எல்லா காதல்லயும் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் இருக்கு!



* ரஞ்சித் ஜெயக்கொடியின் காதலிசம்

‘‘எங்கேயோ ஒரு காட்டுக்குள் கிடக்கிற கல், திடீரென ஒரு  வீட்டுக்கு முதல் கல்லாவது போல, கோடி பூக்கள் கொட்டிக் கிடக்கிற வனத்தில் ஒரு பூவைத் தேர்ந்தெடுக்கிற  மனசு காதலுக்குத்தான் வாய்க்கும்! எந்த கணிதத்துக்கு உள்ளும் அடங்காத மனக்கணக்கு காதல். காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... ஒன்றை உணர்தல்! இப்படியெல்லாம் காதலைச் சொல்லலாம். ஆனால், காதல் என்பது அழகிய பித்து நிலை.

கலீல் கிப்ரானின் கவிதை ஒண்ணு, ‘நாங்கள் காதல் வயப்பட்டோம். நடுவே ஒரு திரை விழுந்தது’ என வருது. திரை விழுந்ததுன்னா உங்க குறையும், அவங்க குறையும் தெரியாது. காதல் இருவரின் குறைகளையும் சவுகரியமாக மறைத்து விடுகிறது. இப்படி காதலின் சில பக்கங்களைப் பேச வருகிறது‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம்...’’ அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. ‘புரியாத புதிரி’ல் பேசப்பட்டவர்.

தலைப்பே வித்தியாசமா இருக்கு!

ஜெயகாந்தன் சார் சிறுகதை தலைப்புகளில் ஒன்று. எனக்கு அவர்மேல் பெரும் ஈர்ப்பு உண்டு. இதில் இரண்டு குணாதிசயங்கள் பற்றி வருது. இஸ்பேட் ராஜாவை அட்டையில் பார்த்தால் கருப்பு பக்கத்திலிருக்கும். ஆதிக்க மனப்பான்மையில், மூர்க்கமான உருவத்தில் இருக்கும். இந்தப் பக்கம் இதயராணி எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி அழகில் கவர்வார். இந்தப் படம் முரட்டுத்தனமான, பிடிவாதமான காதல் கதை. ஹரிஷ் கல்யாணுக்கு சாக்லெட் பாய் இமேஜ் இருக்கு. இதில் அவரை வேறுமாதிரி ஆக்கியிருக்கோம்.

எல்லாக் காதலுமே கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் பின்பற்றியதுதான். அந்தப் பித்து நிலையின் உச்சத்தில் கேள்வி எழுப்பியதுதான் இந்தக்கதை. அன்பு எந்த இடத்தில் ஆதிக்கமாக மாறுது... ஆதிக்கம் செலுத்தினால் அது நிஜமாகவே அன்புதானா என்ற ஒரு கேள்வியையும் எழுப்பி நிற்கிறது. காதல் மீது எந்த அபிப்பிராயத்தையும் இங்கே வைக்கலை. கேள்விதான் எழுப்புகிறேன். காதல் சமத்துவம் இல்லையோன்னு சந்தேகத்தின் பேரில் எனக்கு சில எண்ணங்கள் வருது.  ஒன்று, அன்பின் பெயரால் ஆதிக்கம் செலுத்துகிறோம். அல்லது அன்பின் பெயரால் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம். இதில் சமத்துவம் எங்கே இருக்கு?

அன்பு என்பது சமத்துவம் நிரம்பியது. எல்லா கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களும் அபத்தங்களும் கொண்டதே காதல். இதுக்கு தெய்வத்தன்மை கொடுத்து பெரிசா எதையாவது சொல்றோமோ, காதலை ஓவரா பெரிது படுத்துறோமோ.... காதலின் ஆழம், அர்த்தம் எதுவும் புரியாமல் ‘நாங்களும் லவ் பண்றோம்ப்பா!’ எனத் திரிகிற இந்த ஹைடெக் வாழ்வின் அவஸ்தைகளையும் இதில் சொல்ல விரும்புகிறேன். அன்பே வன்முறையாக இடம் மாறுகிற பொழுதுகள்... இப்படிப்பட்ட கேள்விகளின் தேடலாகவும் இந்தப்படம் இருக்கும்.


