பிரதமர் மோடி இக்கட்டுரையை படிப்பாரா..?



காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்பு குறித்த ஸ்கேன் ரிப்போர்ட்

தேர்தலில் ஜெயித்த கையோடு பாஜகவைச் சேர்ந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி - கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் இந்த அறிவிப்பைக் கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசின் சார்பாக உடனடியாக நன்றி தெரிவித்துள்ளார்.

காவிரி - கோதாவரி இணைப்பு ஒரு கனவு என்று பேசி வந்த பாட்டாளி மக்கள் கட்சியினரின் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் பங்குக்கு இந்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.சூழலியலாளர்கள் இந்தத் திட்டத்தை ஒருபுறம் எதிர்த்துக் கொண்டிருக்க விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினர் இதனை வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளும் தரப்பினர் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் என்று பெருமிதத்தோடு சொல்கிறார்கள். உண்மையில் கோதாவரியைக் காவிரியுடன் இணைக்கும் திட்டம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பே விவாதிக்கப்பட்ட ஒன்றுதான்.

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கான வழிகளைப் பற்றியும் நீர் மேலாண்மை பற்றியும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு சிந்தித்துக் கொண்டிருந்தபோது 1970ம் ஆண்டில் நீரியல் மற்றும் பொறியியல் வல்லுநர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம்தான் இந்திய நதிகள் இணைப்புத் திட்டம்!கங்கை, யமுனை போன்ற வற்றாத வட இந்திய நதிகளோடு மத்திய இந்திய நதிகளையும் தென்னிந்திய நதிகளையும் இணைக்கும் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டமும் முன்வைக்கப்பட்டது.

அன்றிருந்த அரசியல்  பொருளாதாரச் சூழலில் அந்தத் திட்டம் போதிய ஆய்வுகள் எதையும் நோக்கி நகராமல் அப்படியே முடங்கிப்போனது. அதன் பிறகு, காவிரிப் பிரச்னை தமிழகத்தில் தலைதூக்கும்போதெல்லாம் அழும் குழந்தைக்கு பொம்மை வாங்கித் தருவதாகச் சொல்லி ஆறுதல் படுத்துவது போல் மத்தியில் ஆளும் அரசியல் கட்சிகள் இந்த கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தைப் பேசுவார்கள். பிறகு அதை மறந்தும் போவார்கள்.

இந்தத் திட்டத்தைத்தான் இப்போது பாஜக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கடந்த ஜனவரி மாதம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமுலாக்குவோம் என்று சொல்லியிருந்தார். வாக்குறுதி கொடுத்தது போல் இந்தத் திட்டத்தை தொடங்குவோம் என்று இப்போது அறிவித்தும்விட்டார்.
ஆனால், நிஜமாகவே இணைக்க முடியுமா?

முதலில் இந்தத் திட்டத்தைப் பற்றி ஆளும் தரப்பு என்ன சொல்கிறது என்று பார்த்துவிடுவோம். கோதாவரி ஆறு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரா என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. ஏற்கெனவே, ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே போலாவரம் அணை கட்டப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு, 1,100 டிஎம்சி நீர், கோதாவரி ஆற்றிலிருந்து வீணாகக் கடலில் கலக்கிறது.

அதை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்த கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம், ரூ.60 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து 300 டிஎம்சி தண்ணீர் கிருஷ்ணா நதியில் உள்ள போலாவரம் அணைக்கட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கர்நாடகாவின் பெண்ணாற்றில் உள்ள சோமசீலா அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டுக்கு கோதாவரி தண்ணீர் கொண்டு வரப்படும் என்பதுதான் திட்டம்.

இதன் மூலம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும். கால்வாய்கள் வெட்டி தண்ணீர் கொண்டு வந்தால் தண்ணீர் வீணாவதோடு, திட்ட நிதியும் அதிகரிக்கும் என்பதால், மாபெரும் இரும்புக் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.60 ஆயிரம் கோடி திட்டநிதியில் 90%தை மத்திய அரசு தரும். எஞ்சிய பத்து சதவீதத்தை மாநில அரசுகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கான நிதியை உலக வங்கியிடமோ அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தோ பெற முடிவு செய்துள்ளது.இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி போன்ற ஆறுகள் பயன் பெறும். மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி போன்ற தமிழக மாவட்டங்களும் பயன்பெறும்.

