தேவி 2



காதலில் தோற்ற இரண்டு ஆவிகள் பிரபுதேவாவின் உடலில் புகுந்து புரட்டியெடுப்பதை மீட்க மனைவி தமன்னா போராடுவதே ‘தேவி - 2’.
‘தேவி’யில் மனைவி தமன்னாவிடம் புகுந்த பேயை விரட்ட அரும்பாடுபட்ட பிரபுதேவாவிற்குச் செய்கிற பிரதிபலனாய் இந்தத்தடவை கைமாறு செய்கிறார் தமன்னா.

திடீரென காதலில் தோற்ற இரண்டு பேய்கள் சமயம் பார்த்து பிரபுதேவாவின் உடம்பில் புகுந்துவிட ஆட்டம் ஆரம்பிக்கிறது.
தேவா அறியாமலேயே அவரின் உடலில் ஆவிகள் அதிகாரம் செலுத்த, ஆள் மாறாட்டமும், அநாவசிய சந்தேகங்களும் எழுகின்றன. இதைக் கண்டுகொண்ட தமன்னா, தோழி கோவை சரளாவின் உதவியோடு இரண்டு பேய்களோடும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்(!) போடுகிறார்.

ஏக நிபந்தனைகளோடு அவை குறிப்பிட்ட நேரங்களில் கணவரின் உடலில் ஆதிக்கம் செலுத்த அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. தங்கள் காதல் ஆசை நிறைவேறி விட்டால் பிரபுதேவா உடலிலிருந்து போய்விடுவதாக இரண்டு பேய்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து (!) போடுகின்றன. அது நடந்ததா என்பதே பின்கதை.தன் பங்கில் கலகலக்க வைக்கிறார் பிரபுதேவா. அன்பான கணவன், ஆளுக்கொன்றாக பேய்கள் பிடிக்கும்போது திடீரென்று மிரட்டும் பாடி லாங்வேஜ் என மாறுபட்டு செய்திருப்பது சிறப்பு.

மூன்று பெண்களுக்கு மத்தியிலும் அவர் தனித்தனி மனநிலைகளில் சுற்றி வருவது கொஞ்சம் சுவாரஸ்யமே. என் பங்கை செய்ய முடியும், மீதியை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் இருந்துவிட்டு போய்விடுகிறார்.தமன்னா, கோவை சரளாவின் அட்வைஸில் வீட்டிற்குள்ளேயே ஒரு கெட்ட ஆட்டமும் போடுகிறார். இரண்டு பேய்கள், நாம் கண்டு மிரளப்போகிறோம் என்று நினைத்தால் பயமூட்டாமல் அமானுஷ்ய உருவங்களில் மிரட்டாமல் போய் விடுகின்றன. திகிலை விடவும் காமெடியை நம்பி எடுத்துவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். நந்திதாவும் இன்னொரு இணையாகவே வருகிறார்.

இத்தனை படங்களில் நடித்தபிறகும் கோவை சரளா தன் பாடி லாங்குவேஜையும், டயலாக் டெலிவரியையும் கொஞ்சம்கூட மாற்றிக்கொள்ளவில்லை என்பது துயரம்தான். ஆனாலும் அவ்வப்போது படத்தின் காட்சியமைப்பு அதையும் ரசிக்க வைத்துவிடுகிறது. மொரீஷியஸ் லொகேஷன் மாறுதலுக்காக ஓர் ஆறுதல்.

கடைசி சீன்களில் ஆர்.ஜே.பாலாஜி எண்டராகி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஒருவரின் உடலில் இரண்டு பேய்கள், மூன்று ஹீரோயின்கள், பேய் குழப்பம்... என கலர்ஃபுல்லாக இருந்திருக்கலாம். பிரபுதேவா கெட்டப்பில் கொஞ்சம் மாற்றமும் செய்திருக்கலாம்.சாம்.சி.எஸ். பாடல்களில் ஈர்ப்பே இல்லை. அயனன்கா போஸ் காமிராவில் மொரீஷியஸ் அழகும், தமன்னாவின் கலர்ஃபுல் நடனமும் பக்குவமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.பேய்களின் ஃபிளாஷ்பேக் வலுவாக்கப்பட்டிருந்தால், காமெடியில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் தாறுமாறாக ‘தேவி 2’வை ரசித்திருக்கலாம்.l  

குங்குமம் விமர்சனக் குழு