கோடிக்கணக்கானோரை கொன்று குவித்த வேலி



வேலி என்பது என்ன? ‘தாலிதான் ஒரு பெண்ணுக்கு வேலி’ என்றெல்லாம் அந்தக்கால சினிமாக்களில் பழைய பஞ்சாங்கங்கள் பேசுவார்கள். அப்படியொரு வசனத்தை இன்று கேட்டால், இளைய தலைமுறையினர் சிரித்து விடுவார்கள். அதை விடுங்கள். ‘வேலி’ என்பது ஒரு பாதுகாப்பு அமைப்பு. ‘நீங்களும், உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் நண்பர்களாக நீடிக்க முடிகிறது என்றால் உங்களது இரு வீடுகளுக்கும் மத்தியில் வேலி இருக்கிறது என்று அர்த்தம்’ என்று ஒரு அமெரிக்கக் கவிஞர் எழுதினார். அதாவது, பாதுகாப்புக்கு மட்டுமல்ல; அவரவர் எல்லையை சுமுகமாக வரையறுத்துக் கொள்வதற்கும் வேலிதான் உதவுகிறது.

நிலவுடைமை சமுதாயம் உருவான ஆரம்ப காலக்கட்டங்களில் விவசாயம் செய்யும் நிலம் என்பது பொதுவானதாகத்தான் இருந்தது. எங்கே நிலம் காலியாக இருக்கிறதோ, அங்கே யார் வேண்டுமானாலும் விதைத்து அறுவடை செய்யலாம். காலப்போக்கில் நிலம் தொடர்பான பிரச்னைகள் மனிதர்களுக்குள் எழுந்து, வெட்டுக்குத்து நிலவரம் உருவானது. அதன்பிறகே அப்போதைய ஆள்வோர் தலையிட்டு, அவரவருக்கு உரிமையான நிலம் குறித்த சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள்.

ஒருவருக்கு ஒரு நிலம் உடைமை என்றால், அதன் எல்லையை வரையறுக்கும் பொருட்டு அடையாளமாக வேலி அமைத்தார்கள். இதுவேதான் பிற்பாடு ஊர், மாநிலம், நாடு என்பதற்கெல்லாம் எல்லைகள் அமைத்து ஆள்வதற்கு முன்னுதாரணமாக அமைந்தது. இன்று சேட்டிலைட்டுகள் மூலம் துல்லியமாக எல்லைகளை வரையறுக்க முடியும் என்கிற டிஜிட்டல் யுகத்திலும் எல்லைப் பிரச்னை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. மனித நாகரிகத்தின் தொட்டில்கள் தோன்றிய காலத்தில் உருவான சச்சரவு, கடைசிவரை நீடிக்கத்தான் செய்யும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் பக்கமாக ‘வேலிப்பிரச்னை’ இருப்பதைப் போலவே, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரச்னை நீடிக்கிறது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்திலிருந்தே இந்தப் பிரச்னை உண்டு. பிரிட்டிஷ் இந்தியா, ஆப்கானிஸ்தான் மீது இதனால் போரெல்லாம் தொடுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்தபிறகும் அது தீர்ந்து தொலைத்தபாடில்லை. சண்டை சச்சரவெல்லாம் ஏகத்துக்கும் நடந்து, நிறைய முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று குத்து மதிப்பாக எல்லை பிரித்து வாழ்கிறார்கள்.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக பாகிஸ்தானுக்கு வேறு பிரச்னை. எல்லை என்றிருக்கிறதே தவிர, ஆப்கனைப் பொறுத்தவரை பாகிஸ்தான் திறந்தவீடுதான். எனவே, ஆப்கானிஸ்தானில் ‘சம்பவம்’ செய்யும் தீவிரவாதிகள், சட்டத்திடமிருந்து தப்புவதற்கு பொடிநடையாக பாகிஸ்தானுக்குள் வந்துவிடுவார்கள். தாலிபான் தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது கூட பாகிஸ்தானுக்குள்தான் என்பதை நினைவுறுத்திக் கொள்ளவும்.

எனவேதான், உலகநாடுகள் பலவும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். “அவனுங்க எப்போ வந்தானுங்க, எப்படி வந்தானுங்க, எங்கே வந்தானுங்கன்னுலாம் எங்களுக்கு எப்படி சாமி  தெரியும்?” என்று பாகிஸ்தான் புலம்பும். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காகத்தான் பிரும்மாண்டமான வேலி ஒன்றை இருநாட்டின் எல்லைகளுக்கும் இடையில் அமைக்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 2,600 கி.மீ. தொலைவுக்கு இந்த வேலி அமைக்கப்படும். இப்போதைக்கு சுமார் 1,000 கி.மீ தொலைவுக்கு அமைத்துவிட்டார்கள்.

