மியூசி மியூசிக்கல்



தலபுராணம்

சுற்றிலும் வயலின்கள். நடுவே பிரம்மாண்டமான பியானோக்கள். அதைத் தாண்டினால் கிதார்களும், சாக்ஸபோன்களும், புல்லாங்குழல்களுமாக கண்ணாடிப் பேழையில் நிரம்பிக் கிடக்கின்றன.  அவற்றுடன் இன்னும் நிறைய இசைக்கருவிகள் அங்குள்ள இரண்டு தளங்களின் அலமாரிகளையும் அலங்கரிக்கின்றன. காண்போரைப் பரவசப்படுத்தும் இந்த இடம் இருப்பது பரபரப்பான அண்ணா சாலையில்!

காஸ்மோபாலிடன் கிளப்புக்கும் புகாரி ஹோட்டலும் இடையே அழகாக வீற்றிருக்கும் ஒரு பழமையான பாரம்பரியம்மிக்க இசைக் கூடமே ‘மியூசி மியூசிக்கல்’. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு திரையிசை ஜாம்பவான்கள் இசை கற்றுத் தேர்ந்த இடம்.  இதன் வயது 177.  இப்படியொரு இசைக் கூடத்தை ஆரம்பித்தவர் ஒரு போர்த்துகீசியர். பின்னர், ஒரு ஜெர்மானியர் வழிநடத்த, பிறகு ஒரு பிரஞ்சுக்காரரும், பிரிட்டிஷ் பெண்மணியும் இணைந்து முன்னேற்றினர். நிறைவாக, ஓர் இந்தியர் அதை வாங்கி தன் சுவாசமாக நடத்தினார்.

ஐந்து நாட்டு இயக்குநர்களைச் சந்தித்த இக்கூடத்தின் கதை 1842ம் வருடத்திலிருந்து தொடங்குகிறது. மிஸ்கித் என்கிற போர்த்து கீசிய இசைக் காதலன் நீலகிரியில் பியானோக்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். அன்று பியானோக்கள் இருந்த வீடுகளிலும், தேவாலயங்களிலும் இந்தப் பணியைத்திறம்பட மேற்கொண்டார் அவர். பின்னர் இதையே பிசினஸாக தொடங்க ஆசைப்பட்டவர் வந்து சேர்ந்த இடம் மெட்ராஸ்.

அன்றைய மவுண்ட் ரோட்டில், ‘மிஸ்கித் அண்ட் கோ’ என்ற பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்றைய அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலையின் எதிரே இருந்தது இந்நிறுவனம். இசைக் கருவிகளைப் பழுது பார்ப்பது மட்டுமே இதன் பிரதான வேலை. ஏற்கனவே பல்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாக சென்று வந்ததால் இந்தியாவிலும், லாகூர், பினாங், பர்மா எனப் பல்வேறு இடங்களிலும் கிளைகளைப் பரப்பினார் மிஸ்கித். சுமார் பதினாறு கிளைகள் அன்று மிஸ்கித் அண்ட் கோவிற்கு இருந்தன.

ஒருகட்டத்தில் எல்லா கிளைகளையும் மூடிவிட்டு மெட்ராஸ் கிளையை மட்டும் நடத்தலானார். பிறகு, என்ன காரணத்தினாலோ இதையும் அவரின் ஜெர்மானிய நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார் மிஸ்கித். அந்த ஜெர்மானிய நண்பரும் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கவில்லை. சில காலம் நடத்திவிட்டு சொந்த நாட்டுக்கே திரும்பலாம் என்றெண்ணிய போது அவரின் நண்பர் எட்ஜர் ஆலன் ப்ருதோம் என்பவர், ‘நிறுவனத்தை மூட வேண்டாம். நானே வாங்கிக் கொள்கிறேன்’ என முன்வந்து 1893ம் வருடம் மிஸ்கித் அண்ட் கோவைப் பெற்றுக் கொண்டார்.

ப்ருதோம் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கப்பல் வணிகர். பாண்டிச்சேரியில் இருந்தாலும் அங்கிருந்து மெட்ராஸ் வந்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். இவரே, இன்றுள்ள ‘மியூசி மியூசிக்கல்’ என்ற பெயரை வைத்தவர். உண்மையில், இந்நிறுவனத்தின் பெயர் ‘மியூசே மியூசிக்கல்’. ‘மியூசே’ என்றால் பிரஞ்சு மொழியில் மியூசியம் என்று அர்த்தம். இசைக்கான ஓர் அருங்காட்சியகம் என்ற பெயரிலேயே ப்ருதோம் வைத்தார். இவருடன் இவரின் தோழியான எமி டி ரோஸாரியோவும் சேர, பழுது பார்க்கும் பணியுடன் இசைக் கருவிகள் விற்பனையும் ஜோராக ஆரம்பமானது.

