ரத்த மகுடம்



பிரம்மாண்ட சரித்திர தொடர் - 38

‘‘பல்லவர்கள்!’’ நிதானமாகத்தான் கரிகாலன் அந்த ஏழு எழுத்துக்களையும் உச்சரித்தான். ஆனால், ஈரேழு உலகங்களும் நடுங்குவதுபோல் அந்த பாலகன் பிரமை பிடித்து நின்றான்! ‘‘என்ன சொல்கிறீர்கள் வணிகரே..?’’ தன் செவிகளை நம்ப இயலாமல் பாலகன் தடுமாறினான். ‘‘உண்மையை!’’ என்றபடியே தன் நயனங்களை எட்டுத் திசையிலும் கரிகாலன் சுழலவிட்டான். ‘‘பாதங்களை இந்தளவுக்கு கவனமாக எடுத்து வைத்து ஊன்றுபவர்கள் பல்லவ வீரர்கள்தான்! இதற்காக தனிப் பயிற்சியே அவர்களுக்கு அளிக்கப்படுகிறது!’’

‘‘அப்படியானால் உங்களைத் தாக்க எதற்காக இவர்கள் முயற்சிக்க வேண்டும் அண்ணா..?’’ இக்கட்டான அந்தக் கணத்திலும் வாய்விட்டு கரிகாலன் சிரித்தான். ‘‘‘உங்கள்’ என என்னை விலக்கி வைத்ததன் வழியாக நாம் இருவரும் வேறு வேறு என்பதை உணர்த்தி விட்டாய்!’’ ‘‘அண்ணா...’’ ‘‘இதில் வியப்படைய ஏதும் இல்லை. சொல்லப்போனால் முன்பே தெரிந்ததுதான்..!’’ ‘‘...’’ ‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்? எப்போது சாளுக்கிய மன்னரின் விஸ்வாசியாக நீ இருக்கிறாயோ அப்பொழுதே நாம் இருவரும் எதிர் எதிர் திசைகளில் பயணம் செய்பவர்கள்தான் என்பதை உணர்த்திவிட்டாய்.

மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து இந்தக் கணத்தில் என்னைக் காப்பாற்ற முயற்சிக்கிறாய்! மற்றபடி வாளை எடுத்து என்னைத் தாக்கவே உன் புஜங்கள் துடிக்கின்றன! ஸ்ரீராமபுண்ய வல்லபரைப் போல் என்னைச் சிறை செய்யவே அடி மனதிலிருந்து விரும்புகிறாய்!’’ ‘அதில் தவறொன்றுமில்லையே...’’ தன் பார்வையை விலக்கினான் பாலகன். ‘‘பிழையென்று நானும் குறிப்பிடவில்லையே! அவரவர் நாட்டுப் பற்று அவரவர்களுக்கு!’’ தன் கரங்களை உயர்த்தி விரல்களுக்கு சொடுக்கு போட்டான்.

அடுத்த தாக்குதலுக்கு தன் உடலை கரிகாலன் தயார்படுத்துகிறான் என்பது பாலகனுக்கு புரிந்தது. கரங்களையே வாளாக மாற்றும் வல்லமை படைத்தவன் என்பதை சில கணங்களுக்கு முன் கண்கூடாகப் பார்த்திருக்கிறான். ‘வாள்’ வீச்சில் சாய்ந்தவர்கள் வேறு அத்தாட்சியாக தரையில் மயக்கமடைந்து கிடக்கிறார்கள்! ஆனால், தன் வீரர்கள் எனத் தெரிந்தும் எதற்காக கரிகாலன் மீண்டும் ஒரு தாக்குதலுக்கு ஆயத்தமாகிறான்..? ‘‘அண்ணா...’’ மெல்ல பேச்சை ஆரம்பித்தான். ‘‘சொல் தம்பி!’’‘‘இன்னும் பலர் சுரங்கத்தை சூழ்ந்திருப்பதாகச் சொன்னீர்கள்...’’

‘‘ஆமாம்! அவர்களது சுவாச ஒலி உன் செவியில் விழவில்லையா..?! அதோ அந்தச் சிலைக்கு அப்பால் கூட ஒருவன் மறைந்திருக்கிறானே!’’ அந்தப் பக்கம் பார்த்துவிட்டு பாலகன் உமிழ்நீரை விழுங்கினான். ‘‘தயங்காமல் கேள் தம்பி!’’ ‘‘அடிபட்டு விழுந்திருப்பவர்கள் போல் மறைந்திருப்பவர்களும் உங்கள் நாட்டை... வந்து பல்லவர்களாக இருக்கலாம் அல்லவா?’’ ‘‘இருக்கலாம் அல்ல! அவர்களேதான்!’’ ‘‘அப்படியானால் நீங்கள் இப்போது தாக்குதலுக்குத் தயாராவது..?’’

