ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்கே.என்.சிவராமன் - 34
ஓவியம்: ஸ்யாம்


எதிர்பாராத தாக்குதலால் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த சிவகாமி, எப்போது கரிகாலன் தன் கழுத்தில் முகத்தைப் பதித்தானோ... எந்த கணத்தில் அவன்  சுவாசம் தன் சருமத்தை ஒற்றி எடுக்கத் தொடங்கியதோ... அப்போது முற்றிலுமாக தன் வசத்தை இழந்தாள்.துவண்ட கால்களால் ஊன்றி நிற்க முடியவில்லை.  அநிச்சையாக சரியத் தொடங்கினாள்.விழிப்புடன் இருந்த கரிகாலன் இந்த நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். அவளது பலவீனமான  இடத்தை அறிந்திருந்தவன் உடனடியாக தன் முகத்தை கழுத்திலிருந்து கீழ் நோக்கி இறக்கி கச்சைக்கு மேல் திமிறிக் கொண்டிருந்த ஸ்தனங்களின் பிளவில் தன்  உதட்டைப் பதித்தான்!மீட்டப்பட்ட யாழின் தந்திகளாக சிவகாமியின் நரம்புகள் அனைத்தும் அதிரத் தொடங்கின. பிறந்த ஏழு ஸ்வரங்களின் நாதம்,  அக்னிப்பிழம்பாக மாறி அவள் இடுப்பைக் குழைத்தன!

தன்னிலை மறந்து தரையில் படுத்தவள் தன் கால்கள் இரண்டையும் ஒடுக்க முற்பட்டாள். இதற்காகவே காத்திருந்த கரிகாலன் தன் வலுவைப் பயன்படுத்தி  அதைத் தடுத்தான்! வல்லூறுக்குக் கீழ் சிக்கிய குருவியாக சிவகாமியின் நிலை மாறியது. ஊசி முனையில் ஊசலாடிய உணர்ச்சிகளின் முனை சமநிலைக்கு  வரவேயில்லை. படர்ந்த கரிகாலனின் தேகமும், மேயத் தொடங்கிய அவனது உதடுகளும் அதற்கு இடமும் கொடுக்கவில்லை. உடல் கொதிக்கத் தொடங்கிய  கணத்தில்... வதனத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த கரிகாலனின் விரல்கள், அவள் அதரங்களைத் தடவின! தாங்க முடியாமல் தன் முகத்தை உயர்த்தினாள்.  தன் உள்ளங்கையாலேயே அழுத்தி அவள் முகத்தை பழையபடி தரையில் கிடத்தியவன், தேகத்துடன் முழுமையாக உரசியபடியே மேல் நோக்கி நகர்ந்தான்!  நெகிழத் தொடங்கியது தன் கச்சை மட்டுமல்ல... முழு அங்கங்களும்தான் என்பது தெளிவாகவே சிவகாமிக்கு புரிந்தது! ஆனால், வெந்து சாம்பலாவதைத் தவிர  வேறு வழியேதும் அவளுக்குத் தெரியவில்லை!

சரியாக அவள் முகத்துக்கு நேராக வந்த கரிகாலன், தன் இடது கையால் அவள் தலையைக் கோதினான். வலது உள்ளங்கையால் அவள் கன்னங்களைத்  தடவினான். தன் ஆள்காட்டி விரலின் நக நுனியால் ஒரு ஓவியனைப் போல் அவள் முகத்தை பிரதியெடுத்து, அதே வதனத்திலேயே தீட்டத் தொடங்கினான்! நீள் வட்ட முகத்தை வரைந்தவன், பிறகு அவள் புருவங்களைக் கீறினான்! இமைகளின் ரோமங்களை பட்டும் படாமலும் கோடுகளாக்கினான்! நாசியை  அளவெடுத்தான்! மூக்குக்கும் உதடுக்கும் இடைப்பட்ட பகுதியை தன் விரல் ரேகையால் ஒற்றி ஒற்றி எடுத்தான்! மறைந்திருந்த சிவகாமியின் ரோமங்கள்  அனைத்தும் சருமத்தைப் பிளந்து வெளிப்பட முயன்றன!கொதி நிலையின் உச்சத்தில் உடல் வேகத் தொடங்க... அவன் உதடுகளை வரவேற்கும் விதமாக மூடிய  தன் அதரங்களைத் திறந்தாள்! கண்ட கரிகாலனின் கண்கள் நகைத்தன. தன் உதடுகளைக் கீழிறக்கவே இல்லை. மாறாக தன் கட்டை விரலாலும் ஆள்காட்டி  விரலாலும் அவளது கீழுதட்டை ஒன்று குவித்தான். மேலும் கீழுமாக அசைத்தான்!

