விஜயனின் வில் 45
வாய்விட்டு அதே வினாவை ஆதி கேட்டே விட்டான். ‘‘அவிச்ச முட்டை எப்படி உடையும்?’’கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் இதற்கு பதிலேதும் சொல்லவில்லை.‘நான் பொய் சொல்லலை ஐஸ்...
 முட்டையை வேக வைக்கலை... எப்படி இந்த ‘KVQJUFS’ ஓட்டு மேல வந்ததுனு தெரியலை...’ என தாரா திரும்பத் திரும்ப தன்னிடம் சொன்ன வாசகங்களே ஐஸ்வர்யாவின் உள்ளத்தில் எதிரொலித்தது.
‘‘அங்க பாரு...’’ கிருஷ்ணன் அவளை நடப்புக்கு கொண்டு வந்தான். அவன் சுட்டிக் காட்டிய திசையில் தன் பார்வையை பதித்தாள்.ஆளுயர முட்டை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. அதிலிருந்து இளம் பெண்ணொருத்தி வெளிப்பட்டாள். ‘‘தாரா...’’
ஐஸ்வர்யாவின் அலறலைக் கேட்டு ஆதியும் கிருஷ்ணனும் சுண்டி விட்டதுபோல் நிமிர்ந்தார்கள்.நொடிக்கும் குறைவான காலம்தான். அதற்குள் வெளிப்பட்ட தாரா, கார்க்கோடகராக மாறினார். மூவருக்கும் தாங்கள் கண்டது கனவா நினைவா என்பது புரியவில்லை.
ஒருவேளை தாராவையே நினைத்துக் கொண்டிருப்பதால் அதுபோன்ற பிரமை ஏற்பட்டதா..? இல்லை என அழுத்தம்திருத்தமாக ஐஸ்வர்யாவின் மனம் கூக்குரலிட்டது. அந்தப் புருவங்களும், கண்களும், உதடுகளும்... சான்ஸே இல்லை. தாராதான். எந்த தோற்றப் பிழையும் இல்லை...அடித்துச் சொன்ன அவள் மனது கார்க்கோடகரிடன் குரலால் தடைப்பட்டது.
‘‘எங்க இந்த முட்டையைப் பார்க்காம போயிடுவீங்களோனு பயந்தேன்...’’‘‘ஏன்... இதுதான் நாம வெளியேறுவதற்கான வழியா..?’’ கிருஷ்ணன் நக்கலாகக் கேட்டான்.‘‘கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டியே...’’‘‘அப்ப இதுக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க..?’’ ஆதி கொக்கி போட்டான். ‘‘கருடன்கள்கிட்டேந்து எப்படி தப்பினீங்க..?’’ ஐஸ்வர்யா இறுக்கினாள்.
‘‘விட்டா கூண்டுல ஏத்தி நிக்க வைச்சுடுவீங்க போலிருக்கே...’’ கார்க்கோடகர் சிரித்தார். ‘‘முன்னாடியே சொன்ன மாதிரி கருடன்களும் நாங்களும் பங்காளிங்க. அவங்களை எப்படி சமாளிக்கணும்னு எங்களுக்கு... எனக்குத் தெரியும். அந்த வித்தையை உங்களுக்கு சொல்லித் தரவோ காண்பிக்கவோ முடியாது. கிருஷ்ணன் மட்டும் ரேகையை போட்டோ எடுக்காம இருந்திருந்தான்னா... என்னோட சேர்ந்து நீங்களும் இப்ப இந்த முட்டைலேந்துதான் வெளிப்பட்டிருப்பீங்க...’’