கேட்பதற்கு மிக நல்ல திட்டமாகத் தோன்றலாம். ஆனால், இதை சாத்தியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள்.கோதாவரி, இந்தியாவின் மிக நீளமான நதிகளில் ஒன்று. மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பிரம்மகிரி என்ற மலைப் பகுதியின் திரிம்பர்க் பிரதேசத்தில் கோதாவரி உற்பத்தியாகிறது.

அங்கிருந்து பெருவெள்ளமாய்ப் பாய்ந்து கர்நாடகாவில் நுழைந்து ஆந்திரா, தெலுங்கானா என்ற இரு மாநிலங்களையும் செழிக்கச் செய்துவிட்டு 1465 கிமீ தூரம் சளைக்காமல் ஓடி ஆந்திரப் பகுதியின் வங்கக் கடலில் கடக்கிறது. எனவே, கோதாவரி என்பது வெறுமனே ஆந்திராவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. மஹாராஷ்ட்ரம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சொந்தமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தத் திட்டம் அமைய வேண்டும் என்றால் முதலில் மகாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதியில் அணை கட்ட வேண்டும். பிறகு, அதில் தேங்கும் தண்ணீரை தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, நாகார்ஜுன சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்பட்டு, சோமசீலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரிக்கு தண்ணீரைக் கொண்டு வர வேண்டும்! கோதாவரி போலவே கிருஷ்ணா நதியும் மகாராஷ்ட்ராவில் உற்பத்தியாகி கர்நாடகா, தெலுங்கானா வழியாக ஆந்திரத்துக்குள் நுழைந்து கடலில் கலக்கிறது.

இந்த கோதாவரியையும் கிருஷ்ணாவையும் இணைப்பதற்கான திட்டம் ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதுதான் போலாவரம் திட்டம்.
இதன்படி ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள போலாவரம் என்ற இடத்தில் பெரிய அணை கட்டப்பட்டு வருகிறது. இங்கு வரும் கோதாவரி நீரை கிருஷ்ணா நதி தேக்கப்படும் நாகார்ஜுன சாகர் அணைக்குத் திருப்புவதே இந்தத் திட்டம்.

இதைச் செயல்படுத்திய பிறகே நாம் கோதாவரி - காவிரி இணைப்பைப் பற்றிப் பேசவே முடியும்.போலாவரம் அணை திட்டத்துக்கு 1.68 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுவரை 1.19 லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தால் ஒரு லட்சம் பழங்குடியின குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டியுள்ளது தொடர்பாக ஒருபுறம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இத்திட்டத்துக்கு இதுவரை சுமார் ரூ.14 ஆயிரம் கோடியை ஆந்திர அரசு செலவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை முடிக்க இன்னும் ரூ.53 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

போலாவரம் வலது கால்வாய் இணைப்பு மூலம் 80 டிஎம்சி தண்ணீரை கிருஷ்ணா நதிக்கு திருப்பி விடுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
ஆந்திரா இரண்டாகப் பிரிந்த பிறகு தெலுங்கானா மாநிலம், பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி போலாவரம் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதே காரணத்தைக் கூறி, ஒடிசா, சத்தீஸ்கர் மாநில அரசுகளும் எதிர்த்து வருகின்றன. மேலும், இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த எல்லா எதிர்ப்பையும் தாண்டித்தான் போலாவரம் திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்தி வருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் நிலவியல் விஞ்ஞானிகள் இப்படியான நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நதியும் ஒவ்வொருவிதமான தாதுவளம் கொண்டது. ஒரு நதியின் நீர் என்பது அது பாயும் நிலத்தின் தாதுவளத்துக்கு ஏற்ற பண்பைக் கொண்டிருக்கும். இப்படி, நதிகளை செயற்கையாக இணைக்கும்போது என்னென்ன விளைவுகள் நிகழும் என்று சொல்வது கடினம்.

பல்லுயிர் மண்டலங்கள் சிதைவு, இயற்கைச் சூழல் பாதிப்பு உட்பட பல மோசமான எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று திகில் காட்டுகிறார்கள். ஆக, இத்தனை எதிர்ப்புகளையும் கடந்துதான் கோதாவரியும் காவிரியும் கைகோர்க்கவேண்டியுள்ளது!
நதி நீர் இணைப்பு என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல!

இளங்கோ கிருஷ்ணன்