 ‘‘சொந்த நாட்டைச் சேர்ந்தவர்களை வீழ்த்தத்தான்!’’ பட்டென்று கரிகாலன் சொன்னான். ‘‘உங்கள் நண்பர்களையா..?’’ பாலகனின் குரலில் வியப்பு வழிந்தது.
‘‘தோழர்களாக இருந்தவர்கள்! இப்போது யாருக்குப் பணிபுரிகிறார்கள் என்று அறிய வேண்டாமா..?’’ இதை சத்தமாகச் சொன்ன கரிகாலன், மேலும் குரலை உயர்த்தினான். ‘‘ஒருவேளை தன் எண்ணத்துக்கு இணங்க வைக்க என் பெரிய தாயார் இவர்களை அனுப்பியிருக்கலாமே!

ஸ்ரீராமபுண்ய வல்லபர் இப்படிச் செய்யும்படி என் தாயாரை முடுக்கிவிட்டிருக்கலாமே! என்ன... நான் சொல்வது சரிதானே!’’ சுரங்கம் முழுக்க அவன் குரல் எதிரொலித்ததே தவிர பதிலேதும் வரவில்லை! கரிகாலனின் கண்கள் இடுங்கின. செவிகள் உயர்ந்தன; கூர்மையடைந்தன. மெல்லியதாக ஒலித்த சுவாசங்களின் ஒலியை ஒன்றுதிரட்டினான். ஒவ்வொன்றாகப் பிரித்தான். உடற்பயிற்சி மற்றும் மல்யுத்தப் பயிற்சியினால் வலுவான உடல்களில் இருந்து வெளியேறும் சுவாசங்கள் எப்படி இருக்கும் என அவனுக்கு நன்றாகத் தெரியும்!

அவற்றை எல்லாம் ஒருபுறமாக ஒதுக்கினான்! இவை அனைத்தும் வீரர்களுக்குச் சொந்தமானவை! எஞ்சி நின்றது ஒரேயொரு சுவாசம்! அந்த ஒலியை உள்வாங்கி வாட்களைக் கூர்மைப்படுத்துவது போல் மனதுக்குள் தட்டினான்! இறுகிய உடலுக்குச் சொந்தமான சுவாசம் அதுவல்ல என்பது கணத்தில் புரிந்தது.  இந்த உடலுக்கு உரியவர் சற்றே பருமனானவராக இருக்க வேண்டும்! வயிறு பெருத்தவர்! தொடைகள் பொல பொல என்று இருக்க வேண்டும்.

கால்களை அடிக்கடி அகற்றும் ஒலி வேறு காற்றைக் கிழிக்கிறது. அதாவது மல்யுத்தங்களுக்கு பழக்கப்படாதவர். சுவாச ஒலி சர்ப்பம் போல் ‘உஸ்ஸ்ஸ்ஸ்...’ என்றிருக்கிறது. அநேகமாக வீரர்களுக்கு தலைமை ஏற்று வந்திருக்க வேண்டும்! ஆராய்ந்தவன் மெல்ல மெல்ல தன் மனதில் சித்திரம் வரைந்தான். பருமன். வயிறு. பொல பொல தொடைகள். அகற்றுவதும் ஒன்றுசேர்வதுமான பாதங்கள். பெருமூச்சாக வெளியேறும் சுவாசம்...  ‘‘மறைந்திருந்துதான் உங்களுக்குப் பழக்கமில்லையே! எதற்காக சிரமப்பட்டு ஒடுங்கி நிற்கிறீர்கள்?

வெளியே வாருங்கள்..!’’ கரிகாலன் குரல் கொடுத்தான். பாலகன் வியப்புடன் அவன் பார்வை பதிந்த இடத்தை உற்றுப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. கையிலிருந்த பந்தத்தை உயர்த்தினான். கிடைத்த வெளிச்சத்திலும் அங்கிருந்த சிலை மட்டுமே தெரிந்தது. குழப்பத்துடன் கரிகாலனை ஏறிட்டான். அப்பார்வையை அவன் எதிர்கொள்ளவில்லை. மாறாக புன்னகை தவழும் முகத்துடன் அதே இடத்தைப் பார்த்து சத்தம் போட்டான். ‘‘உங்களைத்தான்! வெளியே வாருங்கள் காபாலிகரே!’’ அடுத்த கணம் சிலையின் பின்புறமிருந்து காபாலிகர் வெளியே வந்தார்.