‘‘முட்டைதான் நாம வெளியேறு வதற்கான வழினா... அதை ஏன் நாம உடைச்சு வெளிப்படணும்..?’’ கிருஷ்ணனின் லாஜிக்கை மற்ற இருவரும் ஆமோதித்தார்கள்.‘‘உன் சந்தேகப்புத்தி போகாதா..? ‘என்னோட சேர்ந்து நீங்களும் இப்ப இந்த முட்டைலேந்துதான் வெளிப்பட்டிருப்பீங்க...’னு சொல்லலை... முட்டை வழியா வெளியேறியிருப்போம்னு சொன்னேன். வெளில போனதும் உங்க காதுகளை ரிப்பேர் பண்ணுங்க...’’ அலுத்துக் கொண்ட கார்க்கோடகர் அதன் பிறகு தாமதிக்கவில்லை. ‘‘சீக்கிரம் வாங்க...’’
‘‘எங்க..?’’ ஐஸ்வர்யா புருவத்தை உயர்த்தினாள்.‘‘முட்டைக்குள்ளதான்! கேள்விகளை குறைங்க. நாம வெளியேறணும்...’’ சொன்னவர் முட்டைக்குள் புகுந்தார். அவரைப் பின்தொடர வேண்டுமா என்ற கேள்வி மூவருக்குள்ளும் எழுந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..‘‘என்ன... வரலையா..?’’ உள்ளிருந்து கார்க்கோடகர் குரல் கொடுத்தார்.
‘‘நோ ஆப்ஷன்...’’ கிருஷ்ணன் தோளைக் குலுக்கினான். சுற்றிலும் இருந்த இருட்டு அவன் சொன்னதை ஆமோதித்தது.ஒரு முடிவுடன் முட்டைக்குள் நுழைந்தார்கள். முதலில் ஆதி. அடுத்து ஐஸ்வர்யா. கடைசியில் கிருஷ்ணன்.எதிர்பார்த்தது போல் முட்டைக்குள் எதுவும் இல்லை. நீண்ட குழாய். அதுவும் ஆளுயர குழாய்.
‘‘தைரியமா நடங்க...’’ கார்க்கோடகரின் குரல் அவர்களை வழிநடத்தியது. ‘‘கால் தரைல படுதா இல்லையானு யோசிக்காதீங்க. சுத்தி என்ன இருக்குனு ஆராய முற்படாதீங்க. ஆதி... என் கையை பிடிச்சுக்க. ஐஸ்வர்யா... நீ ஆதி கையை கெட்டியா பிடி. அப்பா கிருஷ்ணா...’’ ‘‘ஐஸ்வர்யா கையை நான் பிடிச்சுக்கறேன்...’’
‘‘கற்பூரம்...’’ ‘‘இப்படி கத்தி பேசறீங்களே... இங்க ஆபத்து வராதா..?’’ ‘‘வராது ஆதி. இதுக்குள்ள நம்ம எதிரிங்க வரமாட்டாங்க...’’ ‘‘யாரந்த எதிரிங்க..?’’
‘‘தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போற கிருஷ்ணா...’’ ‘‘பெரியவரே...’’ ஐஸ்வர்யா மெல்ல உச்சரித்தாள். ‘‘சொல்லு...’’
‘‘முட்டை மேல எப்படி அந்த எழுத்து வந்தது..?’’ ‘‘வரலைனாதான் அதிசயம்! நமக்கு முன்னாடியே பல காலமா பல பேரு அர்ஜுனனோட வில்லை தேடிட்டு இருக்காங்க. அவங்க எல்லாருமே ‘KVQJUFS’ வரை கண்டுபிடிச்சுட்டாங்க...’’
‘‘அவங்கள்ல யாரோதான் இந்த முட்டை ஓட்டுல அப்படி எழுதியிருக்கணுமா..?’’ ‘‘அப்படித்தான் இருக்கணும் ஐஸ்வர்யா...’’ ‘‘உங்களை சுத்திச் சுத்தி வளைக்கறாங்களே கருடன்கள்... அவங்களுக்கும் இந்த எழுத்துக்கள்..?’’ ‘‘தெரியும் ஆதி...’’
