காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 2

மதுபோதைக்கு எதிராக தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டிருக்கும் காலம் இது. ஆனால் - அமெரிக்காவோ கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக போராடிக் கொண்டிருக்கிறது. போதைப்பொருள் விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர்கள் என்று ஆண்டுக்கு சராசரியாக ஆறு லட்சம் அமெரிக்கர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

போதையைப் பொறுத்தவரை புகை, மதுவெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. நம்ம ஊரு டாஸ்மாக்கெல்லாம் அவர்களுக்கு ஜுஜூபி. மரிஜுவானா, ஹெராயின், கோகெயின், ஓபியம் உள்ளிட்ட போதை வஸ்துகளால் தங்கள் நாடே அழிந்துவிடும் போலிருக்கிறது என்று அலறிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

குறிப்பாக LSD (Lysergic acid diethylamide), அமெரிக்க இளைஞர்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. சும்மா டிஷ்யூ பேப்பர் மாதிரி இருக்கும். இல்லையேல் சின்ன சர்க்கரைக் கட்டி வடிவத்தில் இருக்கும். தம்மாத்தூண்டு புட்டு, நாக்குக்கு அடியில் வைத்தால் சொர்க்கம் தெளிவாகவே தெரியுமாம். தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களின் நரம்பெல்லாம் லூசாகி, கொஞ்ச நாட்களிலேயே பைத்தியம் பிடித்து தெருத்தெருவாகத் திரிய வேண்டியதுதான்.

பாப்லோ எஸ்கோபாரின் மரணத்தில் ‘மிரட்டுவோம்’ போட்டுவிட்டு, திடீரென்று போதை பாடம் எடுக்கிறீர்களே என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். போதை உலகின் பேரரசனைப் பற்றிய தொடரில், போதையின் வரலாற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? ஆழமாகப் போனால் போதையே தனி தொடராகிவிடும். எனவே, லைட்டாக ஓர் இழுப்பு மட்டும் இழுத்துவிடுவோம்.

அப்போதுதான் சொர்க்கமல்ல, நரகம் என்பது தெரியும்! உலகின் முதல் போதையென்று பாலியல் உறவைத்தான் சொல்லித் தொலைக்க வேண்டும். கடவுள் விதித்த கட்டுப்பாட்டை மீறி ஆதாம் ஏவாள் மீது போதை கொண்டான். பெண், மண், பொன்னென்று அவனுடைய போதை கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் அடைந்து இன்று LSDயில் வந்து நிற்கிறது.

உலகின் ஆதித் தொழில்களில் ஒன்றாக போதை வணிகத்தையும் தயங்காமல் குறிப்பிடலாம். காட்டுமிராண்டியாக இருந்த மனிதன் வேட்டையின்போது காயப்படுவான். வலியைப் போக்க மூலிகைகளின் பயன்பாடுகளைத் தேடித்தேடி கண்டறிந்தான். வலிநிவாரணிகளைக் கண்டறியும் அவனது முயற்சியின் பக்கவிளைவுகளில் ஒன்றுதான் போதையை உணர்ந்தது.

இன்றும்கூட போதை ஏற்றிக்கொள்ளப் பயன்படும் லாகிரி வஸ்துகள் பெரும்பாலும் வலிநிவாரணியாக மருத்துவத்துறைக்கு பயன்படுபவைதான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் போதைதான். ஒரு பக்கம் ஆற்றங்கரை நாகரிகங்களை உருவாக்கி விவசாயத் தேவைகளுக்காக நிலங்களை பதப்படுத்தி தானியங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தான் மனிதன்.

இதை நாம் நாலாங்கிளாஸ் வரலாற்றுப் பாடத்திலேயே படித்திருக்கிறோம். பாடங்களில் சொல்ல மறந்தது என்னவென்றால் சைட் பிசினஸாக கஞ்சா, ஓபியம் உள்ளிட்ட போதை வஸ்துகளையும் தன்னுடைய தேவைக்காக பயிரிட்டிருக்கிறான். தன் தேவைக்கு மிஞ்சியவற்றை பண்டமாற்று முறையில் வணிகமும் செய்திருக்கிறான்.

சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சுமேரியர்கள் ஓபிய போதையில் திளைத்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் செப்புகின்றன. ஓபியம்தான் போதை வஸ்துகளின் தாய்வீடு. மார்பின், ஹெராயினெல்லாம் ஓபியம் வம்சம்தான். ஆற்றங்கரை நாகரிகங்களில் ஓபியம் பெரும் போதை எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. அக்கால மருத்துவர்களின் அனஸ்தீஷியாவாக இதுவே உயிர்களைக் காத்தது. என்றாலும், போதை வஸ்துவாக மாறி பல்லாயிரம் உயிர்களையும் குடித்தது.

பண்டைய போர்களில் ஓபியம் அவசியம். ஆவேசமாக எதிரியின் தலையை எவ்வித குற்ற உணர்வுமின்றி வெட்டித் தரையில் உருளச் செய்ய வேண்டுமானால், இதுமாதிரி ஓர் ஆவேச போதை இருந்தால்தானே வேலைக்கு ஆகும்? இந்த இடத்தில் அப்படியே கட் செய்து விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்துக்கு வாருங்கள். லவ் கேரக்டர் முன்மொழியும் ‘ஸ்பீட்’ அப்படியே ஃப்ரீஸ் ஆகிறதா? குட். எந்த இடத்தில் நிறுத்தினோம்... யெஸ். யுத்தம்.