ஹரிஷ் எப்படி இதில் மாறியிருக்கார்..?

ஒருபடி அவரை நிச்சயமாக உயர்த்தும். இந்தக் கதைக்கு முன்னாடி வேறு ஒரு கதைதான் சொல்லி ஓகே செய்து வைத்திருந்தேன். நான்கு கதைகள் ஒருசேர ஓரிடத்தில் சந்திக்கிற மாதிரி அது இருந்தது. ஆனால், ஹரிஷைப் பார்த்து பழகினதும் எனக்கு வேற ஒன்று தோன்றியது. அவர் இதில் பெரிய ஹீரோவாக எனக்குத் தெரிந்தார். புரடியூசர், ‘என்ன திடீர்னு வேற கதை சொல்றீங்க’ன்னு சொன்னதும், என் பக்கத்தை எடுத்துரைத்தேன்.

கதையையும் கேட்டுவிட்டு சந்தோஷமாகவும் ரைட்டுன்னு சொல்லி ஆரம்பிச்சு முடிச்சது இந்தக்கதை. தனியாக இதில் தன் திறமையைக் காட்டின அளவில் ஹரிஷ் அருமை. ‘இதுவரைக்கும் நீங்க கேட்ட 100 கதையை மறந்திடுங்க. வேகமாக பைக் ஓட்டுங்க, கொஞ்சம் பாக்சிங் பழகி, ஜிம்மில் பழியாகக் கிடந்து வாங்க’னு சொன்னேன். பணிவான ஸ்டூடண்ட் மாதிரி இரண்டு மாதத்தில் அப்படியே வந்து நின்றார். இன்னிக்கு நிமிர்ந்த உடம்பும், மூர்க்கமும், காதலுமாக ஹரிஷ் ரெடி..

அருமையாக இருக்கார் ஷில்பா மஞ்சுநாத்..!

நல்ல டயலாக்ஸ் இருக்கு. தமிழில் உணர்ந்து பேசினால் நல்லாயிருக்கும். ‘தொடர்ச்சியாக எடுக்க கணிசமாகத் தேதிகளை ஒதுக்கித் தரணும்’னு கேட்டபோது எல்லாம் சம்மதித்தார். ‘எனக்குக் கதை ரொம்பவும் பிடிச்சிருக்கு’னு சொன்னபோது கண்களில் ஒளி தெரிந்தது. இந்தப் படத்திற்குப் பின்னாடி அவரை ‘தாரா’னு கூப்பிடுவாங்கனு நினைக்கிறேன்.


பாடல்கள் நல்லாயிருக்கே...

‘புரியாத புதிர்’ல் நான் அறிமுகப்படுத்திய சாம்.சி.எஸ்., ‘விக்ரம் வேதா’ வரை தாண்டி ஓர் இடத்தில் இருக்கார். எப்பவும் அவரை அணுகலாம். ஓரிடத்தில் ஓர் இசைத் துணுக்கை ரெடி பண்ணி கொடுத்து, அதற்கேற்ற மாதிரி படம் பிடித்தது எல்லாம் நல்ல அனுபவம். ஐந்து பாடல்கள். அனிருத் பாடி ஒன்று ஏற்கனவே பிரபலம். ஒளிப்பதிவாளராக கவின்ராஜ் அறிமுகமாகிறார். என்னோடு ஆறுமாதம் இந்தக் கதையில் பயணித்தார். படம் பார்த்தபிறகு ஒளிப்பதிவாளர் யார் எனப் பெரிய தேடல் எழும். அதற்குப் பிறகு நீங்கள் வரும்போது எனது பெருமைக்கு அடுத்த அறிமுகம் கவின்ராஜ் என்று குறிப்பிட்டுப் பேசுவேன்.

இதற்குப் பின்னால் விஜய்சேதுபதிக்கு ஒரு படம் 2020ல் செய்கிறேன். நான் பாதுகாப்பாகவும், உயிராகவும் உணர்வது சேதுவின் நட்பு. அவரின் தயாரிப்பில் ஒரு வெப் சீரிஸ் செய்யலாம் என்பது பரிசீலனையில் இருக்கிறது. மற்றும் சேதுவின் சினிமாவிற்கு முன்னதாக ஹரிஷ் உடன் இன்னொரு படம் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது!        

- நா. கதிர்வேலன்