மாருதி : 80 வயது இளைஞரின்60 ஆண்டு அனுபவத் தொகுப்பு



ஓவியர் மாருதி என்ற ‘பிராண்ட் நேம்’ தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டாடும் அடையாளம். எண்பது வயதைத் தொடுகிற இளைஞர். ஓவியனாக உருவான  வரலாற்றை சொல்லச் சொல்ல அந்தப் புன்னகையும், சமயங்களில் வெடிக்கிற சிரிப்பும் நிச்சயம் ஒரு பேரனுபவம். அறுபது ஆண்டுகளாக இடையறாத  ஓவியப்பணி. அத்தனை பேருக்கும் இன்சொல், வாரி வழங்கும் புன்னகை. இங்கே மாருதி காட்டியது  இன்னும் பெரிய கேன்வாஸ்.அப்பா புதுக்கோட்டையில்  ஸ்கூல் வாத்தியார். சுதந்திரத்திற்கு முன்னாடியே பிறந்தவன். ஆறு வயதிலிருந்தே கிறுக்கிட்டு இருந்திருக்கேன். யாரும் இதற்கு முன்னாடி ஃபேமிலில  ஆர்ட்டிஸ்ட் கிடையாது. உடைஞ்ச சாக்பீஸ் துண்டுகளில் தரையில் படம் போட ஆரம்பிச்சேன். பாஸிங் ஷோ சிகரெட் பெட்டி, வெட்டும் புலி தீப்பெட்டி படம்னு  எது வேண்டுமானாலும் இருக்கும்.

அப்புறம் பார்த்தால் திடீரென்று ஒரு பேச்சும் பேசாமல், ஒரு சிரிப்பு கூட இல்லாமல் கிழிஞ்ச சட்டையோடு, அழுக்கு வேட்டியோடு கரித்துண்டு வைச்சுக்கிட்டு  எங்கிருந்தோ ஒருத்தர் வருவார். அவருக்கு காலியாக இருக்கிற சுவர்களைத் தெரியும். அவங்க சேகரிப்பில் அவ்வளவு வண்ணங்கள் இருக்கும். ஊர்ல  அவங்களை பைத்தியம்னு சொல்வாங்க. என்னால அப்படிச் சொல்ல முடியாது. அப்படியே வரைஞ்சிட்டு, பின்னாடி தள்ளி நின்னு பார்த்துட்டு போயிடுவாங்க.  நான் கடலைமிட்டாய் கொடுப்பேன். வாங்கிட்டு திரும்பிப் பார்க்காமல் போயிடுவாங்க. அவங்க சிரிச்சு பார்த்தால் நல்லாயிருக்கும். ஆனா, அது நடந்ததேயில்லை.  புத்திதான் எல்லாத்தையும் சரியாகச் செய்யுதுன்னு சொல்றாங்க. என்னால் அதையும் நம்ப முடியலை.அப்புறம் சுவரிலிருந்து பென்சிலுக்கு மாறினேன். எங்க  வீட்டு ஹவுஸ் ஓனர் வந்து பாராட்டினார். இந்த வீட்டை காலி பண்ணிட்டா நாங்க வெள்ளை அடிச்சிடுவோம். அப்புறம் உன் படங்கள் என்ன ஆகும்னு கேட்டார்.

உடனே, நோட்டை எடுத்துக்கிட்டு வரைய ஆரம்பிச்சேன். அப்பா, அம்மாவுக்கு நான் ஓவியன் ஆவதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனாலும், அப்ப ‘ஆனந்த  விகடன்’, ‘குமுதம்’ பத்திரிகைகளை யார் வாங்குறாங்கனு பார்த்திட்டு அவங்க வீட்டுக்குப்போய் வாங்கி அந்தப் படங்கள பார்த்து வரைவேன். அப்புறம்  சென்னைக்கு வந்துட்டேன். கோபுலு, ‘விகடனி’ல் கொடிகட்டிப் பறக்கிறார். ‘கல்கி’யில் மணியம் ராஜ்யம் நடத்துகிறார். ‘குமுதத்தி’ல் வர்ணம் வாஷ் டிராயிங்கில்  எங்கேயோ போறார். அப்படி ஒரு காலகட்டத்தில் நான் சினிமா போஸ்டர் டிசைன் பண்ணுகிற கம்பெனியில் சேர்ந்தேன். மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். அப்ப  ‘குமுதம்’ மாதத்தில் 1, 10, 20 தேதிகளில்தான் வௌிவரும். அங்க போய் கேட்டதில், வரையச் சொன்னார்கள். பிடித்தாலும், மாதம் ஒரு படத்திற்கு மட்டுமே  வாய்ப்பு இருந்தது. நான் அப்போது மயிலையில் ஒரு குடிசையில் இருந்தேன். வேலை செய்கிற கம்பெனிக்குத் தெரியக் கூடாது; ஒரு புனைப்பெயர்  அவசியமானது. ஜம்மி பில்டிங்கின் எதிரே மாருதி பார்மஸி தெரிந்தது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டேன்.

