மீட் மிஸ்டர் சுப்ராநேஷனல்!



மிஸ்டர் இந்தியா சுப்ராநேஷனல், மிஸ்டர் போட்டோஜெனிக், ‘மென்ஸ் ஹெல்த்’ பத்திரிகையின் முன்அட்டையில் இடம்பிடித்த முதல் இந்தியர், மாடல், இதுவரைக்கும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த யாருமே ‘மிஸ்டர் சுப்ராநேஷனல்’ ஆனதில்லை என்ற ஏக்கத்தை உடைத்தவர்... என பிரதமேஷ் மௌலிங்கரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

போலந்தில் நடந்த ‘மிஸ்டர் சுப்ராநேஷனல்’ பட்டத்துக்கான போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் 39 கட்டுடல் காளைகள் கலந்துகொண்டனர்.
இது வெறும் உடல் அழகை காட்டும் போட்டியல்ல. பொது அறிவுத் திறன், பிரச்னையை எதிர்கொள்ளும் லாவகம், சமகால ஃபேஷன் என சகலத்தையும் சோதிப்பார்கள். இவை அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து ‘மிஸ்டர் சுப்ராநேஷனல் 2018’ ஆக வாகை சூடியிருக்கிறார் பிரதமேஷ்.

கபில்தேவைப் போல ஒரு கிரிக்கெட் பிளேயராகி உலகக் கோப்பையை அடித்து வர வேண்டும் என்பது பிரதமேஷின் குழந்தைப் பருவ லட்சியம். கோவாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்ததாலோ என்னவோ கிரிக்கெட் விளையாடக் கூட அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர் கண்ணில் பட்டது எல்லாம் ஃபுட்பால் மட்டும்தான்.

கிரிக்கெட் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு பீச் மணலில் இறங்கி நண்பர்களுடன் கால்பந்து விளையாட ஆரம்பித்தார். ஃபுட்பால் அவரை வசீகரித்து தன்வசப்படுத்த, மாநிலக் கால்பந்து அணியில் 19 வயதிலேயே பிரதமேஷுக்கு இடம் கிடைத்தது.கால்பந்து விளையாட்டில் தனி முத்திரையைப் பதித்த அவர், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு கோவாவின் பெயரைத் தலைநிமிரச்செய்தார்.

முழுநேரக் கால்பந்து விளையாட்டு வீரராக வலம் வந்த அவரை எம்டிவி ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற அழைத்தது. அந்நிகழ்ச்சி அவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. ஆம்; நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் பிரதமேஷின் கட்டுமஸ்தான உடற்கட்டைப் பார்த்து ‘மிஸ்டர் இந்தியா’வில் கலந்துகொள்ளுமாறு ஆலோசனை சொல்ல, இன்று அவர் ‘மிஸ்டர் சுப்ராநேஷனலா’க மிளிர்கிறார்!

த.சக்திவேல்