திருஷ்யம் 2



இதன் அடுத்த பாகமான ‘திருஷ்யம் 2’ அமேசான் ப்ரைமில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு தந்தையின் கதை தான் இந்தப் படம். கேபிள் டி.வி ஆபரேட்டராக இருக்கிறார் ஜார்ஜ்குட்டி. அவருக்கு ராணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

மூத்த மகள் பெயர் அஞ்சு. போலீஸ் ஐ.ஜி. கீதாவின் மகன் வருண். சரியாக வளர்க்கப்படாதவன். அஞ்சுவை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டுகிறான் வருண். ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக அஞ்சுவால் தாக்கப்பட்டு வருண் இறந்துபோகிறான். விபத்துபோல நடந்த இந்தச் சம்பவத்தால் நிலைகுலைந்து போகிறது ஜார்ஜ்குட்டியின் குடும்பம். சட்டத்தை மீறி வருணின் உடலை ரகசியமான ஓர் இடத்தில் புதைத்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் சாமான்யனான ஜார்ஜ். இதுதான் முதல் பாகம்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தின் கதை நடக்கிறது. இப்போது ஒரு தியேட்டரின் உரிமையாளராக இருக்கிறார் ஜார்ஜ்குட்டி. அத்துடன் திரைப்படம் எடுக்க ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து வருகிறார். வருடங்கள் ஓடினாலும் பழைய பாதிப்பிலிருந்து அஞ்சுவால் இன்னும் மீள முடியவில்லை. பயத்தில் அவளுக்கு வலிப்பு வந்து தொந்தரவு செய்கிறது.

ஊருக்குள் வருணைக்  கொலை செய்தது ஜார்ஜ்குட்டிதான் என்று அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள். ஜார்ஜ்குட்டியின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் ரகசியமாக கவனித்து வருகிறது காவல்துறை.  ஜார்ஜ்குட்டி வருணைப் புதைத்த இடத்தை போலீஸ் கண்டுபிடித்துவிடுகிறது. வசமாக மாட்டிக்கொள்கிறார் ஜார்ஜ்குட்டி. இருந்தாலும் தனது புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி அவர் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றினார் என்பதே அசல் திரில்லிங் திரைக்கதை.

ஆரம்பத்தில் மெதுவாக நகர்கிற திரைக்கதை இடைவெளிக்குப் பின் ஜெட் வேகத்தில் பறந்து நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் அவ்வளவு விறுவிறுப்பு; எதிர்பாராத திருப்பங்கள்.

குறிப்பாக வசனங்களும் இடைவெளி டுவிஸ்ட்டும் க்ளைமேக்ஸும் கைதட்டல்களை அள்ளுகின்றன. மீண்டும் ஒருமுறை தன் குடும்பத்தைக் காப்பாற்றி ஜார்ஜ்குட்டியாகவே மனதில் பதிகிறார் மோகன்லால். மீனாவும் தன் பங்குக்கு நடிப்பில் அசத்துகிறார்.  நல்லதொரு திரில்லிங் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜித்து ஜோசப்.

தொகுப்பு: த.சக்திவேல்