என் கதைகளை திருடி லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாங்க!



அதிர்ச்சியில் உறையும் பெண் எழுத்தாளர் முத்துலட்சுமி ராகவன்

கதை திருட்டு என்பது சினிமாவில் மட்டுமல்ல புத்தக உலகிலும் சகஜமாக நடக்குதுங்க.. அதுவும் ஆன்லைன்ல இந்த பிசினஸ் படு ஜரூரா நடக்குது. நூத்துக்கும் மேலான என் கதைகளை முகம் தெரியாத யாரோ சிலர் ஆன்லைனில் திருட்டுத்தனமா பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கறாங்க! அப்படி சில தளங்களின் மீது புகார் அளிச்சா அவங்க என்னை வேற விதமா பயமுறுத்தறாங்க! அதாவது பலான கதைகளை நான் எழுதினது மாதிரி அதுக்கு என் பெயரை வைச்சுடறாங்க!

பொறுமைக்கும் எல்லையிருக்கு. கதை திருட்டு மோசடியில் ஈடுபடும் தளங்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போறேன்...’’ அதிர்ச்சியும் எச்சரிக்கையுமாக பேசுகிறார் எழுத்தாளர் முத்துலட்சுமி ராகவன். 182 நாவல்களுக்கு மேல் எழுதியவர், எழுதிவருபவர் இவர். ‘‘சொந்த ஊர் திண்டுக்கல். அங்கதான் பிறந்து வளர்ந்தேன். அப்பா ஆசிரியர். அம்மா ஹவுஸ் வொஃய்ப். எனக்கு ரெண்டு தங்கைங்க. ஒரு தம்பி. தவிர ஒரு அண்ணன் இருந்தார்.

அவருக்கு பனிரெண்டு வயசு இருக்கும் போது குடும்பப் பகை காரணமா அண்ணனை கொலை பண்ணிட்டாங்க. அந்த அதிர்ச்சில இருந்து இப்ப வரை என்னால மீள முடியலை. அப்ப எனக்கு வயசு பத்து. அந்த வலியையும் துக்கத்தையும் கவிதைகளா எழுத ஆரம்பிச்சேன். கல்லூரில எம்.ஏ. வரலாறு படிச்சேன். அப்புறம் போஸ்டல் டிபார்ட்மென்ட்ல வேலை கிடைச்சது...’’ எனச் சொல்லும் முத்துலட்சுமியை சிறுகதை, நாவல்கள் எழுதத் தூண்டியவர் அவரது கணவர் ராகவன்தான்.

‘‘24 வயசுல எனக்கு திருமணமாச்சு. அரேஞ்சுடு மேரேஜ்தான். கணவர் ராகவன், திண்டுக்கல்லுல பார்ட்னர் ஒருவருடன் இணைந்து உரம், பூச்சிக்கொல்லி மருந்துக்கடை வச்சிருந்தார். கல்யாணத்துக்குப் பிறகு ஒருநாள் என் கவிதைகளைப் படிச்சவர், ‘இனிமே நெகட்டிவ்வான கவிதைகள் எழுதாத... உன் எழுத்து நடை நல்லா இருக்கு. கதைகள் எழுத ஆரம்பி. அதுவும் பாசிட்டிவ்வான நாவல்களா எழுது’னு சொன்னார்.

அதுல இருந்த நியாயம் புரிஞ்சது. முதன்முதலில் அந்தாதி டைப்ல ‘நிலாவெளியில்...’னு ஒரு கதை எழுதினேன்...’’ எனச் சொல்லிக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த கணவர் ராகவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தொடந்தார் முத்துலட்சுமி. ‘‘தொடர்ந்து கதைகள் எழுத ஆரம்பிச்சேன். அதை பத்திரிகைகளுக்கும், பதிப்பகங்களுக்கும் அனுப்பி வைப்பேன். எல்லாமே போன வேகத்துல திரும்பிடும்.

