இளைப்பது சுலபம்



அனுபவத் தொடர் 21

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது


என் காதுகளுக்குள் யாரோ சாரங்கி வாசிக்கிறார்கள். அது இசையாகத்தான் உள்ளே இறங்குகிறது. ஆனால், ஒரு பயணம் மேற்கொண்டு அது மூளையை அடைகிறபோது ஓசையாகிவிடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓசை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் உடம்புக்குள் ஓடுகிற ரத்தம் மொத்தத்தையும் வழித்துத் துடைத்தெறிந்துவிட்டு ஓசையே நிரம்பிவிடும்போல் இருந்தது. ஓசை என்றா சொன்னேன்? இல்லை. அது ஓலம். அப்படியொரு பெரும் சத்தம்.

திடுக்கிட்டுக் கண் விழித்து எழுந்து உட்கார்ந்தேன். சத்தம் நின்றபாடில்லை. தவிர கண்களுக்குள் ஸ்பாஞ்ஜ் வைத்த மாதிரி ஓர் உணர்வு. பாதங்களும் வழக்கத்துக்கு விரோதமாகச் சில்லிட்டிருந்தன.கவனியுங்கள்.

இது பசிதான். ஆனால், வயிற்றில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எப்போதும் பசிக்கும்போது என்னவெல்லாம் நடக்குமோ, அது இல்லை. மாறாக இந்தப் பசி வேறு ரகமாக இருந்தது. எழுந்துபோய் ஏதாவது வேலை பார்க்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சும்மா இரு என்று ஒரு ஞானியைப் போல் மனம் உத்தரவிட்டது.

என்னை யாரும் தடுக்கப் போவதில்லை. என்னை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. போய் அள்ளி ஒரு வாய் போட்டுக்கொண்டால் இந்தக் களேபரங்கள் அடங்கிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நப்பாசை யாரை விட்டது?

எப்படியோ தாக்குப் பிடித்து அன்று இரவு வரை உண்ணாமல் இருந்து எட்டரை மணிக்கு மேல் என் விரதத்தை முடிக்க உட்கார்ந்தேன்.
விரதம் தொடங்கும்போது புளியோதரை வகையறாவில் ஆரம்பித்திருந்தேன் அல்லவா? முடிப்பதற்கு சுத்தமான பேலியோ உணவு. முன்னூறு கிராம் பனீர், கால் கிலோவுக்கு மேல் வெண்டைக்காய் பொரியல், சீஸ் எல்லாம் போட்டுப் பிரமாதமாக ஒரு தக்காளி சூப். இருநூறு மில்லிக்குக் குறையாமல் முழுக் கொழுப்புத் தயிர். மேலுக்கு ஒரு அறுபது எழுபது கிராம் வெண்ணெய். பத்தாது?

என் மானசீகத்தில் ‘மாயாபஜார்’ ரங்காராவ் ஆகி மேற்படி உணவைக் கபளீகரம் செய்து முடித்துவிட்டுப் படுத்தேன். இந்த அதிர்ச்சி வைத்தியம் குறைந்தது நான்கு கிலோ எடையைக் குறைத்திருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை. மறுநாள் எப்போது விடியும்; எடை பார்த்து மகிழ இன்னும் எத்தனை மணி நேரம் உள்ளது என்பதைக் குறித்தே எண்ணிக்கொண்டிருந்தேன்.

விடியத்தான் செய்தது. காலைக் கடன்களை முடித்துவிட்டு எடையும் பார்த்தேன். நான்கு கிலோ இல்லாவிட்டாலும், ஆட்டோவெல்லாம் வைத்ததற்குப் பரிகாரமாக ஒரு மூன்று? அட ஒரு இரண்டரை? வெறும் இரண்டு?
ஒரு கிலோ கூடக் குறையவில்லை!

