Facebook உருவாக்கியிருக்கும் அகராதி!



தலைப்பைப் படித்ததும் ஷாக் அடிக்கிறது அல்லவா..? அதேதான். ஆனால், உடான்ஸ் அல்ல.இப்படியொரு டிக்‌ஷனரியை உருவாக்க ஃபேஸ்புக் என்ன செய்தது  தெரியுமா..? சுமார் 5 லட்சம் பயனாளிகளை தேர்வு செய்தது.  இந்த ஐந்து லட்சம் பயனாளர்கள் உண்மையான ஃபேஸ்புக் பயனாளர்கள். Fake ID அல்ல!  அதாவது நீங்களே ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்கைத் துவங்க முடியும் அல்லவா? அது போல் ஃபேஸ்புக்கில் ஒரு லட்சம் பயனாளர்கள் இருக்கிறார்கள்  என்றால் சுமார் 50% வரை ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்கைக் கொண்டிருக்கும் போலியான பயனாளராகத்தான் இருப்பார்கள்!
இதையெல்லாம்  ஆராய்ந்து சரியான பயனாளர்களை ஃபேஸ்புக் தேர்ந்தெடுத்துக் கொண்டது. இதன் பிறகு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளரின் நியூஸ் ஃபீடிலும் -  அதாவது தங்கள் முகநூல் பக்கத்தை அவர்கள் திறந்ததும் எந்தெந்த பதிவுகள்... யாருடைய நிலைத்தகவல்கள் வர வேண்டும் என்பதை முடிவு செய்தார்கள்.இதன் அடிப்படையில் சில பயனாளர்களுக்கு சோகமான அல்லது சங்கடத்தைத் தரக்கூடிய அல்லது எதிர்மறையான செய்திகளை மட்டும் அவர்கள் பார்க்கும்படி  அமைத்தார்கள்! வேறு சிலருக்கு மகிழ்ச்சியான செய்திகள் மட்டும் தெரியும்படி அல்காரிதத்தை மாற்றியமைத்தார்கள்.

இப்போது சோகமான செய்திகளைத் தொடர்ந்து படித்தவர்களின் ரியாக்‌ஷன் என்ன..? மகிழ்ச்சியான செய்திகளை அடுத்தடுத்து வாசித்தவர்களின் அடுத்தகட்ட  நடவடிக்கை என்ன என்பதைக் கவனித்தார்கள்.பரிசோதனையில் தெரியவந்தது இதுதான்.தொடர்ந்து சோகமான செய்திகளைப் பார்த்த பயனாளர்கள் அடுத்து  தேர்ந்தெடுத்த அனைத்தும் சோகமான அல்லது எதிர்மறையான கருத்தாகவே இருந்தது! அதே போல்  மகிழ்ச்சியான செய்தி பார்த்தவர்கள் சந்தோஷமான  கருத்துக்களையே கசியவிட்டார்கள்! சுருக்கமாகச் சொல்வதென்றால், படித்த ஸ்டேட்டஸில் இருந்த உணர்வுநிலை அப்படியே தொற்றியிருக்கிறது!இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். குறிப்பிட்ட நபரின் பதிவு அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தி சோகமாக / மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை எப்படி  ஃபேஸ்புக் முடிவு செய்தது / செய்கிறது?

