வாடிக்கை



இன்னும் பூக்காரி வரவில்லை. சாயங்காலம் ஆனதும் அவள் குரல் தனித்துக் கேட்கும். ‘பூம்மா... பூவ்வேய்’. சந்துரு கூடக் கேலியாகச் சொல்வான். பூவுக்கே வலிக்கும்... இப்படிக் கத்தினால். ஆனால், அவள் நிலைமை அப்படி. எத்தனை தெருக்களுக்குப் போக வேண்டும். இப்போது பன்மாடிக் குடியிருப்புகள் வந்து விட்டன.
தனி வீடுகளில் வாசலில் நின்று கூவினால் போதும். வாடிக்கையாய் வாங்குபவர்கள் வந்துவிடுவார்கள். இந்தமாதிரி அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் இரண்டாம்/ மூன்றாம் தளம் வரைக்கும் அவள் குரல் கேட்க வேண்டும். அப்போதுதான் கூடை காலியாகி வயிறு நிரம்பும்.

மூன்று நாட்களாய் அவள் வரவில்லை. நாளை வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் என்னதான் விளக்கு ஏற்றி, ஊதுபத்தி கொளுத்தி வைத்தாலும் பூ வைக்கும்போது கிட்டுகிற நிறைவு, இல்லாதபோது வருவதில்லை. சந்துரு அதற்கும் சிரிப்பான். அவனுக்கு எல்லாமே கேலிதான். எதற்கும் மனசுதான் காரணம் என்பான்.

‘‘உள்ளே உருகு. அதுதான் பக்தி. இருக்கிறப்போ வைக்கிற. இல்லாதப்போ அதையும் ஏத்துக்கணும்...’’ பூரணிக்கு அது புரியாமல் இல்லை. ‘‘வச்சா நல்லாருக்கும்னு தானே சொல்றேன்...’’ என்று முனகுவாள். அவர்களுக்குள் இம்மாதிரி முனகல் வரும்போது சந்துரு சத்தம் போடாமல் ஒரு தேநீர் தயாரித்து வந்து அவளிடம் நீட்டுவான்.

வீட்டில் இரண்டே பேர் இருப்பதில் சில வசதிகள். சில முனகல்கள். அவரவர் வேலையில் மூழ்கிப் போகும்போது எதுவும் தோன்றாது. தொலைக்காட்சியும் அலுத்துப் போய்... பால்கனிப்பக்கம் நிற்பதும் வெறுத்து... வாசிக்கவும் தோன்றாமல்... வீட்டின் நான்கு மூலைகளில் இருந்தும் ஒருவித வெறுமை தன் கரங்களை நீட்டிக் கொண்டு கட்டிக்கொள்ள வரும்போது சற்றே தூக்கிவாரிப் போடும்.

தன்னையும் அறியாமல் உடம்பு சிலிர்க்கும். சந்துருதான் அதைக் கவனித்து விட்டுக் கேட்டான்.“கவனிச்சிருக்கியா... எப்பவாச்சும் உனக்கு உடம்பு சிலிர்த்துகிட்டு தானாக் குலுக்கிப் போடுது... ஊட்டில நிக்கிறாப்ல...”இதைப் பாதி வேடிக்கையாகவும் பாதி தீவிரமாகவும் சொன்னான். பூரணிக்கும் அது தெரிந்தே இருந்தது. இது அப்படியே அவள் அம்மாவிடம் இருந்த சுபாவம்.

அவள் அம்மாவுக்கும் இதே போலக் குலுக்கிப் போடும். இடுப்புக்கு மேல் சட்டென்று ஆரம்பித்து உச்சந்தலை வரை சிலிர்த்து ஒரு குலுக்கல். ஓரிரு வினாடிகளில். அது எதிர்பாராத ஒரு செய்தி கேட்டதாலா... சந்தோஷத்தாலா..? இன்ன காரணம் என்று வரையறுக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம். வந்தாலும் நாலைந்து வினாடிகள்தான். சட்டென்று நிகழ்ந்து விடும். எதிரில் நிற்பவருக்குத்தான் அது வினோதமாகத் தென்படும்.“எங்கம்மாக்கு வரும். எனக்கும் வருது. இப்போ என்ன அதுக்கு?” என்றாள் பட்டென்று.
‘‘ம்ம்... நல்லாருக்கு...” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் அப்போது.

