கவிதை வனம்



முதுமை போற்றுதும்

அடர்வனமென
இடைதொட்ட
கருங்கூந்தல்
மெலியக்கண்டேன்
முன்னுச்சியிலும்
காதோரங்களிலும்
நரைக்கக் கண்டேன்
இருவிழிப்பொறிகளைத்
தொட்டணைத்த இமைகள்
கருவளையத்துள்
மூழ்கக் கண்டேன்
கன்னக்கதுப்புகளும் நுதல்களும்
செளந்தர்யம்
இழக்கக் கண்டேன்
மாசு மறுவற்றது என
உன்னால் ரசிக்கப்
பெற்ற முகத்தில்
மென்சுருக்கங்கள்
முகவரியை எழுதக்கண்டேன்
தாழாது என நினைத்த
ஸ்தனங்கள் தாழக்கண்டேன்
யவ்வனம் பிரவாகம்கொண்டு
பரிபூரணம் எய்தி
முதுமையில் நுழையக் கண்டேன்
முதுமை போற்றுதும்
முதுமை போற்றுதும்

- சக்தி செல்வி

நினைவுகள்

ஆடி வழியும் பனியும்
ஆவி பறக்கும் குளம்பியும்
நீண்ட இரவும் நீளும் குளிரும்
காதோரம் குறுகுறுக்கும்
கூதற் காற்றும்
இறுக்கப் பிடிக்கும் கதவும்
சில்லென சிலிர்க்கும் சாளரமும்
தும்மலும் சிறு தூறலும்
எங்கோ கேட்கும் நம் பாடலும்
அதிகாலைப் போர்வைக்குள்
கதகதக்கும் துயிலும்
நினைவூட்டிப் போகின்றன
முயன்றும் மறக்கவியலா - நம்
முன்பனிக்கால நினைவுகளை

- ச.புவனேஸ்வரி