இது எனக்கு அதிர்ச்சி யாக இருந்தது. என்எடை மெஷின் யாரோ எதிரியிடம் விலை போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. அதைத் தூக்கி அப்படியும் இப்படியும் குலுக்கினேன். இடத்தை மாற்றி வைத்துப் பார்த்தேன். என்ன செய்தாலும் அதேதான். நான் எதிர்பார்த்த எடை இழப்பு இல்லை. சுத்தமாக இல்லை. அப்போதும் சந்தேகம் தீராமல் அன்று மாலை எனது பேட்டையில் உள்ள ஓர் உணவக வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் எடை மெஷினில் போய் ஏறி நின்று பார்த்தேன்.

என்ன ஓர் அவலம். எல்லா எடை மெஷின்களும் எனக்கு துரோகம் செய்வதென்று கூட்டணி வைத்துத் தீர்மானம் செய்திருந்தன போலிருக்கிறது.
மிகுந்த மனச்சோர்வுடன் வீடு திரும்பினேன். நின்றுபோன எடைக்குறைப்பை மீண்டும் தொடங்குவது எப்படி? புரியவில்லை. பேலியோ பழகுபவர்களுக்கு எடைக்குறைப்பை மீண்டும் தொடங்க எல்லோரும் சிபாரிசு செய்யும் ஒரே வழி விரதம்தான். பசிக்காது; தைரியமாக விரதம் இருக்கலாம் என்று சொல்லுவார்கள். அது உண்மையும்கூட.

ஆனால், விரதம் இருந்தும் எடைக்குறைப்பு நிகழவில்லை என்றால் என்ன செய்வது?

அப்போதுதான் எனக்கு அந்த உண்மை தென்பட்டது. இது வெஜிடேரியன் மைனாரிடி களுக்கே உரிய பிரச்னை. எந்த சக்தியாலும் தீர்க்க முடியாத பிரச்னை.என்னதான் பேலியோ என்றாலும் நாம் உண்ணும் காய்கறிகளில் கார்போஹைடிரேட் இருக்கிறது. பருகும் பாலில் இருக்கிறது. தயிரில் இருக்கிறது. குடித்தேனே, தக்காளி சூப்! அதில் ஒரு வண்டி மாவுச் சத்து ஒளிந்திருக்கிறது.

எல்லாம் அளவுக்குள்தான்; கட்டுக்குள்தான் என்று சொல்லிக்கொண்டாலும் கார்ப் இல்லாத காய்கறி இல்லை. அரிசி, பருப்பு வகையறாக்களுடன் ஒப்பிட்டால் காய்கறிகளில் உள்ள மாவுச்சத்து சற்று நல்ல ரகம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர வில்லன்களுள் நல்ல வில்லன், கெட்ட வில்லன் என்று ரகம் பிரித்து அங்கீகரிக்க முடியாதல்லவா?

குறைந்த மாவுச் சத்து என்பதுதான் வெஜ் பேலியோவில் சாத்தியமே தவிர, கார்போஹைடிரேட்டே இல்லாத ஒரு டயட்டுக்கு ஒரு சதவீத வாய்ப்புகூட இல்லை. இதுதான் அடிப்படை. இதனால்தான் பேலியோவில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு நாற்பது கிராமுக்கு மிகாமல் கார்ப் எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

உலக மருத்துவ கவுன்சில் பரிந்துரையெல்லாம் பார்த்தீர்களென்றால் அவர்கள் வள்ளலாக ஐம்பது கிராம் வரை போகலாம் என்பார்கள். இருநூறு முன்னூறு கிராம் கார்போஹைடிரேட் உணவை உண்டுகொண்டிருந்ததற்கு ஐம்பது கிராம் எவ்வளவோ தேவலை என்று நினைப்போமென்றால் தீர்ந்தது. ஆரம்ப எடைக்குறைப்பு இருக்குமே தவிர, ஒரு கட்டத்துக்குமேல் வண்டி நகராது.