முன்பெல்லாம் இருவரும் அரட்டை அடிப்பார்கள். நேரம் போவதே தெரியாமல். ‘‘ஹைய்யோ... மணி என்னாச்சு பார்த்தீங்களா... எப்போ சமைக்கிறது..?’’  
அவன் சிரிப்பான். ‘‘ட்ரெஸ் மாத்திக்க. வா வெளியே போய் சாப்பிட்டுட்டு வருவோம்...’’ போயிருக்கிறார்கள். சில நாட்களில் அவள் மறுத்துவிடுவாள். ‘‘நல்லாவா இருக்கு... காசை வீணாக்கிக்கிட்டு... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டிபன் செஞ்சுடறேன்...’’ சுடச்சுட டிபன் ரெடி ஆகிவிடும். மீண்டும் அரட்டை.

மணமாகி ஐந்து வருடங்கள். இதற்குள் அலுவலக மாற்றலும் வந்து விட இந்த ஊருக்கு வந்தார்கள். மலைக்கோட்டை, திருவானைக்கோவில், சமயபுரம், ரங்கம் என்று வந்த புதிதில் ஊரும் சுற்றியாகி விட்டது. பதினொரு மாதங்களும் வெய்யில் அடிக்கிற கந்தக பூமியில் வெளியே கிளம்புவதே அலுப்பு என்கிற மனநிலைக்கு மாறி விட்டாள். எப்போதாவது மழை வரும்போது பச்சைப் பிள்ளை போல் நனைந்தாள்.

இப்போது பூக்காரிக்காகக் காத்திருக்கையில் அவளையும் அறியாமல் உடம்பு குலுங்கியது. அதே நேரம் ‘பூவு.. பூவேய்’ என்ற குரலும் கேட்டது. இரண்டாவது மாடி வரை அவள் ஏறி வரவேண்டாம் என்று, தானே இறங்கிப் போய் விடுவாள் வழக்கமாய். இன்று ஏனோ ஒரு வித அலுப்பு. மேலே வரட்டும். அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

கீழே பூக்காரியின் குரல் இன்னும் வலுத்துக் கேட்டது. ‘‘அம்மா... பூவும்மா... பூவேய்...’’  பூரணிஅசையாமல் இருப்பதைப் பார்த்து சந்துரு எழுந்தான். “நான் வேணாப் போய் வாங்கிட்டு வரட்டுமா?”“இருங்க... அவ மேலே வரட்டும்...”தோளைக் குலுக்கிவிட்டு மீண்டும் அமர்ந்து விட்டான். இதென்ன பிடிவாதம் என்று அவன் மைண்ட் வாய்ஸ் அவளுக்கும் கேட்டது. இல்லை. இது பிடிவாதம் இல்லை. பத்து தடவை நான் போயிருக்கிறேன். நீ ஒரு தடவை மேலே வா. எதிர் வீட்டுக்கு வரீல்ல என்கிற கணக்கு.

படியேறி வருகிறாள் போல. குரல் இன்னும் கிட்டே கேட்டது. ‘‘பூவேய்... பூவும்மா...’’
இரண்டாம் தளத்திற்கு வந்து விட்டாள் என்று புரிந்ததும் பூரணி எழுந்து போனாள். சந்துரு வாய்க்குள் சிரிப்பது புரிந்தது. அதைக் கவனிக்காதவள் போலத்தான் போனாள்.
“என்ன ஆளையே காணோம்... நாலு நாளா?”பூரணியின் குரல் கணீரென்று கேட்டது. இனி அவள் பூக்காரியை விடமாட்டாள்.

