சிறுமியைக் காக்கும் படைவீரன்



‘2020-ம் வருடத்தில் வெளியான சிறந்த 10 படங்களில் இதுவும் ஒன்று’ என பல சர்வதேச பத்திரிகைகள் இப்படத்தைக் கொண்டாடுகின்றன. கடந்த வாரம் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி டிரெண்டாகிவிட்டது. விற்பனையில் சக்கைப்போடு போட்ட அமெரிக்க நாவலான ‘நியூஸ் ஆப் த வேர்ல்டை’த் தழுவியது இப்படத்தின் கதை.

அமெரிக்காவின் உள்நாட்டுப்போரில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்றவர் கிட். அவர் போர்க்களத்தில் இருந்தபோது, மனைவி காலரா நோயினால் இறந்துவிட்டார். இப்போது தனக்கென்று யாருமே இல்லாமல் தனியாக வாழ்ந்துவருகிறார். ஊர் ஊராகச் சென்று நாளிதழில் வரும் சுவாரஸ்யச் செய்திகளை ஒரு கதையைப் போல படித்துக்காட்டுவது அவரது தொழில்.

இதற்காக பார்வையாளர்களிடம் ஒரு தொகையை வசூலித்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார். தொழில் நிமித்தமாக ஓர் ஊருக்குச் செல்லும்போது, வழியில் தனியாகத் தவித்துக்கொண்டிருந்த ஜோஹன்னா என்ற சிறுமியைச் சந்திக்கிறார். பெற்றோரை இழந்தவள். பழங்குடியினரால் கடத்திக்கொண்டுபோய் வளர்க்கப்பட்டதால் அவளுக்கு ஆங்கிலம் தெரியாது.

ஜோஹன்னாவுக்கு அத்தையும் மாமாவும் மட்டுமே. அவர்களிடம் ஜோஹன்னாவைக் கொண்டு சேர்க்க பலரிடம் உதவி கேட்கிறார் கிட். ஆனால், யாருமே உதவ முன்வருவதில்லை. இறுதியில் ஜோஹன்னாவை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை, தானே ஏற்றுக்கொள்கிறார். அவர் இருக்கும் இடத்திலிருந்து 400 மைல்  தொலைவில் ஜோஹன்னாவின் உறவினர்கள் இருக்கிறார்கள். கிட்டின் குதிரை வண்டியில் சென்றால் மூன்று வாரங்களாவது ஆகும். அத்துடன் வழியில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது.

கரடு முரடான பாதை, புழுதிப்புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், இராணுவத்தின் விசாரிப்புகள், சிறுமியை விலை கேட்கும் வில்லன்கள், வண்டிக்கு ஏற்படும் சேதம் என வழியில் பல ஆபத்துகளை எதிர்கொள்கிறார் கிட். இதையெல்லாம் மீறி ஜோஹன்னாவை வீடு சேர்க்கிறார். அதற்குப்பின் நடக்கும் நெகிழ்வுச் சம்பவங்களே திரைக்கதை.

அறுபது வயதை நெருங்கும் கிட்டுக்கு பழங்குடியின் மொழி தெரியாது. பத்து வயதான ஜோஹன்னாவுக்கு ஆங்கிலம் தெரியாது. வயதையும் மொழியையும் தாண்டி இருவருக்குள்ளும் ஏற்படும் பிணைப்பு அருமை. சுரங்கத் தொழிலில் அடிமையாக வேலை செய்பவர்களிடம் செய்தியைப் படித்துக்காட்டி புரட்சியை ஏற்படுத்தும் கிட் அப்ளாஸை அள்ளுகிறார்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நம்மை அப்படியே கதையுடன் கட்டிப்போடுகிறது. குறிப்பாக கிட்டாக டாம் ஹாங்ஸும் ஜோஹன்னாவாக ஹெலனாவும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பிட்ட வயதுக்குப் பின் என்ன மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார் டாம். மனதை அள்ளும் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பால் க்ரீன்கிராஸ்.