அறம்



இனி குழந்தைகள் ஆழ்குழியில் விழுந்தார்கள் என எங்கே கேள்விப்பட்டாலும் நெஞ்சம் பதற வைக்கும் இந்த ‘அறம்’.மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டி, பின் அவர்கள் துயரம் அறிந்து அதில் அரசியல் - அனர்த்தம் என அதிகாரத்தின் கரிய சரித்திரத்தை இவ்வளவு வீரியமாக விதைத்ததற்காக அறிமுக இயக்குநர் கோபி நயினாருக்கு பூங்கொத்து.

ராம்ஸ் - சுனு லட்சுமி இடையில் அழகாகப் பூக்கும் பிரியங்களின் தாம்பத்யம் கனிகிறது. முள்காடுகளை வெட்டி விறகு சேகரிக்கும் கூலிப்பணியில் சுனுலட்சுமி இருக்க, ஆழ்துளைக் கிணற்றுக்காக வெட்டி வைக்கப்பட்ட குழியில் அவரின் குழந்தை விழுகிறது.

குழந்தையை மீட்பதற்கான எளிய மக்களின் பரிதவிப்பு, அரசு எந்திரத்தின் கையாளாகாத தனம், உள்ளூர் அரசியல்வாதியின் தலையீடு... இவற்றைத் தாண்டி நேர்மையான அரசு அதிகாரி நயன்தாரா துணிவோடு குழந்தையைக் காப்பாற்றினாரா... என வரும் திக்திக் நிமிடங்கள்தான் கதை.

ரொம்பவும் நாம் பக்கத்தில் போய்ப் பார்க்காத எளிய மக்களின் இருண்ட பக்கங்களை, சாதாரண பிரியங்கள் கைகூடாத வேதனைப் பக்கங்களை ‘இதோ இதோ’ என திறந்து காட்டுகிறார் இயக்குநர் கோபி. பொறுக்க முடியாத வறுமைக்கு மத்தியிலும், காதலும், நேசமும், பிரியமுமாய் பொங்கும் வேளையில் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட, இன்னொரு இடத்திற்குப் போகிறது படம். கூடி வந்து பரிதவிக்கிற மக்களின் வேதனையும், கோபமும் அத்தனை பயங்கரங்களையும் சொல்லி விடுகிறது.

அப்பாவித்தனமான ஆதங்கத்தையும், இயலாமையையும் ராம்ஸும் சுனுலட்சுமியும் நடிப்பில் கொண்டுவருவது அத்தனை அழகு. கிராமத்துக்குப் பக்கத்திலிருந்த ராக்கெட் தளத்தை விமர்சிப்பதில் ஆரம்பித்து, லோக்கல் பாலிடிக்ஸ் வரை பிய்த்து உதறுகிற பழனி பட்டாளம், சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை, பதறித் துடித்து தேற்றுகிற கிராமத்து பெண்கள், பக்கத்தில் இருக்கிற அரசு அதிகாரிகள்... என அத்தனை பாத்திரங்களிலும் ஜீவன் ததும்புகிறது.

கலெக்டராக நயன்தாரா. நிச்சயமாக அவருக்கே இது அற்புதமான படம். உணர்வுகளை சுருக்கிக்கொண்டு, விழுந்துவிட்ட குழந்தைக்காக அடுத்தடுத்த கட்டங்களில் சமாளித்து, கண்ணில் அன்பையும், பேச்சி–்ல் கண்டிப்பையும் சுமந்து... படம் முழுக்க அப்படி உழைத்திருக்கிறார். உள்ளூர் எம்எல்ஏவாக சதா கடுப்பேற்றும் வேல ராமமூர்த்தி உடல்மொழியின் இறுக்கத்தில் கச்சிதம்.

மக்களின் மீதான அசல் பிரியமும், நம்பிக்கையும் கொண்ட இயக்குனர் படம் முழுக்க சீற்றத்தோடு அடுத்தடுத்து கேட்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
மழையில்லாத நீளும் பரப்பு, ஆழ்குள கிணறு, ஓர் அறை கொண்ட வீடு என கொஞ்சம் இடத்திலே இருந்து இன்ச் இன்ச் சாக ஓம்பிரகாஷின் கேமரா அபாரமாக உழைத்திருக்கிறது. ஜிப்ரான் படத்தின் பரபரப்பான, உயிர் உருகுகிற வேளையில் எல்லாம் நம் இதயத் துடிப்பை ஏற்றி வைக்கிறார்.‘அறம்’, நல் அறம்.

குங்குமம் விமர்சனக்குழு