இவை புடவைகளோ நகைகளோ அல்ல ...கேக்!



படைப்பாற்றலுக்கு வரம்பு இல்லை என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் இந்தப் படங்கள். ஆம். புனேவைச் சேர்ந்த தான்வி பால்ஷிகர் (Tanvi Palshikar) என்னும் செஃப், தான் செய்யும் கேக்குகளில் புதுமைகளைக் கையாள்கிறார்.அதாவது புடவைகள், நகைகள் வடிவில் கேக்குகளைத் தயாரிக்கிறார்!‘‘எனது தனிச் சிறப்பு பைதானி கேக் (Paithani cake). இதை வடிவமைக்கும்போதும், அதற்கான நிறங்கள் மற்றும் டீட்டைலிங் கொடுக்கும் போதும் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து மனநிறைவோடு செய்கிறேன். எனவே எப்போதும் இது எனது தனி விருப்பத்துக்குரியதாக இருக்கிறது...” என்கிறார் தான்வி.

அந்தளவுக்கு தான்விக்கு மகராஷ்டிராவின் பாரம்பரிய ஆடைகள், நகைகள் மீது அவ்வளவு ஈர்ப்பு... மரியாதை. “இது கேக் மட்டுமல்ல, மகாராஷ்டிராவின் உயர்ந்த பாரம்பரிய கலாசாரத்திற்கு என் அர்ப்பணிப்பு...” என்கிற தான்வி, பைதானி சேலையோடு Vajratik, Chinchpeti, Kudi, Bangdi, Nath, Kunku Box and some flowers போன்ற ஆபரணங்களையும் கேக்காக வடிவமைக்கிறார். இந்த கேக் முட்டை இல்லாமல் செய்யப்படுவது கூடுதல் சிறப்பு.   

ஐந்து கிலோ எடையுள்ள ஒரு கேக் செய்வதற்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அதிலும் நகைகள் வடிவமைப்பதற்கும், பைதானி புடவையில் ஜாரி வேலை செய்வதற்கும் அதிக நேரம் ஆகிறதாம்.  ‘‘இத்தகைய தனித்துவமான கலைகள் நமது வளமான கலாசாரத்தை பரப்ப உதவுகிறது. எனது கேக்குகள் சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் ஆர்டர்கள் குவிகின்றன. அத்துடன் மகாராஷ்டிராவின் கலாசாரமும் அனைத்துப் பகுதி மக்களிடமும் பரவுகிறது.

எனது தனிப்பட்ட ஆர்வத்துக்காக செய்ய ஆரம்பித்தது இப்போது எங்கள் மண்ணின் பாரம்பரியத்தை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல உதவுகிறது.எனவே, இனி சமையல் சார்ந்த எந்த அயிட்டத்தை தயாரித்தாலும் அதில் மகாராஷ்டிராவின் வேரும் கலாசாரமும் பிரதிபலிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன்...’’ என்கிறார் தான்வி.

சுடர்க்கொடி