பூச்சி கொல்லிகளால் ஆரோக்கியத்தை இழக்கும் குழந்தைகள்!



‘‘அதிக விளைச்சல் கிடைக்கும், விவசாயம் செழிக்கும், நல்ல லாபம் பார்க்கலாம்...’’ என்றே பூச்சிகொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவற்றால் ஏற்படும் தீங்குகள் பற்றி அறிந்திருப்பார்களா? தெரியாது. இதை ஒரு சிறிய ஆய்வின் வழியே வெளிக்கொண்டு வந்திருக்கிறது  தன்னார்வஅமைப்பு ஒன்று.குறிப்பாக, விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் அவர்களின் குழந்தைகள், பூச்சிகொல்லி மருந்துகளால் எப்படியெல்லாம்  பாதிக்கப்படுகின்றனர் என்பதை களப்பணியின் மூலம் கண்டறிந்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து செயல்படும் ‘கிராம கல்வி வளர்ச்சி  முன்னேற்ற சங்கம்’ என்ற அமைப்பு உலகளவில் பூச்சிகொல்லி மருந்துகளை ஒழிக்க பணியாற்றி வரும் ‘பூச்சிகொல்லி நடவடிக்கைக்கான வலைப்பின்னல்’ என்ற  அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வைச் செய்திருக்கிறது.

‘‘நாங்க இப்ப பூச்சிகொல்லி மருந்துனு சொல்றதில்ல. பூச்சிகொல்லி விஷம்னுதான் குறிப்பிடுறோம். ஏன்னா, விவசாயிகளுக்கு அவ்வளவு பாதிப்புகளை  ஏற்படுத்திட்டு இருக்கு...’’ என வேதனையுடன் பேசத் தொடங்கினார் கிராம கல்வி வளர்ச்சி முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஃபாத்திமா பர்னார்ட்.‘‘எங்க அமைப்பு  1979ம் வருடத்திலிருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்கள்ல வாழற தலித் மற்றும் இருளர் பெண்களிடையே வேலை செய்திட்டு வருது.  அவங்களோட கல்விக்காகவும், சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வர்றோம். தவிர, உலகளவில் பூச்சிகொல்லிக்கு எதிரான  நடவடிக்கைகளில் இருக்குற ‘PANAP( Pesticide Action Network Asia Pacific)’ என்ற அமைப்புடன் சேர்ந்தும் பணியாற்றுகிறோம். ஏன்னா, இப்ப ரசாயன  பூச்சிகொல்லிகளால் மண் மலடாகி விவசாயம் அழிந்து வர்றது தினமும் படிக்கிற செய்தியாகிடுச்சு. அதனால விவசாயிகள் தற்கொலையும் அதிகரிச்சிடுச்சு.  இதைப் புரிஞ்சிகிட்ட ஒருசில விவசாயிகள்தான் இயற்கை உரத்திற்கு திரும்பிட்டு இருக்காங்க.

ஆனா, பலரும் பூச்சிகொல்லியைப் பயன்படுத்தியே விவசாயம் பண்றாங்க. சமீபத்துல ஒரு விவசாயிகிட்ட பேசினேன். ‘ஆரம்பத்துல ஒரு ஏக்கருக்கு 90 மூட்டை  மகசூல் கிடைச்சது. இப்ப ரொம்ப குறைஞ்சிடுச்சு’னு வருத்தப்பட்டார். இதுக்கு அக்ரோ நிறுவனங்கள் தயாரிக்கும் பூச்சி கொல்லிகளால் மண் தன்னோட இயற்கை  வளத்தை இழந்திட்டு வர்றதே காரணம். இந்தச் சூழல்லதான் நாங்க இந்த ஆய்வை மேற்கொண்டோம். எங்க பகுதியில பூ விவசாயம் அதிகம். குடும்பம்  குடும்பமா சேர்ந்து இதுல ஈடுபடுவாங்க. விவசாயிகள் இதுக்கான பூச்சிகொல்லிகளை வாங்கிட்டு வந்து கையுறைகள் எதுவும் போடாம அதை வெறும் கைகளால்  தண்ணீர்ல கலப்பாங்க. முகத்தை மூடாமல் ஸ்பிரே பண்ணுவாங்க. பூக்களை இவர்கள் வீட்டுப் பெண்களும், குழந்தைகளும் பறிப்பாங்க. அதனால, பெண்களும்,  குழந்தைகளும் என்னவிதமான பாதிப்பை சந்திக்கிறாங்கனு ஆய்வு செஞ்சோம். குறிப்பா, குழந்தைகள்...’’ என்ற ஃபாத்திமா பர்னார்ட், ஆய்வு அறிக்கையை எடுத்து  நீட்டியபடியே களப்பணியில் இருந்த சாந்தியை நம்மிடம் பேசச் சொன்னார்.

