சக்ரா



உங்கள் யூகம் சரிதான். மிலிட்டரி ஹீரோ தன் வீட்டுக்காகவும்  தன் ஊருக்காகவும் எடுத்து வைக்கும் இன்டலிஜென்ட் மூவ்தான் ‘சக்ரா’.சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் அடுத்தடுத்து 50 வீடுகளில் நகையும், பணமுமாக திருட்டு நடக்கிறது. அத்தனை பேரின் வீடுகளிலும் வயதானவர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

அதே நாளில் ஹீரோ விஷாலின் வீட்டில் அவர் உயிராய் நேசிக்கும் சக்ரா விருதும் காணாமல் போகிறது. நகரமே கொள்ளை சம்பவங்களால் அதிர்ந்து போகிறது. ஷாக் ஆன போலீஸ் அதிகாரி ஷ்ரத்தாவுக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை.  மிலிட்டரியில் இருக்கும் தன் காதலன் விஷாலுக்கு தகவல் சொல்ல முயற்சிக்கிறார். விஷாலோ, தன் அப்பாவின் சக்ரா விருதை கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்க வந்திருக்கிறார்.. அப்புறமென்ன? மிலிட்டரியும் போலீஸும் கைகோர்க்கிறார்கள். இருவரும் சேர்ந்து அந்த ராபரி கும்பலை ஸ்ட்ராபெர்ரி ஜூஸாக்கி பிழிவதுதான் மீதிக்கதை.

மிலிட்டரி மேனாக விஷால். அவரது ஹைட்டும் வெயிட்டுமான கேரக்டர் என்பதால் பதற்றமே இல்லாமல் விளையாடியிருக்கிறார். ஏ.டி.எம்.மின் வயதான வாட்ச்மேனிடம் ஆத்திரப்படும் இளைஞனுக்கு ஒரு பளார் விட்டு, நடப்பு அரசி யலைப் புட்டு வைக்கும் இடத்தில் தேசத்தை நேசிக்கும் ராணுவ வீரன் ரோலுக்கு வலு சேர்க்கிறார். அசிஸ்டன்ட் கமிஷனரான ஷ்ரத்தா ஸ்ரீநாத், போலீஸ் உடையில் கனகச்சிதம். ஆனால், படத்தின் ரியல் ஹீரோயின் ரெஜினா கஸாண்ட்ராதான்.

ராபரி குயினாக பின்னி பெடலெடுக்கிறார். ஹேக்கிங்கில் மிரட்டுவதாகட்டும், செஸ் மாஸ்டராக கலக்குவதாகட்டும், போலீஸிடம் பிடிபட்டுவிடுவோம் என பயந்து அவர் நடுங்குவதாகட்டும், ரெஜினா மனதில் நிற்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார் கே.ஆர்.விஜயா. விஷாலின் பாட்டியாக அன்பைக் குழைத்திருக்கிறார். படத்தில் ரோபோ சங்கர், விஜயபாபு, அருள்தாஸ், நீலிமாராணி, மனோபாலா, சிருஷ்டி டாங்கே.. என பலரும் பலம்.

சைபர் க்ரைம் பின்னணியில் விரியும் கதை... கார்ப்பரேட் கம்பெனியின் சாஃப்ட்வேரை ஹேக் செய்து கைவரிசை காட்டும் கும்பலின் ஹெட் ஒரு பெண் தான் என தெரியும் இடம்... பாடல் தேவைப்படாத... குழப்பமில்லாத ஸ்கிரிப்ட் என பல ப்ளஸ்கள் மூலம் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன். ஆக்‌ஷன் த்ரில்லருக்கான இசையைத் தந்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. பாலசுப்ரமணியெத்தின் கேமரா பரபரப்பு, வேகம் எல்லாம் நேர்த்தி. சைபர் க்ரைம் ஆட்டத்தை இன்னும் ஆடியிருந்தால்... அட்டகாசமாகக் கவர்ந்திருக்கும்.

குங்குமம் விமர்சனக் குழு