‘‘தாரா வாங்கின முட்டைல இந்த எழுத்துகள் எப்படி வந்தது..?’’ நினைத்ததை ஐஸ்வர்யா கேட்டுவிட்டாள். ‘‘அவளைக் கண்டுபிடிச்சதும் அவகிட்டயே கேளு...’’ ‘‘நீங்க சொல்ல மாட்டீங்களா..?’’
ஐஸ்வர்யாவின் வினாவுக்கு எந்த விடையும் வரவில்லை. ‘‘பெரியவரே...’’ கிருஷ்ணன் குரல் கொடுத்தான். ‘‘ம்...’’
‘‘அந்த ரேகை யாரோடது..?’’ கார்க்கோடகர் சொல்லும் பதிலை எதிர்பார்த்து மூவரின் இதயமும் வேகமாகத் துடித்தது.
‘‘உங்களைத்தான் பெரியவரே...’’ ‘‘கேட்டது காதுல விழுந்தது கிருஷ்ணா... தெரிஞ்சா சொல்ல மாட்டேனா..?’’ ‘‘அப்ப உங்களுக்குத் தெரியாதா..?’’ ஆதி உறுமினான்.
‘‘ம்ஹும். ஆனா, அந்த ரேகைதான் விஜயனின் வில் இருக்கிற இடத்தை திறக்கிற சாவினு மட்டும் தெரியும்...’’‘‘எங்கேந்து இதை எடுத்தீங்க..?’’ ஆதியின் கேள்விக்கு கார்க்கோடகர் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘‘அந்த ரேகை எப்படி உங்களுக்கு கிடைச்சது..?’’ கிருஷ்ணன் கேள்வியை மாற்றிக் கேட்டான். ‘‘எப்படி கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான். தெரியாது... தெரிஞ்சாலும் சொல்ல முடியாது. உத்தரவில்லை. புரிஞ்சுக்குங்க தம்பிங்களா... சில விஷயங்களை ஆராயக் கூடாது. நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காதனு பெரியவங்க ஏன் சொன்னாங்க..? தேவையானது கிடைச்சுடுச்சு. போதாதா... பேசாம வாங்க... இன்னும் கொஞ்ச தூரம்தான்...’’
அதன் பிறகு அங்கு அமைதி நிலவியது.அதை தனக்கு சாதகமாக ஐஸ்வர்யா பயன்படுத்திக் கொண்டாள். தன் கையைப் பிடித்திருந்த கிருஷ்ணனின் உள்ளங்கையை தன் ஆள்காட்டி நகத்தால் சுரண்டினாள்.கிருஷ்ணன் உஷாரானான். பதிலுக்கு அந்த விரலைப் பிடித்து நெரித்து என்ன என்பதுபோல் கேட்டான்.தயாராகி விட்டான் என்பது புரிந்ததும் ஒவ்வொரு எழுத்தாக அவன் உள்ளங்கையில் தன் நகத்தால் எழுத ஆரம்பித்தாள்.
‘கா...ர்...க்...கோ...ட...க...ர் மே...ல ச...ந்...தே...க...மா இ...ரு...க்...கு...’என்று ஆரம்பித்து அவள் விடாமல் எழுதியதை கச்சிதமாக கிருஷ்ணன் கோர்த்தான்.‘ஸ்ரீரங்கத்துல இருக்கிற பாழடைஞ்ச கோயிலுக்குள்ள... மேக்னடிக் வேவ்ஸ் கடந்து நாம நுழைஞ்சதுலேந்து எதுவும் சரியில்ல. ஏதோ ஃபேன்டஸி உலகத்துக்குள்ள நடமாடற ஃபீலிங். காதுல பூ சுத்தற மாதிரி இருக்கு. ஒருவேளை நாம செத்துட்டு நம்ம ஆன்மா மட்டும் நடமாடுதா..?’
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம் : ஸ்யாம்
|