முகத்தை பக்கவாட்டில் திருப்பியவளின் உடல் சர்ப்பம் போல் வளைந்து நெளிந்தது. இதற்காகவே காத்திருந்த கரிகாலன், சட்டென்று தன்னால் குவிக்கப்பட்ட  அவள் கீழ் உதட்டைக் கவ்வினான். பற்களால் அழுத்தமாகக் கடித்தான்! ‘‘ஆ..!’’ அலறியபடி கண்களைத் திறந்த சிவகாமியின் பார்வையில் தரையில் கிடந்த  குறுவாள் தட்டுப்பட்டது! கொதித்த உடலும் கணத்தில் அடங்கியது! எல்லாமும் நினைவுக்கு வந்தது. படர்ந்திருந்தவனைத் தள்ளிவிட்டு எழுந்தாள். இம்முறை  அவளை அடக்க அவன் முற்படவேயில்லை! தள்ளிவிடுவதற்காகவே காத்திருந்தவன் போல் இயல்பாகப் புரண்டான். மல்லாந்து படுத்தபடியே எழுந்து  நின்றவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையால் கொஞ்சினான். குறிப்பாக கலைந்திருந்த அவள் ஆடைகளையும், நெகிழ்விலிருந்து கடினப்படத்  தொடங்கிய அவள் சருமத்தையும்! காணக் காண சிவகாமியின் உடல் கூசத் தொடங்கியது. அதுவும் அவன் கண்கள்... அதில் தென்பட்ட அலட்சிய சிரிப்பு...பொங்கிய காமம், வன்மமாக உருவெடுத்தது! என்ன அழகாக தன் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்! நினைக்க நினைக்க முகம் சிவப்பேறத்  தொடங்கியது!

தலையில் கைவைத்தபடி வாய்விட்டு சிரிக்கத் தொடங்கியவனைக் காணக் காண பற்றிக் கொண்டு வந்தது. கோபத்துடன் அவனை எட்டி உதைத்தாள்!ஆனால்,  கால் நகம் கூட அவன் அங்கங்களில் படவில்லை! எதிர்பார்த்தவன் போல் படுத்தபடியே விலகி நகர்ந்தவன் நிதானமாக எழுந்து நின்றான். தன் இடுப்பு முடிச்சை  அவிழ்த்து மீண்டும் அதை இறுக்கிக் கட்டினான்!  குறிப்பாக சுவடிக் கட்டை!பார்த்த சிவகாமி கையறு நிலையில் தன் உள்ளங்கைகளை மடக்கி இறுக்கினாள்.  தன்னைக் குறித்த ரகசியங்களைத் தாங்கியிருக்கும் சுவடி அல்லவா..? இதைக்கூட மறக்கும் நிலையிலா இருந்தோம்..? எவ்வளவு தரக்குறைவாக தன்னை  நினைத்திருந்தால் இந்தளவுக்கு தன் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி விளையாடியிருப்பான்..? தேகம் எங்கும் படர்ந்தவன் வேறொரு கண்ணோட்டத்துடன் தன்னை  அணுகியிருக்கிறான் என்பதைக் கூட உணரும் சக்தியை தன் உடல் இழந்து விட்டதா..? அந்தளவுக்கா காதலில் மூழ்கியிருக்கிறோம். அதுவும் தன்னை இழிவாகக்  கருதும் இந்த மனிதனிடம்...

