நவீன வெர்ஷனில் சைக்கிள் டீ!



டீ இந்தியாவின் தேசிய பானமாகிவிட்டது என்றால் அது பொய் இல்லை. இந்தியாவின் 83 சதவீத குடும்பங்கள் டீக்கு அடிமை என்கிறது ஒரு கணக்கெடுப்பு. அதேபோல் டீ ஏற்றுமதியில் நாம்தான் இரண்டாம் இடம். தமிழர்களுக்கும் தேநீருக்குமான உறவு நூற்றாண்டுகள் பழமையானது. உழைக்கும் மக்களின் உற்சாகபானமாகவே தேநீர் இங்கு எப்போதும் இருக்கிறது.

நகரங்களில் சைக்கிளில் போய் தேநீர் விற்பவர்கள் அதிகம். இரவு நேரங்களிலும் டீக்கடைகள் இல்லாத நாட்களிலும் ஆபத்பாந்தவர்கள் இந்த சைக்கிள் தேநீர் விற்பனையாளர்கள்தான். இந்நிலையில் சமீபமாய் சென்னை நகரில் ஒரு வித்தியாசமான சைக்கிள் தேநீர் எல்லோரையும் கவர்ந்துவருகிறது. ‘டீ டூ கோ’ என்ற பெயரில் நவீனமுறையில் சைக்கிளை வடிவமைத்து கலர்ஃபுல்லாக டீ வியாபாரத்தில் கலக்கிவரும் சிவராஜ் முத்துலிங்கம் ஒரு பட்டதாரி. ‘எப்படி பாஸ் இந்த ஐடியாவை பிடிசீங்க?’ என்று கேட்டோம்.

‘‘சொந்த ஊர் திருப்பூர். சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்தேன். படிக்கும்போதே நம்ம ஊர் சைக்கிள் ரிக்‌ஷாவை வைத்து பெட்ரோல் இல்லாத சோலார் கார் வடிவமைத்தேன். அதற்கு அப்ரூவல் வாங்க இந்திய அரசிடம் பல வருடங்களாகப் போராடி வருகிறேன். இதன் அடுத்த கட்டமாகத்தான் இந்த தேநீர் சைக்கிள் ஐடியாவைக் கையில் எடுத்துள்ளேன்.

சைக்கிள் மேல் எனக்கு எப்போதுமே தனிக் காதல் உண்டு. அதுவும் சைக்கிள் டீ ரொம்ப பிடிக்கும். ஒருமுறை டீ குடித்துக்கொண்டு இருக்கும்போது சைக்கிள் டீ விற்பவரிடம் பேச்சுக்கொடுத்தேன். சாதாரண சைக்கிளில் டயர், பிளாஸ்டிக் அட்டைகளை வைத்து வடிவமைத்திருந்தார்கள்.
 
உலகின் பல நாடுகளுக்குத் தேயிலை ஏற்றுமதி செய்பவர்கள் நாம்தான். கடந்த 180 ஆண்டுகளாக பல்வேறு வகையான தேயிலையை உற்பத்தி செய்துவருகிறோம். இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 50 சதவீதம் அசாமில்தான் விளைகிறது என்றாலும் அவர்களைவிட நம் சென்னை, மதுரைக்காரர்களின் டீயில்தான் ருசி நன்றாக இருக்கிறது. இது எனது அனுபவத்திலும் ஆய்விலும் நான் கண்டறிந்தது.

நமது டீக்கு இவ்வளவு ருசி இருக்கும்போது நாம் ஏன் நமது டீ மாஸ்டர்களின் இந்தத் திறமையை முறையாகப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அசத்தக் கூடாது?

இந்த சைக்கிள் டீ என்ற வடிவத்தையே முற்றிலும் நவீனமாக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக நானே புதிய வடிவில் ஒரு நவீன சைக்கிளை வடிவமைத்தேன். சைக்கிளின் பின்பகுதியில் டீ வைக்க ஸ்டேண்ட், கீழே தனியாகக் குப்பைத் தொட்டி, சுத்தமான டீ குவளை. பொதுவாக, சைக்கிளின் முக்கோணப் பகுதி சும்மாதான் இருக்கும். அதன் நடுப் பகுதியில் பெட்டி மாதிரி செய்து பிஸ்கட், வடை போன்ற ஸ்நாக்ஸ் வைக்கும் இடமாக மாற்றினேன். குறிப்பாக, டீ கேனை மாற்றினேன்.

இதுவரை எல்லோரும் சாதரண டீ கேனைத்தான் பயன்படுத்திவருகிறார்கள். நான் தனியாக வெளிநாட்டில் இருந்து ஃபிளாஸ்க் மாடலில் வாங்கி அதிக நேரம் சூடு தாங்கும்படிச் செய்தேன். முதன் முதலில் நான் சந்தித்த டீ விற்பவரிடம் வண்டியைக் கொடுத்துப் பயன்படுத்தச் சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார்.

‘சைக்கிள் வித்தியாசமாக இருப்பதால் நிறைய வாடிக்கையாளர்கள் டீ குடிக்க வருகிறார்கள்’ என்றார். எனவே, இன்னும் சில சைக்கிள்களை உருவாக்கி மற்றவர்களுக்கும் தரலாம் என முடிவு செய்தேன். ஆனால், எந்த வியாபாரியுமே அப்படி தங்கள் சைக்கிளை வடிவமைக்க முன் வரவில்லை. சரி என்று நானே களத்தில் இறங்கினேன்.

சைக்கிளில் டீ எடுத்துக்கொண்டு எந்த ஏரியாவுக்குச் சென்றாலும் ‘இது எங்க ஏரியா. நீங்க டீ விற்கக் கூடாது’ என்று சொன்னார்கள். டீ விற்பவர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களுக்குள் ஏரியா பிரித்து விற்பனை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வரை வருமானம் தரும் தொழில் இது. இரவு நேரத்தில் விற்பனை செய்தால் இன்னும் அதிகம் லாபம் பார்க்கலாம்.

ஒரு வழியாகப் போராடி கால் ஊன்றினேன். அப்பா நான் டீ விற்கிறேன் என்று கேள்விப்பட்டு என்னைத் தேடி சென்னைக்கே வந்துவிட்டார். அவரிடம் என்னுடைய விருப்பம் இது என்று எடுத்துச்சொல்லி புரியவைத்து அனுப்பினேன். இப்போது என்னிடம் 20 பேருக்கு மேல் இருக்கிறார்கள். அதில் இருவர் பெண்கள்!தமிழகம் முழுவதும் இந்த சைக்கிளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய லட்சியம்!’’ என கண்களில் கனவு மின்ன பேசுகிறார் சிவராஜ் முத்துலிங்கம்.

திலீபன் புகழ்