பத்துப் பதினைந்து நிமிடமாவது அரட்டை. வீம்புக்கு மேலே வரவழைத்து விட்டாளே ஒழிய பூக்காரியும் அவளும் சிநேகிதிகள்தான். ‘‘என்கிட்டே எல்லாம் சொல்லிருவா...’’ என்று பூரணி ஒரு தடவை சந்துருவிடம் சொன்னபோது அவன் சிரித்தான்.
“உன்கிட்ட மட்டும் இல்ல... அவ வாடிக்கையா போகிற எல்லார்ட்டயும்தான் பேசுவா. ஏதோ உன்கிட்ட மட்டும் உரிமையா எல்லாம் சொல்றான்னு நினைச்சுக்காதே...”
பூரணி நொடித்துக் கொண்டாள். ‘‘எல்லாத்துக்கும் ஒரு எகத்தாளம் வச்சிருப்பீங்களே..!’’

அவளுக்கும் புரிந்திருக்கும். ஆனாலும் மனம் இப்படித்தான் நம்பவைக்கும். தன்னோடு பழகுபவர்கள்-தன்னைத்தான் முதன்மை இடத்தில் வைத்திருப்பார்கள் என்று.
மனிதருக்கே உள்ள பிறவிக் குணம். சந்துரு புத்தகத்தில் ஆழ்ந்துபோனதில் பூரணி திரும்பி வந்ததைக் கவனிக்கவில்லை. அரைமணி ஓடிவிட்டது. எப்போது வந்தாள். ஏன் முகம் வாடியிருக்கிறது..? சந்துரு தேநீரை நீட்டினான். கையில் வாங்கவில்லை பூரணி. நிஜமாகவே ஏதோ அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும்.

“என்னம்மா?”“பூக்காரியோட மருமவனுக்கு கண்ணுல அடிபட்டுருச்சாம்... வலது கண் பார்வை போயிருச்சாம்...’’“அடக் கடவுளே...’’ கேட்டதும் அதிர்ச்சிதான் அவனுக்கும். இவன் வயதுதான் இருக்கும் அவனுக்கும். இரண்டு குழந்தைகள். பெரியவனுக்கு ஏழு வயது. சின்னவளுக்கு மூணு வயது. 23 வயதிலேயே கல்யாணம். பூக்காரி சொல்லி இருக்கிறாள். “ரெண்டு புள்ளைங்களை வச்சுகிட்டு என்ன செய்யப் போறோமோன்னு அழுதுட்டு போறா...”
“ஹ்ம்ம்...”

எப்படி சமாதானம் சொல்ல. பூரணி, தானாய் அமைதி ஆகட்டும் என்று விட்டு விட்டான். இரவும் சாப்பாடு சரியாகச் சாப்பிடாமல் படுத்து விட்டாள்.
இப்போது அடிக்கடி கை நோவு என்று சொல்வதால் வீடு பெருக்கித் துடைக்க, பாத்திரங்கள் தேய்க்க ஆள் அமர்த்தி இருந்தார்கள். அந்தப் பெண்மணி நேற்று வரவில்லை. இரண்டு நாள் பாத்திரங்கள் அப்படியே கிடந்தன. சந்துரு, தான் விளக்கித் தருவதாகச் சொல்லியும் பூரணி விடவில்லை. ‘‘இருங்க... இன்னிக்கு வராளான்னு பார்ப்போம்...’’ என்று தடுத்து விட்டாள்.
மாலை நாலு மணிக்கு வந்தார். முகம் வீங்கி கண்கள் சிவந்து... பூரணி தவித்துப் போனது நன்றாய்த் தெரிந்தது.

‘‘என்ன ஆச்சு..?’’
இப்போது கழுவப்படாத பாத்திரங்கள் இரண்டாம் பட்சமாகி விட்டன. பால்கனிப் பக்கம் போனார்கள். பேச்சு தெளிவாகக் கேட்கவில்லை. அழுகை மட்டும் துல்லியமாய்க் கேட்டது. பூரணி உள்ளே வந்து டீ போட்டுக் கொடுத்தாள். வீடு பெருக்க வேணாம் என்று அனுப்பி விட்டாள்.‘என்னவாம்’ என்று அவன் கேட்பதற்கு முன்பே பொரிந்து தள்ளினாள்.