வேலி அமைப்பதில் உலக சாதனை படைத்தவர்கள் ஆஸ்திரேலியர்கள்தான். அவர்களுக்கு எல்லைப் பிரச்னையெல்லாம் இல்லை. ஆனால், விவசாய நிலங்களை விலங்குகள் நாசப்படுத்துவதை தடுக்க பல்லாயிரம் கி.மீ. நீளத்துக்கு அவர்களது நாட்டையும், காட்டையும் பிரிக்கும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். வேலியை மையமாக வைத்து ‘Rabbit-proof Fence’ என்று ஓர் அருமையான சினிமாவே எடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலும் ஓர் அதிசய வேலி ஒரு காலத்தில் இருந்தது. ‘உப்பு வேலி’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் அவ்வேலி சுமார் 2,500 கிலோமீட்டருக்கு நீண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உப்பு வணிகத்தைக்கட்டுப்படுத்த பிரிட்டிஷார், வட இந்தியாவையே பிளந்து இந்த வேலியை அமைத்திருந்தார்கள். சீனாவின் பெருஞ்சுவர் மாதிரி புகழ் பெற்றிருக்க வேண்டிய இந்த வேலி மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவை நேரிடையாகப் பிரித்தது. இலந்தை உள்ளிட்ட முள்மரங்கள் நான்கு முதல் ஐந்து மீட்டர் உயரத்துக்கு வளர்க்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று புதர்களால் பிணைக்கப்பட்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பே உலகின் மிகப்பெரிய புதர்வேலியாக இருந்தது.

இன்றைய ஒரிஸ்ஸாவில் தொடங்கி மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், சிந்து (பாகிஸ்தான்) வழியாக காஷ்மீர் வரை அமைக்கப்பட்டிருந்த உப்பு வேலியைக் குறித்து நம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க எந்த தகவல்களும் இல்லை என்பதுதான் ஆச்சரியம். இந்த வேலியைப் பற்றிய தகவல்களை விரிவாக வெளிக்கொண்டு வந்தவர் பிரிட்டிஷ்காரரான ராய் மாக்ஸ்ஹாம். ‘The great hedge of India’ என்று அவர் எழுதிய நூல் இந்திய வரலாற்றை, அசைக்க முடியாத ஆதாரங்களோடு மீளாய்வு செய்யவைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்நூல் தமிழிலும் ‘உப்பு வேலி’ என்கிற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தியாவில் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய டபிள்யூ எச். ஸ்லீமான் என்பவர் எழுதியிருந்த பழைய புத்தகம் ஒன்றை யதேச்சையாக வாசித்தார், லண்டன் பல்கலைக்கழக நூலகத்தின் ஆவணக் காப்பாளரான ராய் மாக்ஸ்ஹாம். அதில் உப்பு வேலி குறித்த தகவல்களை வாசித்தவுடன், அந்த வேலியைப் பார்க்க வேண்டுமென ஆவல் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்தார்.

அவரிடமிருந்த மேப்பை வைத்து உத்தரப் பிரதேசத்தில் அந்த வேலியைத் தேடினார். அது இருந்ததற்கான அடையாளமே இல்லை. 2500 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி. அதில் பதினாறாயிரம் பேர் வேலை செய்திருக்கிறார்கள். இப்படியொரு அமைப்பு ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருக்கிறது என்றால், இதில் ஏதோ ஓர் உள்குத்து இருக்க வேண்டுமென்று ராய்க்கு மனசில் பட்டிருக்கிறது. அவர் விரிவாக ஆராய்ந்து கொணர்ந்த தகவல்கள் பதைபதைப்பை ஏற்படுத்துபவை.

1876 - 78ஆம் ஆண்டுகளில் கோடிக்கணக்கானோர் பஞ்சம் காரணமாக உயிரிழந்தார்கள். குறிப்பாக வங்காளத்தில் கொத்து கொத்தாக செத்தார்கள். அங்கு மட்டுமே சுமார் முப்பது லட்சம் பேர். இத்தனைக்கும் முந்தைய ஆண்டுகளில் நல்ல விளைச்சல் நிகழ்ந்திருப்பதாக ஆவணங்கள் சொல்கின்றன. பிரிட்டிஷார், திட்டமிட்டு ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சம் அது. ஓரிடத்தில் விளைந்த பொருட்களை தேவையேற்படும் இடங்களுக்குக் கொண்டு செல்ல பிரிட்டிஷார் அமைத்த உப்புவேலிகளே பெரும் தடையாக இருந்திருக்கின்றன.

அப்படிப்பட்ட பஞ்சம் நிலவியபோது கூட உப்புக்கு விதிக்கப்பட்டிருந்த அநியாய வரியினை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கிக்கொள்ள முன்வரவில்லை. இறந்தவர்களில் கணிசமானோர் உப்புக் குறைபாடு நோயால்தான் இறந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பல கோடிப் பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாலோ என்னவோ, அடுத்த சில ஆண்டுகளில் சுங்கவேலி முறை நீக்கப்பட்டது. ரயில் பாதைகள் வந்துவிட்டதாலும்,

நிர்வாகரீதியாக வேறு சில வசூலிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாலும் கூட அந்த கொலைகார வேலிக்கு முக்கியத்துவம் போயிருக்கலாம்.
எனினும், வரலாற்றில் தங்களுக்கு நிரந்தர கலங்கம் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் அந்த வேலி குறித்த அத்தனை தகவல்களையும் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அழித்திருக்க வேண்டும். காப்பதற்குத் தான் வேலி என்று யார் சொன்னது? கொடுங்கோலர்கள் கையில் சிக்கினால், அது கோடிக்கணக்கான மக்களை அழிக்கவும் செய்யும்.

- யுவகிருஷ்ணா