அஞ்சு அக்காக்களும் கடைக்குட்டி சிங்கமும்!



குதூகலமும் கும்மாளமும் சரவுண்ட் சவுண்டில் அதிர்கிறது சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2டி’யில். தங்கம் போல் தகதகவென ஐந்து பெண்கள். தவறு, அக்காக்கள்! மௌனிகா, யுவராணி, ஜீவிதா, இந்துமதி, தீபா... என அனைவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தியின் செல்லமான அக்காக்கள். ‘‘நம்ம தம்பிகிட்ட பிடிச்ச விஷயமே அவரோட எளிமையும், இனிமையும்தான்...’’ கோரஸாக ஐவரும் நெகிழ்ந்து முடித்த அடுத்த கணம், ‘‘அக்கா..!’’ என ஐவருக்கும் சேர்த்து குரல் கொடுத்தபடி என்ட்ரி ஆன கார்த்தி சட்டென மெளனிகா பக்கம் திரும்பி ‘‘உங்க கால் எப்படியிருக்கு?’’ என நலம் விசாரித்தார்.

‘‘இப்ப சரியாகிடுச்சு தம்பி...’’ மலர்ந்த மெளனிகா, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நம் பக்கம் திரும்பினார். ‘‘என்ன திகைச்சுப் போய் பார்க்கறீங்க? படத்துல நான் ஃபைட் பண்ணியிருக்கேன்! அப்ப கால்ல அடிபட்டுடுச்சு. அதுல இருந்து என்னைப் பார்க்கும்போதெல்லாம் தம்பி அக்கறையா விசாரிப்பார்...’’ சொல்லும்போதே மெளனிகாவின் கண்கள் கலங்குகின்றன. மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் பெரிய திரையில் அரிதாரம் பூசியிருக்கிறார்.

‘‘அக்கா... இது என் கடமையில்லையா...’’ கண்களில் பாசம் வழிய மெளனிகாவின் தலையைக்  கோதிவிட்ட கார்த்தி, அனைவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு பேசத் தொடங்கினார். ‘‘நான்கு வருஷங்களுக்கு முன்னாடியே டைரக்டர் பாண்டிராஜ் இந்தக் கதையை என்கிட்ட சொல்லிட்டார். ஆக்சுவலா எனக்கு முன்னாடியே இந்தக் கதை ‘2டி’ தயாரிப்பாளர் ராஜசேகருக்கு தெரியும். இதுல நான்தான் நடிக்கணும்னு அண்ணன் சூர்யாகிட்ட அவர் சொல்லிட்டே இருப்பார்.

பாண்டிராஜ் சார் படம் என்றதும் அண்ணனும் ஆசைப்பட்டார். இப்படித்தான் இந்த ப்ராஜெக்ட் ஃபைனலைஸ் ஆச்சு. இதுல நிறை வாழ்க்கை வாழற விவசாயியா நடிச்சிருக்கேன். கூட்டுக் குடும்பத்தோட மகத்துவத்தை ரொம்ப அழகா சொல்ற படம் இது...’’ கார்த்தி சொல்லச் சொல்ல ஆமோதிக்கும் வகையில் அனைத்து அக்காக்களும் தலையசைக்கிறார்கள்.

‘‘படத்துல எங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு பட்டப் பெயர் உண்டு. சண்டக்கோழி, சாமியாடி மங்கம்மா, பாசமலர், உளவுத்துறை... இப்படி...’’ என ஆச்சர்யத்தை பகிர்ந்து கொள்ளும் ஜீவிதா, அடிப்படையில் கார்த்தியின் ரசிகை. ‘‘சொந்த ஊர் ராசிபுரம் பக்கம் நாமகிரிப்பேட்டை. பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிருக்கேன். பரதம்ல பேர் வாங்கணும்னு ஆசை. ஆனா, நடிகையாகிட்டேன். அறிமுகமான படம், ‘என்று தணியும்’. அப்புறம் சின்னத்திரைல வாய்ப்புகள் வர, அந்தப் பக்கமும் போனேன். இப்ப இரண்டிலும் பிசி...’’ என ஜீவிதா முடிக்க, சந்தோஷத்துடன் இந்துமதி பேச ஆரம்பித்தார்.

