சாக்லேட் தின்றால் சான்றிதழ்!



முன்பெல்லாம் அமெரிக்காவுக்கு யார் சென்று வந்தாலும் தவறாமல் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சாக்லேட் கொடுப்பார்கள். ஹெர்ஷே’ஸ்! இப்போது அந்த சாக்லேட் சர்வசாதாரணமாக உள்ளூரிலேயே ஏகமாய்க் கிடைக்கிறது.நாமும் பிரித்து வாயில் போட்டுக்கொண்டு அடுத்த வேலையை கவனிக்கப் போய் விடுகிறோம். ஆனால், அதை எந்த அளவு மெனக்கெட்டுத் தயாரிக்கிறார்கள் என்று யோசித்தெல்லாம் பார்த்ததில்லை.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இவர்களுக்கென்று ஒரு குட்டி உலகமே இருக்கிறது! தெருவிளக்குகள்கூட ‘கிஸ்ஸஸ்’ சாக்லேட் வடிவத்தில்தான் அமைந்துள்ளன. பட்டிக்காட்டான் மிட்டாய் ஃபேக்டரியைப் பார்த்த மாதிரி  ஹெர்ஷே’ஸ் சாக்லேட் ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கிறார்கள்.

பிரம்மாண்டமான ஒரு தீம் பார்க். கட்டணம் செலுத்தினால் நாம் பதிவு செய்த நாளின் முதல் நாள் மத்தியானத்திலிருந்தே அனுமதிக்கப்படுவோம். உண்மையில் அந்த ஒன்றரை நாளும் போதவே போதாது! ரோலர் கோஸ்டர்களும் ஜயன்ட் வீல்களும் கொசுக்கள் என்னும்படியான அவற்றின் தாத்தாக்கள் இங்குள்ளன. குட்டீஸ் முதல் 90 வயசுத் தாத்தாக்கள் வரை கவலையின்றி ஏறிப்போகிறார்கள். ஹோவென்று குதூகலம். தீம் பார்க் என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை என்றாகிவிட்டது சாக்லேட் ஃபேக்டரியைப் பார்த்தபோது.

இவர்களின் சாக்லேட் தயாரிப்பு கிறுகிறுக்க வைக்கிறது. கைபடாமல் தயாரிக்கப்படும் இதன் ஒவ்வொரு கட்டமும் நேர்த்தி + விரைவு + பிரம்மாண்டம் + தரம் என்றால் என்ன என்பதை உணர்த்துகிறது. “நீங்களே சாக்லேட் தயாரிக்கலாம்!” என்று ஒரு சிறப்புத் திட்டம்.
அடிப்படைப் பொருட்கள் முதல் கட்டத்திலும்... ஃப்ளேவர் அடுத்த கட்டத்திலும்... மேலே அமைக்கும் டிசைன் மற்றும் டெகரேஷன் அதற்கடுத்த கட்டத்திலும்... என்று ஆறு நிலைகள் உள்ளன.

ஒவ்வொன்றிலும் உள்ள ஏராளமான ஆப்ஷன்களில் நாம் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம். நம் இஷ்டத்துக்கு வடிவமைக்கலாம். இப்படித் தயாரித்த சாக்லேட்களை நமக்கே பரிசாக அளிக்கிறார்கள்! கிட்டத்தட்ட ஓரடி நீள பேக் மு……ழுக்க சாக்லேட் நமக்குக் கிடைக்கிறது! குழந்தைகள் குதூகலமாக இதில் பங்கேற்கிறார்கள்.

இப்போது சில காரணங்களுக்காக இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்கள்.   ஹெர்ஷே’ஸ் மியூசியம் என்ற ஒன்று உள்ளது. உழைப்பின் உயர்வையும் விடா முயற்சி தரும் வெற்றியையும் தெரிந்து கொள்ள இதன் உள்ளே போனால் போதும், இந்த பிரம்மாண்ட சாக்லேட் தயாரிப்பு கம்பெனியின் நிறுவனர் மில்டன் ஹெர்ஷேயின் வாழ்க்கைச் சரிதத்தை இம்மி இம்மியாகப் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் காட்டுகிறது.

1857ல் பென்சில்வேனியாவில் ஏழை விவசாயக் குடும்பத்தில் ஹெர்ஷே பிறந்தார். படிப்பு ஏறாததால் அதை மூட்டை கட்டினார். எந்த வேலையிலும் நிலைக்க முடியவில்லை. ஒரு மிட்டாய்க்கடையில் கொஞ்சகாலம் வேலை செய்தார். பிறகு தன் அத்தையிடம் 150 டாலர்கள் கடன் வாங்கி ஃபிலடெல்ஃபியாவில் ஒரு ‘கேரமல்’ கடை வைத்தார்.  ஏற்றுமதி செய்யுமளவு உயர்ந்தார்.  