பந்தத்தின் ஒளியில் அவர் முகம் முழுக்க பற்களாகியிருந்தது! ‘‘கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன்...’’  ‘‘நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்பது தமிழர் வழக்கு!’’ அறைவதுபோல் அவர் தோளில் ஓங்கித் தட்டினான் கரிகாலன். ‘‘இந்த வேலைக்கு உங்களை நியமித்தவர் யார்..? புலவர் தண்டியா..?’’ ‘‘இல்லை...’’ பதிலளித்த காபாலிகர், பாலகனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னார். ‘‘சாளுக்கிய மன்னர்!’’ கரிகாலனும் பாலகனும் ஒருசேர அதிர்ந்தார்கள்.

‘‘அவர் எதற்கு உங்களை, அதுவும் பல்லவ வீரர்களுடன் இந்த சுரங்கத்துக்கு அனுப்ப வேண்டும்?’’ பாலகனின் குரலில் சந்தேகம் பூரணமாக நிரம்பியிருந்தது. ‘‘உங்களை இதிலிருந்து விடுவிக்க! கடிகையில் உங்களைத் தேடத் தொடங்குவார்களாம். நீங்கள் இல்லை என்று தெரிந்தால் ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு சந்தேகம் அதிகரித்துவிடுமாம். எனவே கரிகாலரை காஞ்சிக்கு வெளியே அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னை ஏற்கச் சொல்லிவிட்டு உங்களை கடிகைக்கு உடனடியாகத் திரும்பச் சொன்னார்!’’

 ‘‘பல்லவ வீரர்களை உடன் அழைத்துச் செல்லும்படி சொன்னதும் அவர்தானா..?’’ பாலகன் இகழ்ச்சியுடன் கேட்டான். ‘‘இல்லை! தனிப்பட்ட முறையில் எனக்குத்தான் கட்டளையிட்டார். தனி மனிதனாக என்னால் இதைச் செய்ய முடியுமோ முடியாதோ என சந்தேகம் வந்தது. எனக்கு நம்பகமானவர்கள் பல்லவ வீரர்கள்தான்! எனவே, அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து காஞ்சிக்கு வெளியில் இருந்து சுரங்கத்துக்குள் நுழைந்தேன்!’’

‘‘வெளிப்படையாக இதை எதிர்கொண்டு சொல்லியிருக்கலாமே! எதற்காக மறைவாக நின்று தாக்குதலை நிகழ்த்த வேண்டும்..?’’ பாலகன் கொக்கி போட்டான். ‘‘கரிகாலர் இன்னமும் அதே கூர்மையுடன் இருக்கிறாரா என சோதிக்க நினைத்தேன்!’’ ‘‘காரணம்..?’’ பாலகன் புருவத்தை உயர்த்தினான். ‘‘காஞ்சிக்கு வெளியே அவர் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன!’’ ‘‘அது என்னவோ..?’’ ‘‘சொல்ல அனுமதியில்லை! அது பல்லவர்களின் ரகசியம்! சாளுக்கிய மன்னரே அதுகுறித்துக் கேட்காதபோது நீ... நீங்கள் கேட்பது சரியல்ல!’’ காபாலிகன் இப்படிச் சொல்வான் என்று பாலகன் எதிர்பார்க்காததால் விழித்தான்.

அதுவரை அமைதியாக இருந்த கரிகாலன் வாய் திறந்தான். ‘‘இதற்கு மேல் உரையாடல் அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் காபாலிகர் இனி இதுகுறித்து எந்த பதிலும் சொல்ல மாட்டார். கேட்பது முறையுமல்ல. தம்பி...’’

‘‘அண்ணா...’’ ‘‘இவர் மீது இன்னமும் சந்தேகம் இருக்கிறதா..?’’ பாலகன் அமைதியாக நின்றான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக காபாலிகன் தன் இடுப்பில் இருந்து முத்திரை மோதிரம் ஒன்றை எடுத்தான். அது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க முத்திரை மோதிரம்! பார்த்ததுமே பாலகனின் முகத்தில் இருந்த சந்தேகம் அகன்றது. ‘‘நல்லது அண்ணா... நான் உத்தரவு வாங்கிக் கொள்கிறேன்!’’ சொல்லும்போதே அவன் குரல் தழுதழுத்தது.

கண்ட கரிகாலன் உணர்ச்சிவசப்பட்டான். சட்டென அவனை இழுத்து அணைத்தான்! கரிகாலனின் மார்பில் பாலகன் ஒன்றினான். கணங்களுக்குப் பின் விடுவித்தான். ‘‘பந்தத்தை எடுத்துக் கொண்டு கடிகைக்கு பத்திரமாகச் செல் தம்பி! எங்களுக்கு பழக்கப்பட்ட பாதைதான். ஒளி தேவையில்லை. வாய்ப்பு அமையும்போது நேரில் சந்திக்கலாம். அநேகமாக அது போர்க்களமாக இருக்கும் என்று நினைக்கிறேன்! எதிர் எதிர் அணியில் நின்றபடி அவரவர் கடமையை இருவரும் நிறைவேற்றுவோம்!’’