ஸ்பெயினைப் பூர்வீகமாகக் கொண்ட எமி டி ரோஸாரியோ பிரிட்டிஷில் குடியேறிவிட்டவர். இவர் சிறந்த பியோனோ கலைஞர் மட்டுமல்ல, இசை ஆசிரியையும் கூட. மியூசி மியூசிக்கலுக்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்குவதற்கு உதவியாக செயல்பட்டார். சேல்ஸ் அண்ட் சர்வீஸ் எனப் பரபரப்பானது மிஸ்கித் அண்ட் கோ நிறுவனம். 1920களில் இந்நிறுவனத்தில் நிதி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தார் இந்தியரான கிரிதர்தாஸ். 1940களில் சுதந்திரப் போராட்டம் வேகமெடுக்க ப்ருதோமும் வயது மூப்பால் நோய்வாய்ப்பட்டார். இதனால், நிறுவனத்தை விற்றுவிட்டு இந்தியாவிலிருந்து கிளம்ப முடிவெடுத்தார் எமி.

இந்நேரம் நிதி இயக்குநரான கிரிதர்தாஸ் இந்நிறுவனத்தை, தானே வாங்கிக் கொள்வதாகச் சொல்ல, மியூசி மியூசிக்கலின் முதல் இந்திய உரிமையாளர் ஆனார் அவர்! அன்றிலிருந்து இன்று வரை இந்நிறுவனத்தை அவருக்குப் பிறகு அவரின் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் மவுண்ட் ரோட்டிலிருந்த இந்நிறுவனம் இப்போதைய ஸ்பென்சர் பிளாசாவின் எதிர்ப்புறம் சென்றது. பின்னர், 1930களில் இன்றுள்ள இடத்திற்கு மாறியது. இப்போது மியூசி மியூசிக்கல் இருக்கும் இடம் அன்று பார்த்தசாரதி கோயில் யானையின் கூடாரமாக இருந்துள்ளது! பியானோக்கள் வைக்க இடம் பெரிதாக வேண்டுமென இந்த இடத்தைத் தேர்வு செய்தவர் கிரிதர்தாஸ்தான்.

ஆரம்பத்தில் இந்நிறுவனம் பியானோ, கிதார் என மேற்கத்திய இசைக் கருவிகள் விற்பனையையே முதன்மையானதாகக் கொண்டிருந்தது. மேற்கத்திய இசையை மட்டுமே ஊக்குவித்தது. கிரிதர்தாஸ் வந்தபிறகு கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைகளுக்கும் இசைக் கருவிகளுக்கும் முக்கியத்துவம் தந்தார். ஏனெனில் கிரிதர்தாஸ் ஹிந்துஸ்தானி இசையில் நல்ல பயிற்சியும் அனுபவமும் பெற்றிருந்தார்.

சரி, சுதந்திரத்திற்குப் பிறகு எப்படி வளர்ந்தது?


அந்தக் கதையை நம்மிடம் விவரித்தார் கிரிதர்தாஸின் பேரனும், மியூசி மியூசிக்கல் நிறுவனத்தின் இப்போதைய சிஇஓவுமான கிஷோர் தாஸ். ‘‘1960களில் அரசு மேற்கத்திய இசையைவிட பாரம்பரிய இசையே முக்கியம் என்றது. அத்துடன் நிற்காமல் வெளிநாட்டு இசைக் கருவிகளை ஆடம்பரப் பொருட்கள் என வகைப்படுத்தி அதிக வரி போட்டது. கிட்டத்தட்ட முந்நூற்றிமுப்பது சதவீத வரி! இதனால், இசைக் கருவிகள் விலை அதிகமாகி பலரும் வாங்கத் தயங்கினர். தவிர, நிறைய பேர் இசை என்பது மேல்தட்டு மக்களுக்கானது என நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

சுமார் முப்பது வருடங்கள் இந்நிலைமைதான். ஒரு தலைமுறையே இந்த இசைக் கருவிகளை வாங்க முடியாமல் போனது. அப்போது நாங்கள் இசைக் கருவிகளைக் குறைந்த விலைக்கு வாடகைக்கு விட்டும், இந்திய இசைக் கருவிகளை விற்கவும் செய்தோம். இந்திய இசைக் கருவிகளை நாங்களே தயாரித்தோம். இதற்கிடையே தாத்தா இறந்ததும் மாமா ஹரிசரண்தாஸ் நிறுவனத்தை ஏற்று நடத்தினார். பின்னர் 1966ம் வருடம் இசையை எளிய மக்களிடமும் கொண்டு செல்ல ஓர் இசைப் பள்ளியைத் தொடங்கினோம்.