வறுமை தாளவில்லை. ஒரு வீடு இருந்தால் உட்கார்ந்து வரையலாம் என்று தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக என் பெயர் பிரபலமானது. ரெங்கநாதன்  என்றால் அறியாதவர்கள் ‘மாருதி’ என்றால் கை குலுக்கினார்கள். ஒரு தடவை ‘தாய்’ அலுவலகத்திற்கு வலம்புரி ஜானை சந்திக்கப் போயிருந்தேன். நிறையப்பேர்  கூடியிருந்தார்கள். என்னை வந்து விசாரித்துவிட்டு, ‘மாருதி’ என வந்தவுடன் சொல்லக்கூடாதா என்று எனக்கு எல்லா உதவியையும் செய்தார். இந்த வீடு  கிடைக்க அவரே காரணம். திருமணம் செய்துகொண்டேன். இரண்டு தங்கமான பெண் குழந்தைகள். இருவரும் திருமணமாகி சத்தீஸ்கரிலும், ஐதராபாத்திலும்  இருக்கிறார்கள். எனக்கு இந்த வாழ்க்கை மீது எந்த வருத்தமும் கிடையாது.

விடுதியில் தங்கி வரைந்ததெல்லாம் அருமையான காலம். பி.எஸ்.ராமையா, நா.பார்த்த சாரதி, சுஜாதா, பாலகுமாரன், சுப்ரமண்யராஜு, ஜெயகாந்தன் என  எல்லோரும் வந்து போவார்கள். வெளியே முரட்டு மனிதராகத் தெரியும் ஜேகே இங்கே குழந்தை போலிருப்பார். நா.பா.வைப் பார்த்தால் அவ்வளவு உயரத்தில்  அந்தக் கம்பீரமும், அழகும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என்னால் வரைந்து காட்ட முடியும். என்னை அதிகமாகக் கொண்டு சென்றது ‘குமுதம்’தான். ஒரு  தடவை கதைக்கு படம் போடச் சொல்லியிருந்தார் எஸ்.ஏ.பி. அப்போது கலர் பக்கம் கிடையாது. பஸ் ஸ்டாண்ட்... அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல  உடையணிந்த ஒருவன், அங்கே ஓரமாய் நிற்கிற பெண்ணின் காலில் விழுகிறான். அதுதான் அவர் சொன்னது. பேக்ரவுண்ட், அந்தப்பெண், விழுகிற ஆண், பரபரப்பு  பஸ் ஸ்டாண்ட் எல்லாம் சரியாக வந்தும் ஏதோ ஒன்று குறைகிறது. எனக்கும் புரிந்தபாடில்லை. கேள்விக்குறி தொக்கி நிற்கிறது.

ஆபீஸ் போய் படம் எஸ்.ஏ.பி.யிடம் போகிறது. அவருக்கும் அதே உணர்வு. கொஞ்ச நேரம் கண்மூடி யோசிக்கிறார். பக்கத்தில் இருந்த பிலிம்பேரின் ‘கடாவ்’  சேலை விளம்பரத்தைக் காட்டி, கருப்புச் சேலையில் வெள்ளைப் பூக்களை வரையச் சொல்கிறார். நான் வெள்ளைச் சேலையில் கருப்பு பூக்களை இட்டிருந்தேன்.  இப்போது எல்லாம் பூரணமாகிவிட்டது! ஆச்சரியம் என்னவென்றால், எஸ்.ஏ.பி.தான் முதலாளி. அவரைத் தட்டிக் கேட்க ஆளில்லை. அப்படியும் படம் நன்றாக  வரவேண்டுமென நினைக்கிறார். அதேமாதிரி ‘விகடனி’ல் வாலி எழுத, ‘ராமானுஜ காவியம்’ வந்து கொண்டிருக்கிறது. 19 வாரம் வந்தபிறகு கோபுலுக்கு ஸ்ட்ரோக்  வந்து படுக்கையில் இருந்தார். அந்நேரம் பாலன் சார் பார்க்க விரும்புவதாக ‘விகடனி’ல் இருந்து போன் வந்தது. போயிருந்தேன். ‘எனக்கு ஒரு ஹெல்ப் நீங்க  பண்ணணும். கோபுலுக்கு உடம்பு சரியில்லை. உங்களுக்கே தெரியும். வாலி எழுதுகிற தொடர் வந்து கொண்டிருக்கிறது. அவர் படத்தை நீங்களே தொடர  வேண்டும். அது அவரின் விருப்பமும் கூட’ என்றார்.

எழுந்திருக்கும் போது, ‘ஒரு சின்ன விண்ணப்பம்... இப்போது கோபுலு சாயலிலே வரைந்துவிட்டு, பிறகு உங்கள் சாயலுக்கு போய்விடுங்கள்!’ என்றார்.  என்னவொரு கவனிப்பு பாருங்கள். அவர்கள் இருவரும் இருந்த காலங்களில் நான் பணி செய்தது பெரும் பேறு. இப்பொழுதெல்லாம் பத்திரிகைகள் என்னை  மறந்துவிட்டன. ஆனால், வெளியிலிருந்து பெரும் பணிகள் குவிகின்றன. Portrait வகை ஓவியங்களுக்கு என்னிடம் அதிகமாகக் கூடுகிறார்கள். என்னை  இவ்வளவு காலமாக மக்களும் பத்திரிகைகளும் போற்றி வந்திருக்கிறார்கள். இப்பவும், பெயர் அறிந்தவுடனே திடுக்கிட்டு, ‘சார்’ என அணைத்துக் கொள்கிறார்கள்.  சந்தோஷம்தான் உங்களை அணைக்கச் சொல்லும். எனக்கு இவ்வளவு காலத்தில் இத்தனை தூரம் வந்தது மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கிறது. மாருதி வரைந்த பெண்களை இன்னும் நிறையப் பேருக்குப் பிடிக்கிறது. அப்படியானால் என்னையும் பிடிக்கிறது தானே!?

- நா.கதிர்வேலன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்