ஒரு கோயில்... 13 நிலவறைகள்... ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...



அனைத்தும் மன்னர் குடும்பத்துக்கே!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் கதை


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தினை கேரள அரசின் கீழ் இயங்கும் தேவசம் போர்டு மேற்கொள்வதா அல்லது மன்னர் குடும்பத்தினர் நிர்வகிப்பதா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில், “திருவிதாங்கூர் மன்னரின் இறப்பு அரச குடும்பத்தின் சொத்துகள் மற்றும் உரிமைகளைப் பாதிக்காது. எனவே, கேரள பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தின் மீது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. அந்தக் கோயிலின் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஓர் இடைக்காலக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.

அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறைகள் திறக்கப்படுவது தொடர்பாக இடைக்காலக் குழு முடிவு செய்யும். இடைக்காலக் குழுவில் இந்து அல்லாதவர்கள் இடம்பெறக் கூடாது. இடைக்காலக் குழுவின் முடிவே இறுதியானது...” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
எதற்காக இந்தத் தீர்ப்பு... அப்படி பத்மநாபசுவாமி கோயிலில் என்னதான் இருக்கிறது... என்றறிய மூத்த பத்திரிகையாளர் த.இ.தாகூரை தொடர்பு கொண்டோம்.

‘‘திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக போரிட்டனர்; வெற்றியும் பெற்றனர். ஜெயித்த பகுதிகளில் இருந்து தங்கம் முதலிய  பொருட்களைக் கொண்டு வந்து பத்மநாபசுவாமி கோயிலில் வைத்தனர். இதுதான் அவர்களது வழக்கம்.

சுதந்திரத்துக்குப் பின் மக்களாட்சி மலர்ந்தபோது, திருவனந்தபுர சமஸ்தானம் இந்தியாவுடன் சேர விரும்பாமல் மறுப்பு தெரிவித்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், அன்றைய மன்னர் சித்திரைத் திருநாள் மகாராஜாவிடம், ‘நீங்கள் இந்த நாட்டைக் கொடுப்பதற்கு நாங்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்... அரசு பதவிகள், குறிப்பாக கவர்னர் போன்ற பதவிகள் கொடுக்கவும் முன்வருகிறோம்’ என்றார்.

இதற்கு மன்னர், ‘நாட்டை விட்டுத் தருகிறோம். அதற்கு பதிலாக எந்தப் பதவியும் வேண்டாம். மாறாக, பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகமும், கனகக் குன்று கொட்டாரமும் எங்களுக்குரியது என்ற உரிமையை மத்திய அரசு தரவேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். இதை மத்திய அரசு ஏற்றது.
பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை திருவிதாங்கூர் சமஸ்தானம் கேட்டதற்கு வலுவான காரணமிருக்கிறது.

அந்த சமஸ்தானத்து மன்னர்கள் எப்போதும், ‘இது என் ஆட்சி அல்ல, பத்மநாபசுவாமி ஆட்சி’ என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். வரலாறும் இது தொடர்பாக நிறைய சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.பத்மநாபசுவாமி கோயிலைக் கட்ட முடிவு செய்ததும் ஸ்தபதி அந்த இடத்தைப் பார்வையிட்டார். அப்போது கோயிலின் கீழ் ஒரு நீரோட்டம் இருப்பதை அறிந்தவர், அதை சோதிக்க முடிவு செய்தார். மன்னரும் இசைந்துள்ளார்.    
உடனே கல் ஒன்றை நூலில் கட்டி கீழே இறக்கினர். என்ன நினைத்தார்களோ அக்கல்லை மீண்டும் மேலே எடுத்து மன்னரின் கணையாழியையும் அதில் இணைத்து இறக்கினர்.

ஆழமாகச் சென்றுள்ளது. பின்னர் நூலினை மேலே எடுத்துப் பார்த்தபோது கணையாழி இல்லை!சில மாதங்களுக்குப் பின், ஒரு நாள் காலையில் மீனவர் ஒருவர் அந்தக் கணையாழியைக் கொண்டு வந்து மன்னரிடம் கொடுத்துள்ளார்! ‘கடலில் பிடித்த மீன்களை வெட்டியபோது, ஒரு மீனின் வயிற்றில் இந்த மோதிரம் இருந்தது...’ என்று தெரிவித்திருக்கிறார்.இதனையடுத்து அந்த மீனவரைப் பாராட்டிய மன்னர், அவருக்கு பரிசுகளைக் கொடுத்து, அந்த மீனவருக்கு தங்கள் குடும்ப பெயரோடு பத்மநாபன் என்ற பெயரையும் இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.