‘‘என்ன ஆம்பளைங்களோ... ஆன்னா ஊன்னா கை நீட்டறது... மாட்டை அடிக்கிறாப்ல அடிச்சிருக்கான் பாருங்க...’’
‘‘தடுக்க மாட்டாங்களா அக்கம்பக்கத்துல?’’‘‘ஊஹூம். வேற மாதிரி பிரச்னை ஆயிரும். அடுத்த வீட்டுக்காரன் மட்டும் என்ன ஒழுங்கு..? அவனும் கை நீட்டறவன்தானே..?’’
‘‘ஹாஸ்பிட்டல் போகலியா?’’‘‘போகலியாம். மெடிக்கல் ஷாப்ல கேட்டு ஏதோ மாத்திரை வாங்கிப் போட்டுருக்கா...’’‘‘ஹ்ம்ம்...’’‘‘இந்த மாதிரி ஆண்களை ரோட்டுல வச்சு வெளுக்கணும்...’’அவன் வாசல் பக்கம் போய் விட்டான்.

ஒரு வாரம் சுமுகமாய் ஓடியது. மறுபடி பூக்காரி, வேலைக்காரி இருவரையும் காணோம். தற்செயலாய்க் கீழே போனவள் கீழ் வீட்டுக்காரப் பெண்மணியிடம் பேசி இருக்கிறாள்.
‘‘பூக்காரம்மா அப்பவே வந்துட்டு போயிட்டாங்களே... பூ வாங்கிட்டேன் நானு...’’‘‘ஏன் மேலே வரல... குரலும் கொடுக்கல..?’’‘‘தெரியல...’’
இன்னொரு வீட்டுக்கும் இதே வேலைக்காரம்மா. ஃபோன் செய்தாராம். கிராமத்துக்குப் போவதாய். ஒரு வாரம் வர மாட்டாராம்.

பூரணி மேலே ஏறி வந்தபோது முகம் கடுத்திருந்தது. ‘‘என்ன மனுஷங்க. உரிமையா கைமாத்துலாம் வாங்கிக்கறாங்க. ஆனா தகவல் தர மாட்டேங்கிறாங்க. நேத்துதான் அர்ஜெண்ட்டா ஆயிரம் ரூபா வேணும்னு வாங்கிட்டு போனா. சம்பளத்துல பிடிச்சுக்கன்னு...’’‘‘அது உன் குணம் தெரிஞ்சு உரிமையா வாங்கறது...’’
‘‘பூக்காரிக்கு அப்பப்ப பணம் கொடுத்துடறேன். மத்த வீடு மாதிரி கடன் வைக்கிறதில்ல...’’‘‘ம்ம்ம்...’’ என்றான் என்ன சொல்வதென்று புரியாமல்.பூரணி அழாக்குறையாய் சொன்னாள். ‘‘நம்மகிட்டதானே ஒளிவுமறைவில்லாம இருக்கணும்?’’‘‘விடும்மா...’’அடுத்த நாள் பூக்காரியின் குரல் கேட்டது.

‘‘கால்ல கல் குத்திருச்சாம். கடுக்குதுன்னு போயிட்டாளாம்....’’ பூரணி சொன்னாள்.அடுத்த வாரம் வேலைக்கு வந்தவளின் முழங்கையில் தீக்காயம். குல தெய்வம் கோயிலுக்குப் போன போது நிகழ்ந்தது.‘‘இந்த மனுசனே வரேன்னுச்சு. போட்டது போட்டபடி இழுத்துகிட்டு போனேன். புத்தி வரட்டும்னு.

எதிர்ல அந்தம்மாவைப் பார்த்தேன். சொல்லச் சொன்னேனே... சொல்லலியா?’’பூரணி டீ போடப் போய் விட்டாள். இத்தனை நாள் இறுக்கம் தொலைந்திருந்தது. வாழ்க்கை அதன் பக்கங்களை எப்படியும் வண்ணங்களால் நிரப்பி விடுகிறது. இடையிடையே கறுப்பு வெள்ளையும்.

ரிஷபன்