‘‘எனக்கு கோவை பக்கம். முழுப் பேரு இந்துமதி மணிகண்டன். பி.ஏ. எகனாமிக்ஸ் படிச்சுட்டு விளம்பரப் படங்கள்ல நடிக்கத் தொடங்கினேன். பெரிய திரைல இதுதான் முதல் படம்...’’ என இந்துமதி முடிப்பதற்குள், ‘‘வாரே வாவ்! வெல்கம்... வெல்கம்...’’ என பாய்ந்து கைகொடுத்த யுவராணி, நம் பக்கம் திரும்பினார்.

‘‘உண்மையைச் சொல்லணும்னா இந்தப் படத்தோட 40 நாட்கள் ஷூட் முடிஞ்ச பிறகுதான் நான் கமிட் ஆனேன்! எனக்கே தெரியாத என் திறமையை இந்தப் படத்துல பாண்டிராஜ் சார் வெளிக் கொண்டு வந்திருக்கார்! இதுக்காகவே அவருக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன் பட்டிருக்கேன்!’’ யுவராணியின் கண்கள் கலங்குகின்றன.

‘‘எல்லாம் நல்லதுக்குத்தாம்பா...’’ என அவரைத் தட்டிக் கொடுத்துவிட்டு தன் பங்குக்கு உரையாடத் தொடங்கினார் தீபா. ‘‘நான் தூத்துக்குடி பக்கம் முத்தையாபுரம். சென்னை இசைக்கல்லூரில டான்ஸ் படிச்சேன். பாடகர் வேல்முருகன் சாரும் நானும் ஒரே பேட்ச். சின்ன வயசுல இருந்தே மோனோ ஆக்டிங்ல ஆர்வம். ‘மெட்டி ஒலி’ சீரியல்ல நடிகையா அறிமுகமானேன். தொடர்ந்து சீரியல்கள். ‘வெடிகுண்டு முருகேசன்’ல இருந்து சினிமால டிராவல் பண்றேன். ‘யெல்லோ ஃபெஸ்டிவல்’னு ஒரு ஷார்ட் ஃபிலிம்ல நடிச்சிருந்தேன். அதைப் பார்த்துட்டு ‘செம’ பட வாய்ப்பு வந்தது.

அதோட படப்பிடிப்புல பாண்டிராஜ் சார் என்னைப் பார்த்து இந்தப் படத்துக்கு அழைச்சுட்டு வந்தார்!’’ என தன் பயோடேட்டாவைச் சொல்லி முடித்த தீபா, நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டிவிட்டு கார்த்தி பக்கம் திரும்பினார். ‘‘சத்யராஜ் சாரை அங்கிள்னு கூப்பிட்டுதான் உங்களுக்குப் பழக்கம். அப்படியிருக்கிறப்ப படத்துல ‘அப்பா’னு நீங்க கூப்பிட்டுப் பேசறப்ப தடுமாற்றம் ஏற்படலையா?’’ என கேள்வி கேட்டார்!

‘‘ஓஹோ! ரிப்போர்ட்டர் வேலையும் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா அக்கா!’’ சிரித்த கார்த்தி, ‘‘அங்கிள் மாதிரியான நடிகரோட நடிக்கிறப்ப நமக்கு தடுமாற்றம் ஏற்படாது. அந்தளவுக்கு அங்கிள் கேர் எடுத்துப்பார்...’’ என கார்த்தி சொல்லி முடித்ததும் பேச்சு கேஷுவலாக சென்று இயக்குநர் பாண்டிராஜிடம் மையம் கொண்டது.

‘‘எங்க எல்லாரையும் டைரக்டர்தான் செலக்ட் பண்ணினார். எமோஷனலான காட்சிகளை ஷூட் செய்யறப்ப அவர் அழுதுடுவார்! ஒருவேளை அவருக்கு அழுகை வரலைனா ‘ஒன்ஸ் மோர்’ போகணும்னு எங்களுக்கு புரிஞ்சுடும்! அந்தளவுக்கு கதைல இன்வால்வ் ஆகி எடுத்திருக்கார். ஒண்ணு தெரியுமா? எங்க எல்லாரையும் வேல்ராஜ் சார் அவ்வளவு அழகா காட்டியிருக்கார்!’’ என ஐவரும் ஒரே குரலில் சொல்ல... ‘‘இதோடா... அக்காக்களோட குசும்பை பாரேன்!’’ என கார்த்தி கவுண்டர் கொடுக்க... அந்த ஸ்பாட்டே ஆனந்தம் விளையாடும் வீடானது!       

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்