29 முறை இமயமலைக்குச் சென்ற 99



தேசிய விருது பெற்ற கல்வியாளர் சித்ரன் நம்பூதிரிபாட். கேரளா நூறு சதவீத கல்வியறிவுடன் திகழக் காரணமானவர்களில் ஒருவர். இவரின் பெயரை  மலப்புரத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சூட்டியிருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் ஒருவரின் பெயரை அரசுப் பள்ளிக்கு வைப்பது இதுவே முதல்முறை.விஷயம் இதுவல்ல.‘‘வயது என்பது வெறும் எண். சாதிக்க அது தடையில்லை...’’ என்று உற்சாகக் குரல் கொடுக்கும் சித்ரன், உயரமான மலைகளின் காதலன். 
உடலை உறைய வைக்கும் கடுங்குளிரும், கரடு முரடான பாதைகளும், பனி மலைகளும் சூழ்ந்த இமயமலைக்கு 29 தடவை சென்று வந்திருப்பது இவரது  சாதனை!‘‘1952ல் நண்பர்கள் சேர்ந்து இமயமலைக்கு டிரிப் அடித்தோம். அதுதான் என் முதல் பயணம். ருத்ரபிரயாக்கைக் கூட எங்களால தாண்ட முடியலை.  உயர உயரப் போக ஆக்சிஜன் குறைஞ்சிட்டே இருந்துச்சு. அங்கே சாப்பிட்ட உணவும் சரியா செரிக்கலை. வயித்துக் கோளாறால பாதியிலேயே ஊருக்குத்  திரும்பிட்டோம்...’’ என்கிற சித்ரன் மலப்புரத்தில் பிறந்தவர். கேரளாவில் கல்வித்துறையில் கூடுதல் இயக்குனராகப் பணிபுரிந்தவர்.

‘‘முதல் பயணமே தோல்வியில் முடிந்ததால் கொஞ்சம் துவண்டு போயிட்டேன். நாலு வருசம் கழிச்சு 1956ல் மறுபடியும் ஒரு டிரிப் அடிச்சேன். இப்ப இருக்குற  சாலை, போக்குவரத்து வசதியில் ஒரு சதவீதம் கூட அப்ப இல்லை. சுமார் 90 கி.மீ தூரம் காட்டுக்குள்ள நடந்திருப்பேன். இமயமலையை அடைஞ்சபோது  கிடைச்ச உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்த உணர்வுதான் மறுபடியும் மறுபடியும் அங்கே போக என்னைத் தூண்டுது...’’ நெகிழ்கிற சித்ரனின்  வயது 99.இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் இவர் அசைவத்தைத் தொடுவதே இல்லை. தினமும் காலையில் 3 இட்லி, 20 நிமிட யோகா, ஒரு மணி  நேரம் நடை, பழங்கள் மற்றும் காய்கறிகள்தான் இவருடைய ஆரோக்கியத்தின் ரகசியம்.தனது 30வது இமயமலைப் பயணத்தை இந்த வருடத்தின் இறுதியில்  தொடங்கவிருக்கிறார் சித்ரன்!                                            

-த.சக்திவேல்