என் பிரச்னை அதுதான் என்று புரிந்துவிட்டது. தினசரி பேலியோ உணவே என்றாலும் ஐம்பது கிராம் கார்புக்குக் குறையாமல் நான் எடுத்து வந்திருக்கிறேன். எனவே உடலானது கார்ப் தொடர்பை முற்றிலுமாகக் கைவிட்டிருக்கவில்லை.

அதனோடுகூட சீட்டிங் என்ற பெயரில் ஒரு ஃபுல் மீல் அடித்துவிட்டு விரதம் இருந்தால் மட்டும் என்ன பெரிய அதிசயம் நிகழ்ந்துவிடும்?
தின்ற புளியோதரை, இரண்டாம் நாள் பசியைக் கிளறிவிட்டதுதான் நிகர லாபம். பல மாதங்களாகப் பசியுணர்ச்சியே இல்லாதிருந்தவன் அந்த ஒரு நாளில் அதைப் பூரணமாக தரிசித்தேன். பழைய பசி. கோரப் பசி. தீப்பசி. தீனிப்பசி.

அன்று முடிவு செய்தேன். இம்மாதிரி விஷப் பரீட்சைகள் இனி வேண்டாம். முழு அசைவ உணவாளர்களுக்கு இந்த மாடல் கைகொடுக்கிறது. அசைவ பேலியோவில் இருப்பவர்களுக்கு எடைக் குறைப்பு நின்றுவிட்டால், சடாரென்று ஒருநாள் வழக்கமான அரிசி சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு இரண்டு நாள் வயிற்றைக் காயப்போட்டால் மூன்றாம் நாள் சரசரவென்று எடை குறைவதைப் பலரிடம் பார்த்தேன். ஆனால், சைவத்தில் அது போணியாகாது என்பதைக் கண்டறிந்தேன்.

மறுநாள் முதல் என் விஷப் பரீட்சைக்கு விடை கொடுத்தேன். ஒழுங்கான பேலியோ உணவு. ஒருநாளைக்கு ஒருவேளை உணவு போதும். முழு 1500 கலோரிகளை அந்த ஒரு வேளையிலேயே உண்டுவிடுவது. மிச்ச நேரத்தைக் கொழுப்பெரிக்கக் கொடுத்துவிடுவது. இதனோடுகூட ஒழுங்கான நடைப்பயிற்சியும் சேர்ந்தால் எடைக் குறைப்பு மீண்டும் நிகழ ஆரம்பிக்கும்.ஆனால், ரொம்ப மெதுவாக!

பேலியோ கிச்சன்

லோ கார்ப் சாலட்

ஒரு வெள்ளரிக்காய். அரை சுரைக்காய். எண்ணி நாலு துண்டு தக்காளி. நாலு துண்டு வெங்காயம். ஒரு பிடி கொத்துமல்லி. ஒரு பிடி முட்டைக்கோஸ். நாலு ஆலிவ் பழங்கள். போதும்.இவற்றை நறுக்கிக்கொண்டு மேலுக்கு இரண்டு கரண்டி திரவ சீஸை விட்டுக் கிளறுங்கள். இரண்டு நிமிடம் ஊறட்டும். அதன்பின் ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு ஸ்பூன் ஊற்றி இன்னொருமுறை கிளறுங்கள்.
 
ஆச்சா? அப்படியே தூக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். அரை மணி நேரம் போதும். பிறகு அதை வெளியே எடுத்து அரைப்பிடி தேங்காய் தூவுங்கள். இந்த சாலடின் ருசி வித்தியாசமாக, நன்றாக இருக்கும். இதற்கு புதினா சட்னி தொட்டுக்கொள்ளப் பொருத்தமாக இருக்கும். ஐம்பது கிராம் வெண்ணெய் சேர்த்துக்கொண்டு இதை ஒரு முழு ப்ளேட் அடித்தால் ஒரு வேளை உணவாகவும் வேலை செய்யும்.

(தொடரும்)

பா.ராகவன்