கழிவிரக்கம் மேலோங்க கையறு நிலையில் கண்ணீர் ஊற்றெடுத்தது. வேண்டாம்... இவன் முன் அழ வேண்டாம். அது இன்னும் அசிங்கம். உதட்டைக் கடித்தபடி  தலைகுனிந்தாள். அவள் நிலை கரிகாலனுக்கு நன்றாகப் புரிந்தது. தன்னுடன் கலந்திருந்தவளின் சருமம் கூசி சுருங்குவதைப் பார்க்க ஏனோ அவனுக்குப்  பிடிக்கவில்லை. உண்மைதான். இருவருமே ஒருவரையொருவர் நம்பவில்லை. பரஸ்பர சந்தேகங்கள் இருவரது அணுக்களிலும் நிரம்பி வழிகின்றன. அதற்கு  அத்தாட்சியாக தன் இடுப்பில் சுவடிக் கட்டு கனக்கிறது. தரையில் குறுவாள் விழுந்து கிடக்கிறது.ஆனால், இந்தக் கணத்துக்கு முன்பு இழைந்திருந்த இரு  உடல்களின் செயல்களும் உண்மையானவை. பரிசுத்தமானவை. தன் உடலைவிட்டு உள்ளம் விலகியிருந்தபோதும் அவள் மனம் தேகத்துடன் ஒன்றியிருந்தது  சத்தியம். அந்தக் கணத்தை அசுத்தப்படுத்துவது ஒன்றுபட்டு ஒப்புக்கொடுத்த இருவரது உடல்களையும் அவமதிப்பதற்கு சமம்.

கேள்விகளுக்கு அடுத்த கணத்தில் கூட விடை தேடலாம். ஆனால், ஆற்றுப்படுத்துவதற்காக காத்திருக்கும் இக்கணம் முக்கியமானது.ஒரு முடிவுடன் அவளை  நோக்கி நகர்ந்தான். குனிந்த தலையை சிவகாமி நிமிர்த்தவில்லை. அதேநேரம் தன்னை நோக்கி வரும் கால்களை வரவேற்கவும் தயாராக இல்லை. பின்னோக்கி நகர்ந்தாள். முன்னோக்கி வந்தான்.பின்னோ... முடியவில்லை. சுவர் தடுத்தது. அப்படியே அதனுள் புதைந்துவிடும் நோக்கத்துடன் ஒன்றினாள்.நெருங்கியவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான். வெறுப்புடன் விலக முற்பட்டவளைத் தடுத்து தன் மார்பில் சாய்த்தான். ஒன்றாமல் வெறுமையாக  நின்றாள். கண்டுகொள்ளாமல் தன் கரங்களை அவளுக்குப் பின்புறம் கொண்டு சென்றவன், இறுக்கம் தளர்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை முற்றிலுமாக  அவிழ்த்தான்.இதை சற்றும் எதிர்பார்க்காதவள் தன் தலையை உயர்த்தி அவனைப் பார்வையால் எரித்தபடி ‘‘சீய்...’’ என்றாள்.

கரிகாலன் பதிலேதும் சொல்லவில்லை. மாறாக தன் இரு கரங்களுக்குள் அவளை வலுவாக சிறைப்படுத்தி என்ன ஏது என்று சிவகாமி சுதாரிப்பதற்குள் அவள்  ஸ்தனங்களை சரிசெய்து கச்சையை இறுக்கிக் கட்டினான். பிரமை பிடித்து அவனை ஏறிட்டாள். அவள் வதனத்தை தன் கரங்களில் ஏந்தி வகிட்டின் நுனியில் தன்  உதட்டை நாசுக்காக ஒற்றி எடுத்தான்.சிவகாமி அசையவில்லை. கடினப்பட்டிருந்த... சுருங்கியிருந்த அவள் சருமங்கள் மெல்ல மெல்ல இயல்புக்கு வந்தன. பெரும் மூச்சு ஒன்று அவள் நாசியிலிருந்து வெளியேறியது. அது பாரம் நீங்கியதன் வெளிப்பாடு என்பது இருவருக்குமே புரிந்தது. அந்த பாரம் என்ன என்பதும்! குழைந்ததை தவறாக அவன் எண்ணவில்லை என்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. ஒருவித நிம்மதியுடன் பரந்து விரிந்திருந்த அவன் மார்பில்  தலைசாய்க்க வேண்டும் என்று பீறிட்ட உணர்வை சிரமப்பட்டு அடக்கினாள்.நல்லவேளையாக விலகினான். அப்பாடா என்றும் இருந்தது... ஏன் விலகினாய் என்று  கேட்கவும் தோன்றியது.