திண்டுக்கல் பக்கம் ஒரு கிராமத்துல உள்ள போஸ்டாபீஸ்ல ஒர்க் பண்ணினேன். அந்த ஆபீஸுக்கு பக்கத்துல ஒரு லைப்ரரியைப் பார்த்ததும் சந்தோஷமாகிடுச்சு. அலுவலக நேரம் போக மீதி நேரம் அங்க இருப்பேன். அப்பதான் ‘அருணோதயம்’ பதிப்பக புத்தகங்களை வாசிக்க ஆரம்பிச்சேன். அவங்க அப்ப அறிமுக எழுத்தாளர்களை அதிகம் ஊக்குவிச்சாங்க. நானும் ஒரு இன்லண்ட் லட்டர்ல என்னைப்பத்தின விவரங்களை அந்த பதிப்பகத்துக்கு அனுப்பினேன்.

மறுநாளே அங்கிருந்து அருணன் ஐயா பேசினார். என்னோட ‘நிலாவெளியில்...’, ‘தொடுவானம்’ ரெண்டு கதைகளும் உடனே பப்ளிஷ் ஆச்சு. அச்சுல என் எழுத்துக்களைப் பார்த்ததும் அப்படியொரு சந்தோஷம். உற்சாகமா தொடர்ந்து எழுத ஆரம்பிச்சேன்...’’ பேசிக் கொண்டே வந்த முத்துலட்சுமி திடீரென அமைதியானார். சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார். ‘‘அந்த டைம்ல உடம்புக்கு முடியாமப் போச்சு. பிரைன் டிபி! ட்ரீட்மென்ட்டே பத்து வருஷங்கள் போச்சு.
இடைல வேலையை ரிசைன் பண்ணிட்டேன். மூளைல பாதிப்பு ஏற்பட்டதால கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ் வரை போய் மீண்டு வந்தேன். அப்புறமும் சரியாகலை. நாலஞ்சு அறுவை சிகிச்சைகள் பண்ண வேண்டியதா போச்சு. ஓடியாடி வேலைசெய்ய முடியாது. ஆனாலும் கற்பனைக் குதிரை பறந்ததால எழுத்துல தீவிரமானேன். ‘அருணோதயம்’ல ஏறக்குறைய நாற்பது கதைகளுக்கு மேல் பப்ளிஷ் ஆச்சு. அப்புறம் இன்னொரு பதிப்பகத்துல இருபது கதைகளும், 15க்கும் மேற்பட்ட மாத நாவல்களும் பிரசுரமாச்சு. என்ன வருத்தம்னா...

அச்சான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்த பிறகும் என் கதைகள் மறுபிரசுரமாகலை. தவிர எத்தனை காப்பீஸ் பிரிண்ட் பண்ணினாங்கனு தகவல் சொல்லலை. ஒரு நாவலுக்கு இவ்வளவுனு சொற்பமான தொகையைத் தருவாங்க. அதை போஸ்டல்ல உடன் வேலை பார்க்கிறவங்களுக்கு ட்ரீட் வைக்கிறப்ப செலவு பண்ணிடுவேன். என் நாவல்களை என் கணவர் சின்னச் சின்ன கடைகளுக்கு கொண்டு போய் டெலிவரி பண்ணுவார். அப்ப என் கதைகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கறதை தெரிஞ்சுக்கிட்டேன்.  

