகிறது. அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்திலுள்ள சாக்ரின் ஃபால்ஸ் பாப்கார்ன் கடையில்தான் நடந்தது அந்த மிராக்கிள். 32 கிலோ எடையுள்ள பாப்கார்ன் திருடப்பட்டு பின்னர் எப்படியோ 4 நாட்களில் கடைக்கு திரும்ப ரீஎன்ட்ரி ஆகியுள்ளது. சோளப்பொரியின் மதிப்பு 45 ஆயிரத்து 762 ரூபாய் பாஸ்!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாப்கார்னை பந்துகளில் அடைத்து உருட்டுவது வழக்கம். அந்த சமயத்தில் கில்லாடி ஒருவர், பாப்கார்ன் பந்தை அப்படியே தன் வீட்டுக்கு பார்சல் செய்துவிட்டார். பாப்கார்னை காணாமல் அலறிய கடைக்காரர் போலீசில் புகார் கொடுத்தார். திடீரென 4 நாட்களுக்குப் பிறகு கடைக்கு முன்னே மெருகு குறையாமல் வைக்கப்பட்டிருந்தது பாப்கார்ன் பால். முன்பே ஏலம் எடுக்கப்பட்ட இந்த பாப்கார்ன் பாலை உரிமையாளர் இன்னும் எடுத்துச் செல்லவில்லை என்கிறார் பாப்கார்ன் ஓனர் ட்யூவி ஃபார்வர்டு.