50% இந்தியர்கள் பிறரைப்பற்றி கவலைப்படுவதில்லை!



உளவியல் சார்ந்த கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்களைக் கொண்டு சமீபத்தில் ஓர் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. 64 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு, 8,364 பேரிடம் நடத்திய அந்த ஆய்வில், சமூக விழிப்புணர்வு பெரிதும் மாறுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.31 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முதலிடத்தில் இருப்பது ஜப்பான்தான். அந்நாட்டைச் சேர்ந்த 72% பேர் சமூக அக்கறையுடன் செயல்படுகிறார்கள். இரண்டாமிடத்தில் ஆஸ்திரேலியா. அங்கு 69% பேர் சமூக அக்கறையுடன் இருக்கிறார்கள்.

இந்தியாவில்? 50% பேர் மட்டுமே சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவதாகவும், மீதமுள்ள 50% பேர் அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூக பொறுப்பு ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வில் 46% பெற்று கடைசி இடத்தை இந்தோனேசியா பெற்றுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 62% பேர் கணிசமான கேள்விகளுக்கு சமூக அக்கறையுடன் பதில் அளித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 58% ஆக குறைந்துள்ளது. இங்கிலாந்தில் 64% பேரும், கனடாவில் 57% பேரும் சமூக அக்கறையோடு செயல்படுவது தெரியவந்துள்ளது.  

ஒரு தனிநபர் தன்னுடைய தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு பிறருடைய தேவைகளைச் சிந்திக்காமல் செயல்படுவது இந்த ஆய்வின் மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளில் முதன்மையான ஜப்பானில், பாரபட்சமின்றி பாசம் வைக்கிறார்களாம். தாம் செய்யும் வேலையின் மூலமாகவே மற்றவருக்கு உதவி செய்வதில் அன்பு பொழிபவர்களாக இருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களிலும் மனித உறவை செழிப்பாக வைத்துள்ளனர். மூத்தோர்களை பொக்கிஷமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஒரு சொல் சொன்னால் அதுதான் வேதவாக்கு என்று பின்பற்றுகிறார்கள்.  

இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள மெக்ஸிகோவில், அன்பால் இணைந்த கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் எல்லோரும் கொண்டு வருகிற பொருளாதாரத்தை வைத்து எந்த ஒரு பிரச்னையும் இன்றி மகிழ்வோடு வாழ்கிறார்கள். நட்பு கொண்டவர்களையும் உறவுகளாகவே உணர்கிறார்கள்.

மூன்றாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் தங்களது அலாதியான அன்பைப் பொழிபவர்களாக இருக்கிறார்கள். யாராவது உதவியாக ஓர் முகவரி கேட்டால் கூட அந்த முகவரி சொன்ன பின், அவர் அங்கு சென்று விட்டாரா, சென்ற வேலை முடிந்து விட்டதா, தன்னால் ஏதும் அந்த வேலைக்காக உதவ முடியுமா என்று பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

இதுபோன்ற சூழலில், நம் சமூகக் கட்டமைப்பில் பிறரைப் பற்றி கவலைப்படாத நிலை உருவாக காரணம் எதனால்... இதை சரிசெய்ய ஏதும் வழி உண்டா... போன்ற கேள்விகளோடு மனநல மருத்துவர் வெங்கடேஷை சந்தித்தோம்.‘‘எந்த ஓர் ஆய்வின் முடிவையும் இறுதி முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை எல்லாம் வைத்துத்தான் சொல்ல முடியும். ஒவ்வொரு ஆய்விலும் நிறைய கருத்துக்கள் வித்தியாசப்படும்.  

இந்தியா பரந்துபட்ட நாடு. பல்வேறு கலாசாரம், படிப்பு, சூழல், அரசியல், மதம்… என வித்தியாசப்பட்டுள்ளது. சில இடங்களில் சதவிகிதம் குறைவாக இருந்திருக்கலாம், சில இடங்களில் 80% கூட இருந்திருக்கலாம். இதெல்லாம் கூட்டி, கழித்துச் சொல்வதுதான் இந்த 50%. என்னைப் பொறுத்தவரை அந்த 50% பேருக்காவது சமூக அக்கறையும், பிறரைப் பற்றி கவலைப்படுவதும் இருப்பது பெரிய விஷயம்தான்.  

மக்களுடைய சுறுசுறுப்பு, ஒழுக்கம், நேரத்திற்கு கட்டுப்பட்டு செயல்படுவது, உற்பத்தியில் கவனம் குவிப்பது... என ஜப்பானின் பொது மனம் எங்கோ, எப்போதோ வலுவாக கட்டப்பட்டுவிட்டது. இன்றைய அவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னால் நிற்பது அதுதான்.

