இந்தியாவில் வேலை இல்லை!



உண்மையை உரக்கச் சொல்கிறது தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் நிர்வாகம்

‘மேக் இன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்டார்ட்அப் இந்தியா’, ‘ஸ்மார்ட் சிட்டி’, ‘பங்கர் மித்ரா’, ‘முத்ரா’, ‘இன்ஸ்பயர்’, ‘பிரதான் மந்திரி யுவ யோஜனா’, ‘பிரவாஸி கவுசல் விகாஸ் யோஜனா’ என்று நூற்றுக்கணக்கான திட்டங்கள் துறை வாரியாக அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் பெரும் விளம்பரங்கள்

செய்து நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக மேற்கண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் கூறப்பட்டாலும் அவை வெறும் கவர்ச்சி அறிவிப்புகளாகவும், தோல்வியில் முடிந்த திட்டங்களாகவுமே இருந்தன என்கிறது சமீபத்திய ஆய்வு. ஆம். வேலையில்லாத் திண்டாட்டம் முன் எப்போதையும் விட கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் மத்தியில் அமைந்துள்ளது. இது எப்படி சாத்தியம்? வேலை வாய்ப்பின்மை தேர்தல் பிரசாரத்தில் எடுபடாதது ஏன்? பொருளாதார வீழ்ச்சி புள்ளி விவரங்கள் பொய்யா? மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையற்றதா?
நீதிமன்றம், தேர்தல் ஆணையம், உயர்மட்ட விசாரணை அமைப்புகள் ேபான்றவற்றின் உள்விவகாரங்கள் அல்லது தலையீடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு எதிராக எழுந்தும், அவையெல்லாம் ஏன் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை?
இப்படி பல நூறு கேள்விகளைத்தான் தேர்தலில் தோற்ற கட்சிகள் யோசித்து வருகின்றன.

விடைகளை அவர்கள் கண்டறியட்டும். மக்களின் தலையாய பிரச்னைகள் வேறு.சமீபத்தில் தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் நிர்வாகம் (NSSO) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலை வாய்ப்பின்மை 6.1% இருப்பதாக தெரிவித்துள்ளது.
2016ல் பணமதிப்பிழப்பு (டிமானிடைசேஷன்) நடவடிக்கைக்குப் பின் நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து எடுக்கப்பட்ட முழுமையான ஆய்வு அறிக்கை என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

நகர்ப்புறங்களில் 7.8% இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை; கிராமப்புறங்களில் 5.3% இளைஞர்களுக்கு வேலையில்லை; ஆண் - பெண் விகிதாசாரத்தில், ஆண்களில் 6.2 சதவீதத்தினரும், பெண்களில் 5.7 சதவீதத்தினரும் வேலை இல்லாமல் உள்ளனர். தொடர்ந்து 2ம் முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடி தேர்தல் வெற்றிக்குப் பின் இப்போது தொழிலாளர் நல அமைச்சகம் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றன.

உலகில் வளர்ந்துவரும் நாடுகள் சந்திக்கும் இருபெரும் பிரச்னைகளில் ஒன்று கொடிய வறுமையும், மற்றொன்று வேலையின்மையுமே. இவை ஒன்றோடொன்று தொடர்புடையன. வேலையின்மையால் வருமானம் ஈட்ட முடியாமல் மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை எத்தனை ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டாலும், வறுமைக் குறைப்பு இலக்குகளை எதிர்பார்த்த அளவுக்கு அடையமுடியவில்லை. ஆனால், வேலைவாய்ப்பு பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

முதலீட்டு முறைகளில் மாற்றம் செய்தல்: நுகர்வுப் பண்டங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளை அதிகரிக்கும்போது தொழிலாளர்களை அதிகப்படியாக வேலைக்கு அமர்த்தலாம். நுகர்வுப் பண்டங்களின் வரவு அதிகரிப்பதனால் பண்டங்களின் விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும். இதனால் மக்களின் பொருளாதார நலன் அதிகரிக்கும்.

பெரிய நிறுவனங்களுக்கு எதிராக சிறிய நிறுவனங்களை ஊக்குவித்தல்: பெரிய தொழில் நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய நிறுவனங்களுக்கு நேரடியாக அதிக முதலீடு செய்யும்போது வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியின் நோக்கம் நிறைவுசெய்யப்படும். அதற்காக சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும், அத்தொழில்களுக்கு அதிக கடன் வசதி, உரிமம், முறையான கச்சாப் பொருள்கள் பகிர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டால், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்கும்.