பிறகு சாக்லேட் தயாரிக்கும் கலையை உன்னிப்பாக நோக்கி ஒரு ரகசிய ஃபார்முலாவை உருவாக்கி தன் கேரமல் கம்பெனியை அநாயாசமாக பத்து லட்சம் டாலருக்கு விற்றார். பென்சில்வேனியாவில் ஃபேக்டரி அமைத்தார். ஏ……….ராளமான கோடி டாலர் மதிப்புக்கு உயர்ந்தார்.

முக்கியமான விஷயம்... மூலப்பொருட்களில் ஒன்றைக்கூட வெளியில் வாங்குவதில்லை என்பது. பல்லாயிரக்கணக்கான பசுக்கள் கொண்ட பண்ணை ஒன்றை வைத்துப் பால் உற்பத்தி செய்தார்.கரும்புத் தோட்டம் + சர்க்கரை ஃபேக்டரி வைத்திருக்கிறார்கள்.

கோக்கோ தோட்டமும் உள்ளது. ஃபேக்டரி ஊழியர்களுக்கு வீடு கட்டி தவணை முறையில் அவர்களுக்கே அவர்களுக்கு சொந்தமாக்கிவிட்டார். பார்க்குகள், சர்ச்சுகள், பொழுதுபோக்கு இடங்கள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள், உண்ணுமிடங்கள்... என்று சகலமும் உள்ளன. அவ்வளவுமே இங்கு வேலை பார்ப்பவர்களுக்கானவை. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் கம்பெனி நிறுவனருக்குக் குழந்தைகள் கிடையாது! எனவே, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஹெர்ஷே ட்ரஸ்ட் அமைத்து தன் பணத்தை வாரிக்கொடுத்தார்.

மனைவியின் மரணத்துக்குப் பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு ஹெர்ஷே 88வது வயதில் இறந்து போனார்.  இவர்களது ‘சாக்லேட் உலகத்தில்’ நாற்பரிமாண (ஃபோர் டி) திரைப்படம் காட்டப்படுகிறது. ஏதோ டாக்குமென்டரி போல என்று நினைத்தால் திரையில் இவர்களின் பிரபல தயாரிப்பான 3 வகை சாக்லேட்கள் நம்மைப் பார்த்துப் பேசுகின்றன.

நாம் பதில் சொல்லும்போது நமக்கு அவை பதில் சொல்கின்றன. வரிசை + சீட் எண் குறிப்பிட்டு இன்னார் சொன்ன இன்ன வாக்கியத்துக்கு இது பதில் என்று பேசும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. தொடர்ந்து வரும் சுவாரஸ்யமான கதை நம்மை சீட்டின் நுனிக்குக் கொண்டு வருகிறது.

3D பார்த்திருக்கும் நமக்கு 4D படு வியப்புதிரையில் தூக்கிப்போடும் பொருள் நம் காலில் வந்து விழுகிறது (சாக்லேட்கள் உள்பட). அங்கு கொம்பால் குத்தினால் அது நம் காலில் இடிப்பது போல் உள்ளது.

இவை எல்லாவற்றையும்விட சுவாரஸ்யமான விஷயம் ஒன்றுள்ளது.  சாக்லேட்களைச் சோதித்து ஆராய நம்மை அழைக்கிறார்கள்! இவர்கள் தரும் சாக்லேட்களைச் சுவைத்துப் பார்த்து (ஹிஹி... ஓசியேதான்) ஒவ்வொரு கட்டத்திலும் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம் முன்னால் உள்ள எலக்ட்ரானிக் பலகையில் பதில்களை அழுத்தி ஆராய்ச்சியில் பங்கு பெற வைக்கிறார்கள்.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ சாக்லேட் சாப்பிட்டு சுவையை ஆராய்ந்து ஃப்ளேவர்கள்... மென்மை… சுவை… கலர்... திடம் என்று சகலத்தையும் அலசிவிட்டு வெளியே வரும்போது அதைச் செய்தமைக்காக நமக்கு ஒரு சர்ட்டிஃபிகேட்டும் தருகிறார்கள்! இனிமேல் சாக்லேட் தின்ன சர்ட்டிஃபிகேட்டா என்றே கேட்கலாம்!சிரமம் பார்க்காமல் Hershey’s என்று கூகுள் செய்து ஆயிரக்கணக்காக கொட்டிக்கிடக்கும் போட்டோக்களில் சிலவற்றையாவது பாருங்கள். சாக்லேட் தயாரிப்பு வீடியோக்களில் ஒன்றையாவது பாருங்கள்.
பிரமித்து வியப்போம்!

வேதா கோபாலன்