திருவிதாங்கூர் ஆட்சியில் பல்வேறு போர்கள் நடந்தன. எண்ணற்ற வெற்றிகளும் குவிந்தன. இதில் 17ம் நூற்றாண்டில் நிகழ்ந்த ‘குளச்சல் போர்’ முக்கியமானது.திருவனந்தபுரம் தலைநகரை வெற்றி பெறவேண்டும் என்பதற்காக டச்சுப் படைகள் குளச்சல் பகுதி கடலில் கப்பல்களை நங்கூரமிட்டு போருக்காகக் காத்திருப்பதாக மன்னருக்கு செய்தி வந்தது. உடனே அப்படைகளை எதிர்க்க 14 ஆயிரம் வீரர்களை மன்னர் அனுப்பினார்.

மன்னர் படைகளிடம் இருந்தது கம்பு, ஈட்டி, வாள்… போன்றவைதான். என்ன செய்வது என்று யோசித்த மன்னர், கடற்கரையோரங்களில் இருந்த பனை மரங்களை இரண்டிரண்டாக வெட்டி அதை கால் வண்டியின் மீது வைத்தார்.

தொலைவிலிருந்து யார் பார்த்தாலும் அது பீரங்கி போல் தெரியும்! அப்படித்தான் டச்சுப் படைகளும் நினைத்து கரைக்கு வர அஞ்சின. இதனைப் பயன்படுத்தி இரவில் டச்சுக் கப்பலுக்குள் நுழைந்து அவர்களது படைத்தளபதியான டிலனாய் என்பவரைக் கைது செய்தனர்.

அரண்மனையில் மன்னிப்பு கேட்ட டிலனாயை மதிக்கும் வண்ணம் தன் படைக்கு அவரையே தலைவராக்கியுள்ளார் மன்னர் மார்த்தாண்ட வர்மா. இதனையடுத்து நடைபெற்ற போர்கள் அனைத்திலும் திருவிதாங்கூர் மன்னர் வெற்றி பெற்றார். இதற்குக் காரணம் டிலனாய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

எனவே, மன்னர் வணங்கக் கூடிய குமாரபுரம் முருகன் கோயில் கருவறையின் அருகில் டிலனாய்க்கு சிலை வைக்கப்பட்டது!  
மைசூரில் பல ஆண்டுகள் மழையில்லாத காலத்தில், ‘திருவிதாங்கூர் மகாராஜா பத்மநாபசுவாமி மீது பக்தியுடையவர். அவர் இங்கு பூஜையில் கலந்து கொண்டால் மழை பெய்யும்’ என்று ஒருவர் சொல்லியுள்ளார்.

அந்த நம்பிக்கையில் மைசூர் ராஜா, தகவல் ஏதும் சொல்லாமல், ‘நாங்கள் ஒரு பூஜை நடத்துகிறோம், அதற்கு வாங்க’ என்று அழைக்க, மன்னரும் அங்கு சென்றிருக்கிறார். பல்லக்கிலிருந்து மன்னர் தன் காலை எடுத்து வெளியே வைத்து இறங்கும் இடத்திலிருந்து அரண்மனை வரை தங்கத்தாலான நீண்ட விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.

தனது காலை மீண்டும் மேலே தூக்கிக் கொண்ட மன்னர், ‘இதை மிதிக்க மாட்டேன். இது என் பத்மநாபசுவாமியின் உடல்’ என்று சற்று நகர்ந்து தரைப்பகுதியில் இறங்கினார்! மறுநொடியே மழை கொட்டத் தொடங்கியது!  இப்படி திருவிதாங்கூர் மன்னர்கள் குறித்தும் பத்மநாபசுவாமி கோயிலுடன் அவர்களுக்கு இருக்கும் பிணைப்பு பற்றி யும் எண்ணற்ற சம்பவங்கள் சரித்திரத்தில் பதிவாகியுள்ளன.

எனவேதான் மக்களாட்சி மலர்ந்த பிறகும் மன்னர் குடும்பத்தினர் மீது திருவிதாங்கூர் மக்கள் அன்பு வைத்திருக்கின்றனர். இன்றும் மரியாதை செலுத்துகின்றனர்.மன்னர் முறை ஒழிப்புக்கு முன்பு வரை தினசரி காலையில் மன்னர் திறந்த வாகனத்தில் அமர்ந்து பத்மநாபசுவாமி கோயிலுக்கு வருவார். அப்போது வழிநெடுக மக்களைப் பார்த்துக் கையசைப்பார்.

மன்னரின் வாகனத்துக்கு பதிவு எண் கிடையாது. கேரள லட்சிய சின்னமான சங்குதான் அதில் பொறிக்கப்பட்டிருக்கும்...” என்று கூறும் த.இ.தாகூர், பத்மநாபசுவாமி கோயிலில் எங்கிருந்து சிக்கல் ஆரம்பித்தது என்பதையும் விளக்கினார். ‘‘பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும் கூட தேவசம் போர்டு என்ற அமைப்பின் கீழ் நிர்வகிக்கும் பொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. மன்னர் குடும்பமும், அந்த அமைப்பும் ஒருவருக்கொருவர் தலையிடாமல் இருந்தனர்.