‘‘அண்ணா...’’ ‘‘சாளுக்கிய மன்னருக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துவிடு!’’ பதில் பேசாமல் குனிந்து கரிகாலனின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு பாலகன் விடைபெற்றான். வந்த வழியே பந்தத்துடன் மறைந்தான். அவன் செல்வதையே மவுனமாக கரிகாலன் பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் கலங்கின. காலடி ஓசை தேய்ந்து மறைந்ததும், காபாலிகன் பக்கம் திரும்பி கண்களால் ஜாடை காட்டினான்.

இருள் பழகியதும் பிறந்த ஒளியில் அந்த செய்கை காபாலிகனுக்கு தெளிவாகப் புரிந்தது. குனிந்து மயங்கியிருந்த வீரர்களின் கன்னத்தில் மூன்று முறை தட்டினான். சட்டென்று விழுந்திருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்! ‘‘நீங்கள் சொன்னபடியே எல்லாம் நல்லபடியாக நடந்திருக்கிறது...’’ முணுமுணுத்த காபாலிகன், சாளுக்கிய மன்னரின் முத்திரை மோதிரத்தை கரிகாலனிடம் கொடுத்தான். ‘‘இந்தாருங்கள் மன்னர் உங்களிடம் கொடுத்த முத்திரை மோதிரம்!’’

அதை வாங்கி தன் இடுப்பில் கரிகாலன் பத்திரப்படுத்தினான். ‘‘எங்கே உங்களிடம் ‘மன்னர் கொடுத்த முத்திரை மோதிரத்தைக் காட்டுங்கள்’ என அந்த பாலகன் கேட்டுவிடுவானோ என்று பயந்தேன்!’’ காபாலிகன் பெருமூச்சு விட்டான். ‘‘அப்படிக் கேட்டிருந்தால் நமது உத்தி வேறு மாதிரியாகியிருக்கும்! சுரங்கத்துக்குள் நுழைவதற்கு முன்னால் ரகசியமாக நான் வைத்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு நன்றாக நடித்தாய்!’’

‘‘ஒற்றர்களின் கலை!’’ தலைதாழ்த்தினான் காபாலிகன். ‘‘பேச நேரமில்லை. எப்போது வேண்டுமானாலும் நம் குட்டு வெளிப்பட்டு விடும்...’’ ‘‘அதற்கு வாய்ப்பு இருக்கிறதா..?’’ ‘‘இருக்கிறது! நாம் நடித்திருப்பது பாலகனிடம் அல்ல. சாளுக்கிய மன்னரிடம்! இதை மறந்துவிடாதே...’’ சொன்ன கரிகாலன் மயங்கியதுபோல் நடித்த பல்லவ வீரர்களை ஏறிட்டான். ‘‘அடி பலமாகப் பட்டுவிட்டதா..?’’ ‘‘இல்லை. பயிற்சிக் காலத்தை நினைவுபடுத்தியது!’’ பெருமையுடன் சொன்னார்கள்.

மலர்ச்சியுடன் அவர்களை அழைத்துக்கொண்டு வந்த வழியே கரிகாலன் திரும்பினான்! ‘‘பாதை இதுவல்ல...’’ காபாலிகன் மெல்ல குரல் கொடுத்தான். ‘‘தெரியும்! நாம் காஞ்சிக்கு வெளியே செல்லப் போவதில்லை...’’ ‘‘பிறகு..?’’ ‘‘காஞ்சியில் இன்னும் முடிக்க வேண்டிய பணி இருக்கிறது!’’ அதற்குமேல் கரிகாலன் எதுவும் பேசவில்லை. காபாலிகனும் பல்லவ வீரர்களும் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

கால்கள் தடுமாறாமல் இருளில் நடந்து சென்ற கரிகாலன், சட்டென்று ஓரிடத்தில் நின்றான். அங்கே நான்கைந்து சிலைகள் திசைக்கு ஒன்றாக செதுக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சிலையின் இடுப்பில் கை வைத்தான். ‘‘எதிர்பார்த்தேன் சிவகாமி...’’ என்றபடியே அவள் நாபியில் தன் ஆள்காட்டி விரலை நுழைத்து ஒரு சுற்று சுற்றினான்!

(தொடரும்)

- கே.என்.சிவராமன்