தொழில்நுட்ப முறைகளில் காணப்படும் பிரச்னையை தேர்ந்தெடுத்தல்: நடுத்தரமான தொழில்நுட்ப முறைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வேலைவாய்ப்பின் நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியும். நாட்டின் பொருளாதாரச் சூழலுக்கு நடுத்தரமான தொழில்நுட்ப முறையே ஏற்றதாகும்.

சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்களில் புதிய வளர்ச்சி மையங்களை ஊக்குவித்தல்:

சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சிறிய தொழில்களின் கூட்டமைப்பு நிறுவப்படுவதன் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார நெகிழ்வுத் தன்மையை அளித்திட முடியும்.

வேலை வாய்ப்புகளின் அடிப்படையில் சலுகைகள்: அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசின் சலுகைகள் மற்றும் அரசின் ஊக்கத் தொகைகளே அடிப்படைக் காரணம். இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கங்களுடன் சமத்துவம் மற்றும் சமூக நிலையை அடைய முடியும்.

கல்விக் கொள்கையில் புத்தாக்கம்: நாட்டின் கல்விமுறையில் தொழில்கல்வி என்பதில் பட்டம் பெறுவது மட்டுமே முக்கியமானதாக உள்ளது. படித்தவர்களிடையே வேலையின்மை அதிகமாக இருப்பதால் கல்வி முறையில் புத்தாக்கம் செய்வது அவசியம். அதனால், கல்விக்
கொள்கையின் முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. அதனால், அரசின் செலவுகளில் கல்வியின் வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.

இப்படி வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும் அந்த வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கான காரணங்களையும் அறிய வேண்டியுள்ளது. அந்த வகையில் நாட்டின் அதிக மக்கள்தொகை வளர்ச்சி  காரணமாக வேலையின்மையின் அளவு அதிகமாகி கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லாததால் கூடுதலான உழைப்பு சக்திகளை பயன்படுத்த முடியவில்லை.

அடுத்ததாக விவசாயத் துறையில் மட்டுமே போதுமான வேலைவாய்ப்பு இருந்தாலும் பருவகால மழையின்மையால் விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லா நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்தியாவில் கூட்டுக்குடும்ப முறை இருப்பதால் மறைமுக வேலையின்மை அதிகமுள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய குடும்பத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் வெளியாட்களை பணிக்கு அமர்த்த முடியாத சூழல் நிலவுகிறது.அடுத்ததாக, கடந்த பத்தாண்டுகளாக இந்தியப் பல்கலைக்கழகங்களிலிருந்து உருவாக்கப்படும் பெருவாரியான பட்டதாரிகள்! குறிப்பாக பொறியியல், தொழில்நுட்பப் பாடங்களுக்கு, கலைத்துறை சார்ந்த பாடங்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுதால் வேலையின்மை நிலவுகிறது.

நாட்டில் தொழில்துறை போதுமான அளவு வளர்ச்சியடையாததால் தொழிலகங்களிலும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நாளுக்குநாள் சரிந்து வருகிறது. வேளாண்துறையில் உபரியாக உள்ள தொழிலாளர்களை மற்ற தொழில்துறைகளில் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், விவசாயத்தில் மறைமுக வேலையின்மை ஏற்படுகின்றது.

‘வறுமை என்பது குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத, திறனற்ற நிலையைக் குறிக்கிறது’ என்றும், வேலையின்மை என்பது, ‘தொழிலாளர்கள் வேலை செய்யும் தகுதியும் விருப்பமும் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பதாகும்’ என்றும் 1990ல் உலக வங்கி வரையறுத்திருக்கிறது.

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பின்மை, கல்வி, குடிமக்கள் பாதுகாப்பு, மருத்துவம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறும் அரசுகள், மக்களை மேலும் வறியவர்களாகத்தான் வைத்துள்ளது. தன்னிறைவு பெற்ற குடிமக்களாக உருவாக்க அடிப்படைக் கட்டமைப்புகளை மாற்றவில்லை என்பதே நிதர்சனம்.

ஒவ்வொரு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசாங்கம் சந்திக்கக் கூடிய சவால்கள் ஏராளம் இருக்கின்றன. தேர்தல் ஆதாயத்துக்காக வௌியிடாமல் இருந்த ஆய்வறிக்கையை இப்போது வெளியிட்டதில் அரசியல் இருப்பதாகக் கூறப்பட்டாலும், பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடி எதிர்வரும் ஐந்தாண்டுக் காலத்தில் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்.

உலகளவில் அதிக இளைஞர் சக்தி கொண்ட இந்நாட்டில் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு மக்கள் மட்டுமே காரணி அல்ல; அரசியல் காரணிகளும் இருக்கின்றன. அதனால் அரசு முதலில் மாற வேண்டும்..!                            

செ.அமிர்தலிங்கம்