‘‘இந்த ஆய்வை திருவள்ளூர் மாவட்டத்துல உள்ள தாழவேடு, நெமிலினு ரெண்டு கிராமப் பகுதிகள்ல மட்டுமே செய்தோம். மொத்தம் 121 குழந்தைகள், 103  பெண்களை சந்திச்சோம். குறிப்பா, பூ பறிக்கிறதுல பத்து முதல் பதினேழு வயதுள்ள குழந்தைகள்தான் அதிகமா ஈடுபடுவாங்க. பூ பறிக்கிறதுக்கு முந்தைய நாள்  சாயங்காலம் பூச்சிகொல்லியை ஸ்பிரே பண்ணுவாங்க. இப்படிச் செய்தாதான் பூக்கள் சீக்கிரம் மலரும், ஃப்ரஷ்ஷா இருக்கும்னு சொல்றாங்க! ஆண்கள் இந்தப்  பணியை செய்திட்டு போனதும் மறுநாள் காலையில 5 மணிக்கெல்லாம் குழந்தைகள் வந்துடுவாங்க. எட்டு மணி வரை பூ பறிச்சிட்டு ஸ்கூலுக்குப் போவாங்க.  ஆக, வாரத்துக்கு குறைஞ்சது பதினைந்து மணிநேரம் இந்த வேலைல ஈடுபடுறாங்க. நாங்க பேசின பல குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி, மூச்சுத்  திணறல்னு பல்வேறு நோய்கள் அடிக்கடி வர்றதா சொன்னாங்க. இதை ஸ்கூல் டீச்சர்ஸ்கிட்ட கேட்டும் உறுதிப்படுத்தினோம்.

இதனால, பல நாட்கள் ஸ்கூலுக்குப் போகாம குழந்தைகள் வீட்டுல இருக்காங்க. சிலருக்கு பசியே எடுக்குறதில்ல. படிப்புலயும் கவனக் குறைவு இருக்குனு நாங்க  தயாரிச்ச கேள்விகள் வழியே தெரிஞ்சுகிட்டோம். எல்லாமே பூச்சிகொல்லிகளின் விளைவுகள்தான்னு புரிஞ்சது. அப்புறம், சந்தனகோபாலபுரம்னு ஒரு கிராமத்துல  சில பெண்கள்கிட்ட பேசினோம். கிட்டத்தட்ட பதினைந்து பெண்கள் கர்ப்பப்பை அகற்றி இருக்குறது அதிர்ச்சியா இருந்துச்சு. தவிர, கர்ப்பப்பை கட்டி, உதிரப்போக்கு,  அடிக்கடி அபார்ஷன் ஆகுறதுனு பல பிரச்னைகள பெண்கள்கிட்ட பார்க்க முடிஞ்சது. சில கிராமங்கள்ல தலை பெரிசாகவும், உடல் சிறுத்தும் ஊனமாகியும்  குழந்தைகள் இருந்ததைப் பார்த்தோம்.

இதுவும் பூச்சிகொல்லிகளால் ஏற்பட்ட பாதிப்பே...’’ என அதிர்ச்சியுடன் குறிப்பிட்டவர், ‘‘இதுக்கு ஒரே தீர்வு பூச்சிகொல்லிகள தூக்கி எறிஞ்சிட்டு நம்  முன்னோர்களைப் போல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்றதுதான்...’’என்ற சாந்தியைத் தொடர்ந்தார் ஃபாத்திமா.‘‘இப்ப நாங்க  பூச்சிகொல்லிக்கு எதிரா விவசாயிகள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு இருக்கோம். கூட்டு விவசாயம்னு ஒரு கான்செப்ட்டை வச்சு 1,500 பெண்களுக்கு  சிறுதானிய விவசாயப் பயிற்சி கொடுத்திட்டு வர்றோம். இது முழுக்க இயற்கை உரங்களை மட்டுமே யூஸ் பண்ணி விவசாயம் செய்கிற முறை. அதோடு இதை  எப்படி மார்க்கெட் பண்ணலாம்னு வகுப்பும் எடுக்குறோம். நல்ல ரிசல்ட் கிடைச்சிட்டு இருக்கு. சீக்கிரமே எங்க பகுதி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்குத்  திரும்புவாங்க...’’ என நம்பிக்கையாக முடிக்கிறார் ஃபாத்திமா பர்னார்ட்.         

-பேராச்சி கண்ணன்