ட்ரெண்ட் ஆகிறது பட்டாபட்டி!



கொரோனா காலத்தில் அனைவரும் சோர்ந்திருந்த நேரத்தில் நாம் பார்த்துப் பழகிய துணை நடிகர்கள் துவங்கி பெரிய நடிகர்கள் வரை அனைவரையும் இதுவரை நாம் அவர்களைப் பார்த்திராத கெட்டப்பில் - ஸ்டைலிஷ் லுக்கில் உடைகள்,  மேக்கப் எனக் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்.ஜே.சத்யா.‘தெறி’, ‘பைரவா’ படங்களில் விஜய்க்கு காஸ்டியூம் டிசைனர் இவர்தான். அதோடு ‘ஜிகர்தண்டா’, ‘ராஜா ராணி’, ‘போக்கிரி ராஜா’, ‘மான் கராத்தே’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற பல படங்களிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

நாசர், மனோ பாலா, சென்ராயன், மன்சூர் அலிகான், சரவணன், சாண்டி மாஸ்டர் என பலரையும், இதுவரை கண்டிராத வேறுபட்ட கோணத்தில் ஸ்டைலிங் செய்து ஃபோட்டோஷூட் செய்து டிரெண்டாக்கியவர் சாட்சாத் காஸ்டியூம் டிசைனரான என்.ஜே. சத்யாதான். இப்போது மாடர்ன் பட்டாபட்டி என்னும் கான்செப்ட்டில் புது டிரெண்டில் சென்னை சாலைகளில் அவர் சுற்றித் திரிய படக்கென மடக்கிப்பிடித்தோம்.

‘‘எது பண்ணாலும் நம்மள இந்த உலகம் உத்துப் பார்க்கணும்னு எடுத்துவச்ச அடிகள்தான் இதுவரை எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்கள்...’’ ஜாலி கேலி மோடில் பேச ஆரம்பித்தார் என்.ஜே.சத்யா. ‘‘எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி. கிராமத்துக்காரன். வளர்ந்தது எல்லாம் கிராமம்தான். அங்க இருந்து இங்க மஞ்சப்பை சகிதமா கனவுகளோடு வந்தவன். சென்னை வாழ்க்கை, சினிமா, டிசைனர் இப்படி என்னை நானே மாத்திக்கிட்டேன். எனக்கான தனித்துவத்தைக் காட்ட நினைச்சேன். அதன் விளைவுதான் இந்த போட்டோக்கள்.
எப்போதும் பார்த்துப் பழகினவர்கள் மற்றும் நடிகர்களை வேற ஒரு ஸ்டைல் லுக்ல காண்பிக்க நினைச்சேன்.

அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த சமீபத்திய போட்டோஷூட்கள். தொடர்ந்து கிராமத்திலே பழகினதை சிட்டி ஸ்டைல்ல டிரெண்டா எப்படி மாத்தறதுன்னு யோசிச்சேன். அதுதான் என்னை பட்டாபட்டி பாட்டம்வேர் கான்செப்ட்டை யோசிக்க வெச்சது. பட்டாபட்டினு சொன்னாலே அது அக்மார்க் கிராமத்து கெட்டப்தான். அதை நான் ஃபியூஷன் செய்தேன்...’’ என்னும் சத்யா, பட்டாபட்டி பேன்ட், மைனர் பெல்ட் , மஞ்சப்பை என சென்னை வீதிகளில் வலம் வந்து ஊரையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

‘‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பாலம்னு முக்கியமான இடங்களுக்கு அதிகாலையிலே பட்டாபட்டி பேன்ட், பெல்ட், மேலே ஹூட்டி ஜாக்கெட், கையிலே மஞ்சப்பைன்னு போயி நின்னேன். ஊரே என்னைய வெறிக்க வெறிக்க பார்த்துச்சு - ‘என்னடா இவன் இப்படி நிற்கறான்’னு.

பொதுவா காலை நேரம்தான் கொஞ்சம் கூட்டம் குறைவா இருக்கும். அதை மனசிலே வெச்சுதான் அந்த நேரத்தை ஃபிக்ஸ் செய்தேன். போட்டோக்களைப் பார்த்த பலரும் செம ஸ்டைலா இருக்கறதா சொன்னாங்க. பாரம்பரிய கிராமத்து உடைகளை மையப்படுத்தி நிறைய திட்டமிட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் ஒவ்வொண்ணா ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்...’’ கண்சிமிட்டுகிறார் சத்யா.
                   

ஷாலினி நியூட்டன்