ஜப்பானின் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை உலகம் உள் வாங்கி இருக்கிறது.
பல தேசிய இனங்களை ஒன்றிணைத்து ‘இந்தியா’ என்று உருவாக்கியிருக்கிறோம். மதம், சாதிய ரீதியான பிரச்னைகள் ஜப்பான் மாதிரியான நாடுகளில் இருக்குமா என்று தெரியவில்லை. அங்கு இனக்குழுக்கள் இருக்கலாம். ஆனால், இங்கு சின்னச் சின்ன ஊர்களிலும் சாதிய பெருமிதங்கள் இருப்பதும் அப்படியான சூழல் உருவாகிக் கொண்டிருப்பதும் அங்கு இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.

உண்மையில் சமூக அக்கறை உள்ளவர்களும், மாற்றத்திற்கான வேலைகள் செய்கிறவர்களும் தோற்றுவிடுகிறார்கள். என்ன செய்தாலும் மாறாது என்கிற அயர்ச்சி, நாம் ஏன் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவேண்டும்... நாம் பிழைத்தால் போதும், நம் குடும்பத்தை நிம்மதியாக வைத்துக் கொண்டால் போதும் என்கிற மனநிலையை நோக்கி நம் மக்கள் நகர்கிறார்கள்.

ஏன் இப்படி இருக்கிறார்கள்... ஏன் இப்படியொரு மனநிலை இங்கு உருவாகிறது..? காரணம் சிம்பிள். சிஸ்டத்தில் நேர்மை இல்லை. எங்கு போனாலும் ஊழல், காசு.

இப்படியான அமைப்புக்குள்ளேயே பழகிப் பழகி ஒரு பொதுக் காரணத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் தன்மை போய், தான் பிழைத்தால் போதும் என்கிற மன நிலைக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள்.  பொருளாதார ரீதியாகவும் ஒரு சிலர் இப்போதுதான் மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். படிப்பே மறுக்கப்பட்ட கூட்டம் படித்து சமூகத்தில் ஓர் அந்தஸ்தை நோக்கி பயணிக்கிறது. நிலமே இல்லாத கூட்டம் நிலத்தை சொந்தம் கொண்டாடச் செல்கிறது.

இந்த டாஸ்க்கே பெரும்பான்மையானவர்களுக்கு பெரிய டாஸ்க்காக இருக்கிறது. எனவே, விளிம்பு நிலையிலிருந்து மையத்தை நோக்கி நகர்ந்து வருகிற பயணத்தில், தன் தேவையை முதன்மையாக வைத்துக்கொண்டு மற்றவர்களைப்பற்றி நினைப்பதை இரண்டாவதாக வைத்திருக்கலாம்...” என்கிறவர், உறவு முறைகள் குறித்து சில கருத்துக்களை முன்வைத்தார். 

‘‘கூட்டுக் குடும்பத்தில், அந்தக் குடும்பத்திற்கான ஒழுக்க வரையறைக்குள் ஒருவரை நிறுத்தி வைக்க எளிதாக இருக்கிறது. அதே சமயத்தில் சில உள் முரண்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல் தனிப்பட்ட குடும்பத்திலும் சில நன்மை, தீமைகள் இருக்கின்றன. இதுதான் ஐடியலான சிஸ்டம் என்று சொல்வதற்கெல்லாம் ஒன்றும் கிடையாது.

பசி - தூக்கம் என்கிற அடிப்படைத் தேவை போல் ‘அன்பு, பாதுகாப்பு’ என்ற தேவை எல்லா உயிர்களுக்கும் இருக்கிறது. இது மனிதர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
‘சுயநலம் இல்லாத விஷயம் எதுவுமே கிடையாது. தாய் குழந்தைக்கு பால் கொடுப்பதில் கூட சுயநலம் இருக்கிறது. அன்பு, கருணை என்கிற உணர்வு, சக மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதெல்லாம் நமக்குள் பயலாஜிக்கலாகவே இருக்கிறது. அது எல்லாவற்றையும் தாண்டி வெளிப்புறமாகப் பார்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனி யூனிட். சமூகமாக இணைந்திருப்பதால் பெரிய உருவமாகத் தெரியலாம்.    

அன்பு, பாசம், கருணை எல்லாமே சும்மா மனிதன் கற்பித்த உணர்வுதான்’ என்று சொல்பவர்களும் உண்டு. வாழ்க்கை பல கோணங் களில் பலராலும் பார்த்து பேசக் கூடிய ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு பொது வாழ்க்கையில் இணக்கமான ஓர் உறவு, அன்பு, பாசம், பிறரைப் பற்றி சிந்தித்தல்... என்பது கட்டாயம் தேவைதான்...” என்கிறார்
மனநல மருத்துவர் வெங்கடேஷ்.                             

அன்னம் அரசு