வடிவேலுவும் மீம்ஸ் வியாபாரமும்!



ஹன்ஸா ஹன்ஸா (வழக்கறிஞர்)

சமீபகாலமாக வடிவேலு முக பாவனைகளை வைத்து மீம்ஸ் போடுவது இணையதளங்களில் பிரபலமாகி வருகிறது. இதன் வரவேற்பை பார்த்து பல மீடியா நிறுவனங்களும், மீம்ஸ் உருவாக்குபவர்களை வேலைக்கு சேர்க்க ஆரம்பித்திருக்கின்றன. சென்ற வாரம் வடிவேலு நடித்த ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் இடம்பெற்ற சுத்தியல் காமெடி இணைய தளங்களில் ஹாட் ஆகி #prayfornesamani ஹேஷ்டாக் உலகளவில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. இதனை முன்வைத்து வீடியோ கேம்ஸும் உருவாகிவிட்டது.

ரைட். இதுதொடர்பான வேறொரு கோணத்தைப் பார்ப்போம்.எந்த தயாரிப்பாளரோ கைக்காசு போட்டு வடிவேலுவை நடிக்க வைத்து தயாரித்த புகைப்படங்கள் வேறொரு அரசியல் செய்தியோ, செய்தித் தகவலோ சொல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது எனில், அதில் முதல் போட்ட தயாரிப்பாளருக்கு பங்கு உண்டா? நடித்த வடிவேலுவுக்கு பங்கு உண்டா?

இதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சட்டப்படி தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு. இதுவரை எந்த தயாரிப்பாளரும் மீம்ஸ் க்ரியேட்டர் மீது வழக்கிட்டதில்லை. காரணம், இந்த மீம்ஸ்கள் எல்லாமே பணம் சம்பாதிக்க பயன்படவில்லை. விளையாட்டாக பொழுதுபோக்கிற்காக செய்யப்படுகின்றன.

ஆனால், மீம்ஸ்கள் பெறும் வரவேற்பை வைத்து நிறுவனங்கள் சம்பாதிக்க ஆரம்பித்தால் தயாரிப்பாளர் தன் பங்கை கேட்பது நியாயம்தானே? சிறு தொகைதான் எனினும், (பணத்திற்கு) பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் அவருக்கு ராயல்டி கிடைக்க வேண்டும்தானே?
சரி. அதில் பலவித முகபாவனைகளைக் கொடுத்து நடித்த வடிவேலுவிற்கு உரிமை உண்டா?

‘இல்லை’ என்பதே சட்டம் சொல்லும் பதில். ஏனெனில், அவர், தான் செய்த வேலைக்கு சம்பளம் ஏற்கனவே பெற்றுவிட்டார். சட்டப்படி, ராயல்டி தொகையோ அல்லது செய்த வேலைக்கு கூலி / சம்பளமோ மட்டுமே கிடைக்கும். பல வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் தேவ் ஆனந்த், ‘ஃபார்ச்சூன் பிக்சர்ஸ்’ என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கிட்டார். அவருடைய வித்யாசமான நடிப்பு ஸ்டைலை வேறெவரும் காபி செய்யக்
கூடாது என்று.

ஆனால், தேவ் ஆனந்த் செய்த நடிப்புக்கு தயாரிப்பாளரிடம் பணம் பெற்று விட்டார் என்றும், படத்தின் உரிமை தயாரிப்பாளரைச் சார்ந்தது என்றும் தீர்ப்பானது.அதே சமயம் தேவ் ஆனந்த் என்னும் தனி நபரின் உருவத்தில் பொம்மைகளோ, வீடியோ கேம்களோ செய்வதாயின் அவரது உரிமை பெற வேண்டும்.

உதாரணமாக சச்சின் ஐபிஆரில் பதிந்திருக்கிறார். இது ட்ரேட் மார்க்கைப் பதிந்து கொள்வது போல. அவர் அனுமதியின்றி அவர் பெயரை பயன்படுத்துவது, அவரின் உருவ பொம்மைகளை விற்பது என பல வியாபாரச் செயல்களுக்கு தடை. இவரைப் போலவே, பால் கசைன், டேவிட் பெக்காம் என பல விளையாட்டு பிரபலங்களும் தங்கள் பெயர்களை பதிந்து வைத்திருக்கிறார்கள். இந்த உரிமையை ‘Personality Rights’ என்கிறார்கள்.
அதே போல Performer’s Rights என ஒன்றுண்டு.

கலைஞருக்கு மட்டுமேயான அந்த உரிமையில், அவரது பொது நிகழ்ச்சியை அவரது அனுமதி இல்லாமல் வீடியோ எடுப்பது, அதை தனியே வெளியே விற்பது / வெளியிடுவது (அந்த நிகழ்ச்சி இலவச நிகழ்ச்சியே ஆனாலும்) .இதற்கு நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்குவது போலவே கலைஞரிடமும் அனுமதி பெறவேண்டும்.

ஆனால் இதுகுறித்து இந்தியாவில் பெரிய அளவில் விவாதங்களோ, வழக்குகளோ நடைபெறவில்லை.இணையதளம் என்பது இளைஞர்கள் மட்டுமல்ல அனைவரும் ஆடும் களமாகிவிட்டது. இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இணையதளம் பரந்து விரிந்திருப்பதால் உரிமைச் சட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

வெளிநாட்டார் ஒருவர் நம்மீது ஒரு ஐ.பி.உரிமை வழக்கு போட்டு நட்ட ஈடு கேட்டால் நம் கற்பனைக்கும் மேற்பட்டதாக இருக்கும் என்பதற்காகவாவது சட்டத்தின் அடிப்படையை அறிவோம்.