இதென்ன... தான், ஏன் இப்படி இருக்கிறோம்..? என்ன நடக்கிறது தனக்குள்..?‘‘சிவகாமி...’’ கரிகாலனின் குரல் கரகரத்தது. ‘‘ம்...’’ கொட்டினாள். ‘‘சுவடிகளைப் பார்க்க  வேண்டுமா..?’’ கேட்டதுடன் நிற்காமல் தன் இடுப்பிலிருந்து அதை எடுக்க முற்பட்டான். ஏற்கனவே மறையத் தொடங்கியிருந்த அவளது கழிவிரக்கம், அவனது  இந்த செய்கைக்குப் பின் முற்றிலுமாகக் கரைந்து மறைந்தது. தன்னை அவன் தவறாக எண்ணவில்லை... நெகிழ்ந்த தன் உடலை அவமதிக்கவில்லை...நிமிர்ந்து  அவனை நேருக்கு நேர் பார்த்தாள். பழைய சிவகாமியாக, எப்போதும் துளிர்விடும் அதே கம்பீரத்துடன்! ‘‘பார்..!’’ சுவடிகளை நீட்டினான். ‘‘தேவையில்லை!’’  அலட்சியத்துடன் சொன்னாள். ‘‘ஏன்..? இது உன்னைப் பற்றிய ரகசியம்..?’’‘‘அறியாதவருக்குத்தான் அறிந்து கொள்ள அது தேவை. எனக்கெதற்கு..?’’ புருவத்தை  உயர்த்தினாள். மலர்ந்து சிரித்தான்.

‘‘தாயார் சொன்னபடி குளித்துவிட்டு வாருங்கள். உணவு தயாராக இருக்கிறது...’’ நகர்ந்தாள். ‘‘நில்!’’ சொன்ன கரிகாலன், தன் கால் விரல் இடுக்கால் குறுவாளின்  பிடியைப் பிடித்தான். மேல் நோக்கி அதைச் சுழற்றினான். பறந்து வந்ததை லாவகமாகப் பிடித்து அவளை நோக்கி வந்தான். தன் இடுப்பில் அவன் கை  வைப்பதற்கு ஏதுவாக மூச்சை இழுத்து தன் வயிற்றை உள்ளடக்கினாள். புரிந்து கொண்டதற்கு அடையாளமாக எந்தக் கீறலும் விழாதபடி குறுவாளை அவள்  இடுப்பில் செருகினான். ‘‘அம்மாவை குத்திவிடாதே!’’‘‘குறி பார்த்தது அவர்களை அல்ல!’’ அழுத்தம்திருத்தமாக சொன்னவள், அவன் மார்பை ஒரு கணம்  பார்த்தாள். ‘‘வைத்த குறியை அகற்றுவதாக இல்லை!’’ பதிலை எதிர்பார்க்காமல் நகர்ந்தாள்.புன்னகையுடன் அவள் மறையும் வரை அங்கேயே நின்ற கரிகாலன்,  பிறகு குளியலறையை நோக்கி நகர நினைத்தான். முடியவில்லை. காரணம், ‘‘நல்லவேளை, சுவடிக் கட்டை அந்தப் பெண்ணிடம் நீங்கள் கொடுக்கவில்லை.  அப்படி மட்டும் நிகழ்ந்திருந்தால் சாளுக்கிய மன்னர் என்னை மன்னித்திருக்கவே மாட்டார்!’’ என்றபடி சாளரத்திலிருந்து ஒரு மனிதன் உள்நோக்கி குதித்ததுதான். அவன், கடிகையில் தான் சந்தித்த பாலகன் என்பதைக் கண்ட கரிகாலன் ஆச்சர்யப்பட்டான்.

(தொடரும்)