இதைப் பத்தி பதிப்பாளர்கள்கிட்ட சொன்னதும் என் நாவல்களை பிரசுரிப்பதை நிறுத்திட்டாங்க. ஆனாலும் எழுதறதை நான் நிறுத்தலை. தொடர்ந்து எழுதினேன்...’’ என்ற முத்துலட்சுமி, தீவிரத்துடன் ஆன்லைன் திருட்டுக்கு வந்தார். ‘‘அச்சுல வெளியான என் நாவல்களை அப்படியே ஸ்கேன் செஞ்சு இணையத்துல யார் யாரோ ஏத்த ஆரம்பிச்சாங்க. இதைப் பார்த்து அதிர்ந்துட்டேன். இன்னொரு ஷாக் என்னன்னா... இணையத்துல புழங்கற பலர் என் வாசகர்களா இருந்தது. இந்த விஷயமே எனக்கு அப்பதான் தெரிஞ்சுது. சந்தோஷத்தை விட துக்கம்தான் அதிகரிச்சுது!

ஸ்ட்ரெஸ்ஸாகி பிரெஷ்ஷரும், சுகரும் அதிகரிச்சு... ரொம்ப சிரமப்பட்டேன். சோஷியல் மீடியாக்கள் பத்தின அறிவு அப்ப இல்ல. கடந்த சில வருஷங்களாதான் ஃபேஸ்புக் இருக்கிற விஷயமே தெரியும்னா பார்த்துக்குங்க. இப்படி ஆன்லைன்ல அடுத்தவங்க கதைகளைத் திருடி சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சதும் திக்குத் தெரியாத காட்டுல தவிக்கிற மாதிரி இருந்தது. 2007ல இருந்து இந்தத் திருட்டு நடந்துட்டு இருக்கு.  எந்த தளத்துல... எந்த லிங்க்ல என் கதைகள் என்னென்ன வந்திருக்குனு தகவல்களை சேகரிச்சு கமிஷனர் ஆபீஸ் போயி புகார் கொடுத்தோம்.

அப்பதான் பல எழுத்தாளர்களோட படைப்புகள் இப்படி திருட்டுத்தனமா பதிவேற்றப்பட்டு சம்பாதிக்கப்பட்டு வர்றது தெரிஞ்சுது. இதுவரை 152 டைட்டில்கள்ல நாவல்கள் கொண்டு வந்திருக்கேன். அதுல சில பாகம் பாகமா எழுதப்பட்டது. இதையும் கணக்குல கொண்டா 182 நாவல்கள் எழுதியிருப்பேன். 200 நாவல்கள் எழுதுறதுதான் இப்போதைய லட்சியம். அதுவரை பகவான் அருளணும்! நான் எழுதினதுல ‘ஏழு ஸ்வரங்கள்’ எனக்குப் பிடிச்ச கதை.

அது ஒரு வரலாற்று நாவல். காஞ்சிபுரம் உட்பட பல இடங்கள்ல ஆய்வு செய்து எழுதினேன்...’’ மூச்சுவிடாமல் சொன்ன முத்துலட்சுமியை அணைத்து ஆறுதல் சொன்னார் ராகவன். கண்களைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார். ‘‘பதிப்பகங்கள் என் கதைகளை வாங்காம போனதால, எனக்கென பிளாட்ஃபார்ம் கிடைக்கல. இந்த நேரத்துலதான் என் கணவர் எனக்கு கைகொடுத்தார்.

அவரோட உரக்கடை பிசினஸை பார்ட்னர்கிட்ட ஒப்படைச்சுட்டு என் கூட சென்னை வந்து ‘லட்சுமிபாலாஜி’, ‘விஷ்ணு பப்ளிகேஷன்’னு எனக்காகவே பதிப்பகங்கள் ஆரம்பிச்சார். இப்ப என் எழுத்துக்கள் எல்லாம் எங்க பதிப்பகத்துல வருது. இதுபோக எனக்காகவே ‘பவளக்கொடி’, ‘பொற்கொடி’, ‘சுடர்க்கொடி’ மாத நாவல்களையும் தொடங்கியிருக்கார். இவர் மட்டும் இல்லைனா நானோ என் எழுத்தோ இல்ல...’’ நெகிழும் முத்துலட்சுமி ராகவனின் மகன் பாலசந்தர், எம்பிபிஎஸ் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.                                            

- மை.பாரதிராஜா