இந்திரா காந்தியின் உதவியாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சுந்தர்ராஜன் பராமரிப்புக் குழுவில் ஒருவராக சேர்க்கப்பட்டார். அப்போது நடந்த சரஸ்வதி பூஜைக்கு குமரி மாவட்டத்திலிருக்கும் தாணுமாலயன் சுவாமி கோயிலிலிருந்து மேனிகள் எழுந்தருளி திருவனந்தபுரத்திற்கு செல்வதும், அங்கு பத்து நாட்கள் தங்கி பூஜை முடிந்து மீண்டும் திரும்புவதும் வழக்கம். இன்றும் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

14 ஆண்டுகளுக்கு முன் இப்படி நடந்த வைபவத்தில் ஒரு பிரச்னை எழுந்தது. அதாவது, எடுத்துச் செல்லப்பட்ட நகைகளில் பாதி திரும்பி வரவில்லை!
இதனையடுத்து ‘இனிமேல் எந்த நகைகள் எடுத்தாலும் அது குறித்து குறிப்பு எழுதி வைக்க வேண்டும்’ என்ற வழக்கம் அமலுக்கு வந்தது.

சில ஆண்டுகள் கழித்து ஒரு முறை மன்னருடைய குடும்பத்தார் நிலவறைகளிலிருந்து சில நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அங்கிருந்த அதிகாரி, ‘எடுத்ததை பதிவு செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இப்படி சிறுகச் சிறுக பிரச்னைகள் வெடிக்கத் தொடங்கின. இந்நிலையில் ஒருநாள் கோயில் கருவறை சுத்தம் செய்யப்பட்டது.பத்மநாபசுவாமி கோயில் கருவறையில் மின்விளக்குகள் கிடையாது.

எண்ணெய் விளக்குகள் மட்டும்தான். எனவே புகைபடிந்திருந்த கருவறை சுவர்களை சுத்தம் செய்தபோது கருவறையே தங்கத்தால் மின்னியது! கருவறையிலேயே இவ்வளவு தங்கம் இருக்கிறதென்றால்... நிலவறையில் எவ்வளவு இருக்கும்..? நிலவறைக்குள் மன்னர் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என்று எழுதப்படாத கட்டளை இருப்பதன் காரணம் இதுதானா...

இப்படி கேள்விகள் எழுந்ததும் நிலவறையைப் பார்வையிட தேவசம் போர்டைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு மன்னர் குடும்பம் அனுமதிக்கவில்லை. இந்த விஷயம் வெளியில் கசிந்த பிறகும் மக்கள் மன்னர் குடும்பத்தையே ஆதரித்தனர்.  

இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தை அரசு கவனிக்க வேண்டும் என 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருவிதாங்கூர் அரச குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த விசாரணையில், கேரள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இரண்டு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் ரகசிய நிலவறைகளைத் திறக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து நிலவறையில் இருந்த 13 அறைகளில் 12 அறைகள் திறக்கப்பட்டன. அந்த அறைகளில் தங்கத்தாலான நிறைய சாமி சிலைகள், விலை மதிக்க முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், தங்க நாணயங்கள், நகைகள், அரிய வகை கற்கள் போன்றவை கிடைத்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

அதிகாரிகள் இவற்றைக் கணக்கிட்டபோது மன்னர் குடும்பத்தினர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. முழுமையாக ஒத்துழைத்தனர்.
ஆனால், 13வது அறையை மட்டும் திறக்க மன்னர் குடும்பம் அனுமதிக்கவில்லை. அந்த அறையின் கதவு வெண்கலத்தால் ஆனது.

ஆளுயர பாம்பு சிற்பம் அக்கதவின் மீது செதுக்கப்பட்டிருக்கிறது. ‘பல நூற்றாண்டுகளாக இந்தக் கதவு திறக்கப்படாமலேயே இருக்கிறது. இக்கதவைத் திறந்தால் நாட்டுக்கு தோஷம் ஏற்படும் என்பதால் எந்த மன்னரும் இக்கதவைத் திறக்கவில்லை...’ என மன்னர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் அந்த 13வது அறை அன்றும் திறக்கப்படவில்லை. இனியும் திறக்கப்படுமா என்று தெரியவில்லை.ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. அதில், ‘பத்மநாபசுவாமி கோயில் சொத்துகள் மன்னர் குடும்பத்திற்கு மட்டுமே உரிமையானது’ என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது...’’ என வழக்கின் பாதையை விவரித்தார் த.இ.தாகூர்.

அன்னம் அரசு