COFFEE TABLE



அன்பான திருடன்!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இணையத்தில் ஹாட் வைரல். பெயர் வெளியிட விரும்பாத அவரின் வீட்டுக்குள் திருடன் புகுந்து பணம், கேமரா உட்பட பலவற்றை திருடிக்கொண்டு போய்விட்டான். நிலைகுலைந்து போனவர், ‘‘எனக்கு பணம் வேண்டாம். கேமரா வேண்டாம்.

நீ எடுத்துக்கொண்டு போன எந்தப் பொருளும் வேண்டாம். தயவுசெய்து கேமராவில் உள்ள மெமரி கார்டை மட்டும் என் வீட்டு அஞ்சல் பெட்டியில் போட்டுவிடு...’’ என்று ஒரு கடிதம் எழுத, அதை அவரின் நண்பர் இணையத்தில் வெளியிட, வைரலாகிவிட்டது அக்கடிதம்.
அந்த மெமரி கார்டில்தான் அவர் மிகவும் நேசித்த நாயின் புகைப்படம் உள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த நாய் இறந்துவிட்டது. திருடன் மெமரி கார்டை திருப்பிக்கொடுத்ததுதான் ஹைலைட்!

ஹாட்ஷிமா!

தெலுங்கில் இரண்டே இரண்டு படங்கள்தான் நடித்திருக்கிறார் ‘கொலைகாரன்’ ஆஷிமா நர்வல். ஆனால், இன்ஸ்டாவில் ஐம்பதாயிரம் ஃபாலோயர்களுடன் அசத்துகிறது பொண்ணு. கூடவே ‘மிஸ் இந்தியா குளோபல்’, ‘மிஸ் ஆஸ்திரேலியா எலிகன்ஸ்’ என கெத்து பயோடேட்டாஸ் வேறு! ‘‘கடல் பிடிக்கும். கடலலைபிடிக்கும்...’’ என ஆனந்தமாகும் ஆஷிமா, இந்தக் கோடையை அபுதாபியில் உள்ள லிவா பாலைவனத்தில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அந்த ‘ஹாட்’ (அதாங்க... வெயிலு!) தருணங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஹார்ட்டின்களை அள்ளிவிட்டார்.

தூசு புகாத கேமரா!

‘சாம்சங்’ நிறுவனத்தின் ‘கியர் 360’ என்ற கேமரா மனதை அள்ளுகிறது. 4K தரத்தில் 360 டிகிரி கோணத்தில் நமக்கு விருப்பமான எல்லாவற்றையும் இதில் வீடியோவாக்க முடியும். அத்துடன் இதிலுள்ள வைடு ஆங்கிள் லென்ஸ் மூலம் 180 டிகிரி கோணத்திலும் வீடியோக்களை க்ளிக் செய்யலாம். எடை குறைவு. வெப் கேமராவாகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தண்ணீர், தூசு புகாது  என்பது இதன் சிறப்பு. விலை. ரூ.19,700.

கரடுமுரடு ரெஜி!

தமிழில் நான்கு படங்களில் பரபரக்கும் ரெஜினா, கோடையை இனிதாக்க மேகாலயாவிற்குச் சென்று வந்திருக்கிறார். அங்கே நொக்ரெக் தேசிய பூங்காவிற்கு விசிட் அடித்து மகிழ்ந்த ரெஜி, பூங்காவின் கரடுமுரடான பாதைகளைக் கண்டு மிரண்டிருக்கிறார்.

செம்மண் சகதி நிறைந்த சாலையில் தன் வாகனம் செல்லும் அழகை, அப்படியே மொபைலில் அள்ளி, இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அப்புறமென்ன... அந்த குட்டியூண்டு வீடியோ ஒரு லட்சம் லைக்குகளை நெருங்கிவிட்டது.

குழந்தைகளைப் பாதிக்கும் காற்று மாசுபாடு

இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு விஷயம் என்றால் அது காற்று மாசுபாடுதான். இதனால் உலகம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தைப் பற்றி தினமும் செய்திகள் உலாவுகின்றன. இது அதில் புதுவரவு.‘‘உலகளவில் காற்று மாசுபாட்டால் 2018ம் வருடம் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் அசுத்தமான காற்று நம் ஆயுட்காலத்தில் சராசரியாக இருபது மாதங்கள் வரை பிடுங்கிக் கொள்கிறது...’’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

‘‘உடல் பருமனால் ஏற்படும் தீங்குகளைவிட காற்று மாசினால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் அதிகம். இதய நோய், சுவாசக் கோளாறுகள் முதல் புற்றுநோய் வரை பலவிதமான நோய்களுக்கு மூல காரணமாக இருப்பது காற்று மாசுபாடு தான்...’’ என்கின்றனர் மருத்துவர்கள்.

தவிர, காற்று மாசு பெரியவர்களை விட குழந்தைகளைத்தான் அதிகமாக பாதிக்கிறது. ‘டைப் 2’ நீரிழிவு நோய்க்கும் முக்கிய காரணமாக இருப்பது காற்று மாசுபாடுதான்.

குங்குமம் டீம்