போர்களில் காயமடைந்தவர்கள் சந்தன வில்லைகள் வடிவில் இருந்த ஓபியத்தை வாயில் ஒரு பக்கமாக ஒதுக்கித்தான் தங்கள் வலிகளை மறந்தார்கள். எனவேதான் படையெடுப்புக்குத் தயாராகும் மன்னர்கள் டன் கணக்கில் ஓபியத்தை ஸ்டாக் செய்து வைத்திருக்கிறார்கள். அஃபிஷியலாகவே அப்போதெல்லாம் போர்வீரர்களுக்கு போதை அலவன்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

சுமார் ஐயாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பாகத்தான் நாம் சாராயம் காய்ச்ச ஆரம்பித்தோம். இந்த மகத்தான கண்டுபிடிப்புக்கு புண்ணியம் கட்டிக் கொண்டவர்கள் எகிப்தியர்கள். ஏதோ புல்லின் சாறையெடுத்து வடிகட்டி காய்ச்சி குடிக்கும்போது போதை ஏறுகிறது என்பதை யதேச்சையாகக் கண்டுபிடித்தார்கள். அதன்பிறகே விஸ்கி, பிராந்தி, ஒயினென்று விதவிதமாக மதுவகைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தியர்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை. சோமபானம், சுராபானம் என மூழ்கி முத்தெடுத்திருக்கிறார்கள். இலைதழைகளாலும் போதை ஏற்ற முடியும் என்பதெல்லாம் கொஞ்சம் லேட்டஸ்ட் (அதாவது குன்ஸாக ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) கண்டுபிடிப்புதான். இலைகளைக் காயவைத்து சுருட்டி தீ மூட்டி ஒரு இழுப்பு இழுத்தால் சும்மா ஜிவ்வென்று ஏறுகிறது என்பதையெல்லாம் சித்தம் போக்கு சிவன் போக்கு என்றுதான் கண்டறிந்தார்கள்.

தொழிற்புரட்சியின் விளைவாக எல்லா தொழில்களும் நவீனமானது மாதிரி போதைத் தொழிலும் புத்துணர்வு பெற்றது. அதுவரை முறைப்படுத்தப்படாத இத்தொழில், இதன் பின்னரே பக்காவாக பாட்டிலிங் & பேக்கேஜிங்கெல்லாம் செய்யப்பட்டு, அரசுக்கு வரியெல்லாம் கட்டி ஆஹா ஓஹோவென்று நடந்தது.

இன்றைய நம்முடைய டாஸ்மாக் எல்லாம் ஒருவகையில் அதன் நீட்சிதான். ஓபியம் விற்பனை தொடர்பாக இங்கிலாந்துக்கும், சீனாவுக்கும் இருமுறை போரே நடந்தது. ‘Anglo - Chinese war’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் அந்த இரு போர்களின் இயற்பெயரே ‘ஓபியம் போர்’தான். இந்தியாவில் ஓபியம் விளைவித்து, அதை சீனாவில் விற்பனை செய்யும்போது சீன அரசுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு முற்றியதன் விளைவாகவே போர்கள் மூண்டன.

கி.பி. 1852ல் ‘அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு’ உருவானது. மருத்துவத்தில் இருந்து போதையைப் பிரித்தெடுத்த முன்னோடி அமைப்பு இதுதான். மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும்; உயிர் காக்கும் மருந்துகள் போதை பயன்பாட்டுக்காக வீணடிக்கப்படக் கூடாது என்று இந்த அமைப்பே வலியுறுத்தியது. இதன்பிறகே மருந்துகளின் பயன்பாடுகளைக் கசடறக் கற்றவர்கள்தான் மருந்துக்கடை அமைக்கலாம் என்கிற நிலை உருவானது.

போதை தரும் மது உள்ளிட்ட சமாச்சாரங்கள் தனிக்கடை போட்டு வளர்ந்தன. ஒருகட்டத்தில் போதை மருந்து விற்பனை என்பது மரணதண்டனைக்குரிய குற்றம் என்று சில நாடுகளில் அறிவிக்கப்படுமளவுக்கு போதை எதிர்ப்பு தோன்றியது. போதையில் இருந்து விழித்தெழுந்த முதல் நாடு அமெரிக்காதான். என்றாலும் போதையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாகவும் அதுவேதான் இன்றும் இருக்கிறது.

அமெரிக்கா மொத்தத்தையும் மரிஜுவானா ஜுரம் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டுகிறது. அங்கே பத்தில் ஒருவர் போதைக்கு அடிமையானவர். அந்நாட்டின் மனிதவளமே முற்றிலுமாகச் சீர்குலைந்து போயிருக்கிறது. ஆண் பெண் வித்தியாசமில்லாமல், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் குழிவிழுந்த கண்களுடன், டொக்கு விழுந்த கன்னங்களுடன் zombie மாதிரி திரிகிறார்கள்.

இந்த அவலநிலைக்குக் காரணம் தென் அமெரிக்காதான் என்று அமெரிக்கா கண்கள் சிவக்க கதறுகிறது. தென் அமெரிக்காவில்தான் கொலம்பியா இருக்கிறது. கொலம்பியாவைத்தான் நம் காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபார் கட்டியாண்டார்.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்