மிஸ்டர் சந்திரமெளலி



பாக்ஸர் கௌதம் கார்த்திக், தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமானவரை ‘நாக் அவுட்’ செய்து அழித்தாரா என்பதே ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக்கின் ஒரே மகன் கௌதம் கார்த்திக் பாக்ஸிங்கில் உயர நினைக்கிறார். அதே நேரத்தில் வெற்றிகரமான கால் டாக்ஸி பிசினஸில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் டைரக்டர் மகேந்திரன். அவருக்குப் போட்டியாக, அதே இடத்தை அடையத் துடிக்கிறார் சந்தோஷ் பிரதாப்.

இவருடைய கால் டாக்ஸியில் பயணிப்பவர்கள் அடுத்தடுத்து பல்வேறு சூழ்நிலைகளில் கொல்லப்படுகிறார்கள். மகேந்திரன் அலுவலகத்தில் பணிபுரியும் வரலட்சுமி சரத்குமாரும் கொல்லப்படுகிறார். இதில் சந்தேகப்பட்டு ஆராயத் தொடங்கும் கார்த்திக்கையும், கௌதமையும் சேர்த்து கொலை செய்கிற முயற்சியில், கௌதம் மட்டுமே மயிரிழையில் தப்பிக்கிறார். விழித்துக் கொண்ட கௌதமின் பழிவாங்கும் படலமே படம்.

அடுத்த கட்டத்துக்கு வருகிறார் கௌதம் கார்த்திக். ரெஜினா வைக் காதலித்துக் கொண்டு அப்பாவியாக இருந்தவர், ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பது செம ஸ்கெட்ச். ஆல் ரவுண்டராக அவர் மாறத் துடிக்கிற அத்தனை முயற்சிகளும் கண்ணில் தெரிகிறது. அடுத்தடுத்து எழும் திருப்பங்களில் பவர் ப்ளேயோடு இறங்கி அடிக்கிறார் இயக்குநர் திரு. கார்த்திக் க்யூட். அசல் அப்பாவும், மகனும் திரையிலும் அதே ரோல்களை ஏற்கும்போது பர்சனல் டச் ஸ்பெஷலாகக் கிடைக்கிறது. இது திருவின் சாதுர்யத்தில் இன்னும் கூடியிருக்கிறது. கோபத்தை, வருத்தத்தை, பாசத்தை உடல்மொழியில் காட்டும் நேர்த்தியில், தான் ஒரு சீஸன்டு பெர்ஃபார்மர் என்பதை கார்த்திக் நிலை நிறுத்துகிறார்.

தடால் தடால் என தூங்கி விழும் கேரக்டரில் ஹீரோவின் பரிதாபத்தை ‘நான் சிகப்பு மனிதனி’ல் சொன்ன மாதிரி, அருகே தெரியும் உருவம் மட்டும் புலப்படுகிற விதத்தில் கெளதம் சண்டை செய்வது நல்ல திருப்பம்.. வரலட்சுமியின் கேரக்டரை இன்னும் செதுக்கியிருந்தால் அது வேறு ஒரு கதைக்கு கருவாகும். அல்லு சில்லு வசனங்களில் அடிக்கடி எஃபெக்ட் கொடுக்கிறார் சதீஷ்.

ரெஜினா கசாண்ட்ரா... ஆசம். அவரும் கௌதமும் பாங்காங்கின் பளீர் நீரில் போடும் ஆட்டம்... கொண்டாட்டம்! ஆகக் குறைந்த நீச்சல் உடையில் ஏறி வரும்போது கண்முன் தெரிவது அழகான அளவுகளுடன் கூடிய சுத்தமான பிம்பம்! கொஞ்ச நேரமே வந்தாலும் டைரக்டர் மகேந்திரன் கெத்து காட்டுகிறார். புன்னகையிலிருந்து அவர் முகம் கடுமைக்கு மாறும் தருணங்களில் திகில்.

கார்த்திக்கின் உயிர் நண்பராக டைரக்டர் அகத்தியன் பயணிக்கும் விதம் நறுவுசு! கால் டாக்ஸி நிறுவன அதிபராக சந்தோஷ் பிரதாப் கேரக்டரும் கச்சிதம். முன்பகுதியில் அப்பா, மகன் உறவிலேயே அதிக நேரம் செலவிட்டிருப்பதால் வேகம் சற்றே பின் தங்குகிறது. சாம் சி.எஸ்ஸின் பின்னணி திகில் டுவிஸ்ட். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு மொத்த கேன்வாஸையும் அழகாக்குகிறது. கௌதம் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனத்தை, இன்னும் பவர்ஃபுல் ஃப்ளாஷ்பேக்கில் காட்டியிருக்கலாம். பழிக்குப் பழி கதையில் ஆக்‌ஷன் ட்ரீட் தரும் வேகத்தில் ‘மிஸ்டர் சந்திரமெளலி’யை ரசிக்கலாம்.

- குங்குமம் விமர்சனக்குழு