அதற்கு முன்புவரை குருகுலம் போல அந்தந்த இசைமேதைகளின் வீடுகளுக்கே சென்று கற்று வந்தனர். இந்தப் பள்ளியைத் தொடங்கி ஒரே குடையின் கீழ் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு வந்தோம். அத்துடன் பள்ளியை லண்டனிலுள்ள ட்ரினிடி இசைக் கல்லூரியுடன் இணைத்து தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கி வருகிறோம்.   

இதிலும் முதன்மையானதாக மேற்கத்திய இசையையும், அதனுடன் இந்திய இசையையும் கற்றுத் தந்தோம். இங்கே இரண்டு மேதைகள் இருந்தனர். ஒருவர் ஜேக்கப் ஜான். நாற்பது வருடங்களாக இங்கே பயிற்றுவித்தவர். இன்னொருவர் துரைசாமி சார். இவரிடம் இளையராஜாவும், ஜேக்கப் சாரிடம் ஏ.ஆர்.ரஹ்மானும் பயின்றனர். இவர்கள் இருவரும் ட்ரினிடி கல்லூரி சான்றிதழும் பெற்றனர். இவர்களைப் போலவே பல்வேறு திரை இசையமைப்பாளர்களும் இங்கே பயின்றுள்ளனர்.

பின்னர் எங்கள் நிறுவனம் மேற்கத்திய இசைக் கருவிகளையும் இந்தியாவில் தயாரித்தது. மெல்ல மெல்ல வளர்ந்து இசை தொடர்பான அனைத்து கருவிகளையும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்தது. ஆனாலும், பழுது பார்ப்பதில் எப்போதும்போல எங்கள் பணி தொடர்ந்தே வந்தது. உதாரணத்திற்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி வாசித்த பழைய கால ஸ்டெயின்வே பியானோ, ரவீந்திரநாத் தாகூர் வாசித்த பியானோ, தில்லி விமானப் படை அலுவலர் சங்கத்தில் இருந்த நூற்றாண்டு காலம் கடந்த பியானோ என எல்லாவற்றையும் சரிபார்த்த பெருமை எங்கள் இசைக் கூடத்துக்கு இருக்கிறது!

இத்துடன், உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் ரவி ஷங்கர், உஸ்தாத் படே குலாம் அலி ஆகிய இசை மேதைகளின் உள்நாட்டு, வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளுக்கு அவர்களின் இசைக் கருவிகளை சரி பார்த்துக் கொடுப்பதையும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறோம். இந்த இசைக் கூடத்தில் கால்பதிக்காத இசை மேதைகளே இல்லை! 1996க்குப் பிறகு சாதாரண பட்டியலுக்கு மேற்கத்திய இசைக் கருவிகள் மாற்றப்பட்டதும் விலை குறைந்து, பலராலும் வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இப்போது சேல்ஸ் அண்ட் சர்வீஸ் உடன் இசைக் கல்வி கொடுப்பதையும் முக்கிய பணியாக வைத்துள்ளோம்.

இப்போது எங்கள் இசைப் பள்ளியில் ஆறு வயது முதல் 83 வயது வரை சுமார் 1500 பேர் படிக்கிறார்கள். இவர்களுக்குச் சொல்லித் தர 28 ஆசிரியர்கள் இருக்கின்றனர். வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரை பயிற்றுவிக்கிறோம். இந்த இடம் தவிர, சோழிங்கநல்லூர், சேலையூர், அண்ணா நகர், அடையாறு பகுதிகளிலும் எங்கள் இசைப் பள்ளியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தவிர, ஹைதராபாத்திலும், பெங்களூரிலும் சென்டர்கள் உள்ளன.

இன்று நாங்கள் இசையில் ஆர்வம் உள்ள ஏழை மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை கொடுத்து படிக்க வைக்கிறோம். எங்களால் முடிந்தவரை இசைக்குச் சேவை செய்வோம்...’’ நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் கிஷோர் தாஸ்.

மியூசிக் அசோசியேஷன்...


* இந்நிறுவனத்தின் பொறுப்பில் ‘மெட்ராஸ் மியூசிக் அசோசியேஷன்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் துணைத் தலைவராகவும் இருக்கிறார் கிஷோர் தாஸ்.
* 1893ம் வருடம் எழும்பூரிலுள்ள செயின்ட் ஆண்டரூ சர்ச்சில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் மேற்கத்திய இசையைப் பரப்புவது.
* இந்த அமைப்பின் பாடகர் குழுவும் சிம்பொனி இசைக்குழுவும் அனைத்து இசையையும் நிகழ்த்தியுள்ளது.

- பேராச்சி கண்ணன்