52 வயது பெண் பாடி பில்டர்!
மும்பை இளசுகளின் ஃபிட்னஸ் ரோல் மாடல், ஆசியன் ஃபிஸிக் மற்றும் பாடிபில்டிங்கில் கலந்துகொண்ட அதிக வயதான பெண், சர்வதேச கராத்தே சாம்பியன், தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு மகன்களுக்குத் தாய், உளவியல் ஆலோசகர், 2,500 பேருக்கு யோகா கற்றுக்கொடுக்கும் ஆசிரியை... என சூப்பர் வுமனாக வலம் வருகிறார் நிஸ்ரின் பரிக்.தவிர, ஆணழகன்களே அசந்து பார்க்கும் சிக்ஸ்பேக், வயதைக் கணிக்க முடியாத தோற்றம், பாப் கட்டிங்கில் மிளிரும் கோல்டன் கலரிங் ஹேர், மணிக்கட்டை அலங்கரிக்கும் டாட்டூக் கள்... என்று ஸ்டைல் காட்டுகிற நிஸ்ரினின் வயது 52.
 நூறு வருடங்களுக்கு மேல் ஆண்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட ஒரு விளையாட்டு பாடிபில்டிங். பல போராட்டங்களுக்குப் பிறகு கடந்த நாற்பது வருடங்களாக பெண்களும் இதில் பங்கேற்று வருகின்றனர். ஆப்பிரிக்க மற்றும் ஜரோப்பிய பெண்களே அதிகமாகக் கோலோச்சி வரும் இவ்விளையாட்டில் இந்தியர் ஒருவர் பங்கேற்பதே பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த நிஸ்ரினின் வருகை விளையாட்டு உலகையே வியக்க வைத்திருக்கிறது. இதற்கு கடந்த வருடம் சியோலில் நடந்த போட்டியின்போது அவருக்குக் கிடைத்த வரவேற்பே சாட்சி.
ஆம்; நிஸ்ரின் மேடையேறியபோது அரங்கிலிருந்த ஆயிரக்கணக்கானோர் எழுந்து நின்று கைதட்டினர். இந்த கைதட்டல், பதக்கத்தை வென்ற பெண்ணுக்குக் கூட கிடைக்கவில்லை. தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்துவரும் நிஸ்ரின், ‘இந்தியப் பெண்கள் பாடிபில்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற நோக்கத்துக்காகவே மேடையேறியிருக்கிறார். வரும் டிசம்பரில் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் ஃபிஸிக் அண்ட் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக களமிறங்குவது நிஸ்ரின்தான். பல வருடங்களாக நடந்துவரும் இப்போட்டியில் ஐம்பது வயதைத் தாண்டிய முதல் போட்டியாளர் இவரே!
-த.சக்திவேல்
|