சிம்பிள். லெக்ஸிகன் அனாலிஸிஸ் ( Lexicon Analysis) என்னும் முறை. அதாவது, பல ஆய்வுகளுக்குப் பின் உணர்வுநிலை அகராதி ஒன்றை ஃபேஸ்புக்  தயாரித்திருக்கிறது! இதன் அடிப்படையில் வெளிப்படும் வார்த்தைகளைக் குறிப்பிட்ட உணர்வுகளுக்குப் பொருத்துகிறார்கள்!உதாரணத்துக்கு சந்தோஷம், சிரிப்பு,  ஜாலி, கலக்கல், நிறைவு... etc... etc... என்றால் மகிழ்ச்சி! அழுகை, வெறுப்பு, etc... etc... என்றால்  சோகம்!இப்போது ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிலுள்ள  வாக்கியத்தில் இருக்கும் சொற்களைப் பிரித்தெடுத்து அதை தங்கள் உணர்வுநிலை அகராதியில் பொருத்திப் பார்த்து என்ன உணர்வென்று ஆராய்ந்தார்கள் /  ஆராய்கிறார்கள் / ஆராய்வார்கள். அந்த வாக்கியங்களில் சந்தோஷம், சிரிப்பு, புன்னகை, ஜாலி, வெற்றி, வென்றுவிட்டேன், வாழ்த்துகள்... என்பது போன்ற  சொற்கள் இடம்பெற்றிருந்தால் அந்தப் பதிவு மகிழ்ச்சியான பதிவு!இதற்குப் பதிலாக அழுகை, துக்கம், வேஸ்ட், தோல்வி... என்பது மாதிரியான சொற்கள் இடம்  பெற்றிருந்தால் அவை சோகமான பதிவு!

இப்படித்தான் ஃபேஸ்புக் நிலைத்தகவல் / ஸ்டேட்டஸ் / பதிவுகளில் இருக்கும் வாக்கியங்களைக் கொண்டு அவற்றை உணர்வு நிலைகளுக்கு ஏற்ப பிரிக்கிறது.  இதை பல அகராதிகளை ஒப்பிட்டு சிறப்பாக, மேம்படுத்தப்பட்ட ஒன்றாக ஃபேஸ்புக் உருவாக்கியிருக்கிறது, அல்காரிதமாக! இதன் அடிப்படையிலேயே  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் எழுத்துகள், படங்கள், வீடியோக்கள், சிறு அனிமேஷன்கள் என பல வடிவங்களில் தாங்கள் தேர்ந்தெடுத்த  பயனாளிகளிடம் சோதித்திருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா..? பல லட்சம் பயனாளர்களிடம் அனுமதி பெறாமலேயே  அவர்களை பரிசோதனை எலிகளாக மாற்றியிருக்கிறார்கள் என்பதுதான்!

இந்த உண்மை வெளிப்பட்டதும் உலகெங்கும் பெருமளவில் சர்ச்சைகள் கிளம்பின. அதை வெற்றிகரமாக ஃபேஸ்புக் எதிர்கொண்டு சமாளித்துவிட்டது. ஆனால், சமாளிப்பதற்காக ஃபேஸ்புக் சொல்லியிருக்கும் காரணம்தான் உண்மையான ஆபத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.‘நாங்கள் இந்தப் பரிசோதனையின்  மூலம் பல மேம்படுத்தப்பட்ட அல்காரிதங்களை உருவாக்கப் போகிறோம். அந்த அல்காரிதங்கள் உதவியுடன் ஃபேஸ்புக் பதிவுகளைத் தொடர்ந்து கண்காணித்து  எதிர்மறையாக அல்லது சோகமாக பதிவுவிடும் நபர்களை தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்கப் போகிறோம்!’ - இப்படித்தான் ஃபேஸ்புக் சப்பைக்கட்டு  கட்டியிருக்கிறது. இப்போது முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது. நாம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவராக இருந்தால் நமக்கு எந்த மாதிரியான பதிவுகளைக் காட்ட  வேண்டும் என்பதை அல்காரிதம்தான் தீர்மானிக்கும் என்றால்... நமது மனநிலையில் / உணர்வில் தாக்கத்தை ஏற்படுத்தி அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்  என்பதை முகநூலே தீர்மானிக்கத் தொடங்கும் அல்லவா..? அவர்கள் விற்க நினைக்கும் ஒரு பொருளை நம்மை பணம் கொடுத்து வாங்க வைக்கலாம் அல்லவா?  அவர்கள் காட்டும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு நம்மைத் தள்ளலாம் அல்லவா?!

(தொடரும்)

--வினோத் ஆறுமுகம்