சினிமா தியேட்டராக மாறிய ஆபரேஷன் தியேட்டர்! விஜய் படம் பார்த்தபடியே அறுவை சிகிச்சை...
இதை சாதித்தது தனியார் மருத்துவமனை அல்ல... துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை!
நோயாளியை சினிமா பார்க்கச் சொல்லிவிட்டு, ஓர் அறுவை சிகிச்சையை அவருக்கு மேற்கொண்டால் எப்படியிருக்கும்?
கேட்கவே நெஞ்சு படபடக்கிறது அல்லவா?! ஆனால், எந்த படபடப்பும் நோயாளிக்கு ஏற்படாதவாறு இப்படியொரு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து அசத்தியிருக்கிறது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் அந்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவரும், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணருமான ஜான் விஸ்வநாத்.

‘‘முதல்ல நோயாளியைப் பற்றியும் அவருக்கான பிரச்னை பற்றியும் சொல்லிடறேன்” என்ற படியே நம்மிடம் பேசத்தொடங்கினார் மருத்துவர் ஜான் விஸ்வநாத். ‘‘அவர் பெயர் விஜய் பாண்டியன். 24 வயது இளைஞர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி பக்கம் கொண்டையம்பள்ளியைச் சேர்ந்தவர். இவர் கன்னியாகுமரி அருகே தக்கலையில் வேலை செய்றார்.
ரெண்டு மாசத்திற்கு முன்னால் அவருக்கு ஒரு விபத்து ஏற்படுது. அப்போ, வலது கை மோதிர விரல் நசுங்கிடுது. பக்கத்துல உள்ள மருத்துவமனையில் சிதைந்து போன தசைகளை எல்லாம் கட் பண்ணி தையல் போடுறாங்க.
அப்ப அவங்க தசைநாண் நரம்பு கட்டானதை கவனிக்காமல் தோலை மட்டும் வச்சு தைச்சிடுறாங்க. வீட்டுக்கு வந்ததும் விஜய்க்கு மோதிர விரலை நீட்ட முடியல. மடங்கிடுது. வலியால் ரொம்ப அவதிப்படுறார்.
உடனே, தனியார் மருத்துவமனைகளை நாடியிருக்கார். அவங்க இதுக்கு மூணு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும்னு சொல்லியிருக்காங்க. பிறகு, அரசு மருத்துவமனைகளுக்குப் போயிருக்கார். அங்க பிளாஸ்டிக் சர்ஜரி துறை இருக்கக்கூடிய சென்னை ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, வேலூர் சிஎம்சி ஆகிய மருத்துவமனைகள்லதான் இதை சரிபண்ணமுடியும்னு சொல்லியிருக்காங்க.
இந்த சூழல்ல துவரங்குறிச்சி மருத்துவமனையில் செய்யப்பட்ட ரெண்டு மூணு அறுவை சிகிச்சைகள் பற்றி பேப்பர்ல படிச்சுட்டு இங்க வந்தார். எம்ஆர்ஐ ஸ்கேன் பார்த்தோம். அறுவை சிகிச்சை பண்ணினா சரியாகிடும்னு சொன்னோம். சரின்னார். முதலமைச்சர் காப்பீடு திட்டத்துல இலவசமா இந்த அறுவை சிகிச்சையை செய்தோம். இப்ப ரொம்ப நலமா இருக்கார். இன்னும் 12 வாரங்கள்ல முழுமையா குணமாகிடுவார்...’’ என்கிற ஜான் விஸ்வநாத், அறுவை சிகிச்சை பற்றி குறிப்பிட்டார்.
‘‘இந்த அறுவை சிகிச்சை அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. துவரங்குறிச்சியில் இருப்பது துணை தாலுகா மருத்துவமனை. ரொம்ப சின்னது. இதுமாதிரியான மருத்துவமனைகள்ல இப்படியான அறுவை சிகிச்சை பண்றதில்ல.
ஆனா, நாங்க செய்றோம். இது சிக்கலான அறுவை சிகிச்சையும் கூட. அவரின் மோதிர விரல் நுனியிலிருந்து மணிக்கட்டு வரை 16 செமீ நீளத்துக்கு தசைநாண் நரம்பு கட்டாகியிருந்தது. இதற்கு அதே கையில் முன்பக்கமுள்ள நரம்புல அதே அளவு நீளத்துக்கு நரம்பை வெட்டியெடுத்து, சிதைந்து போன மோதிர விரல்ல பொருத்தியிருக்கோம்.
அதேநேரம், முன்பக்கமுள்ள நரம்புக்கு பாதிப்பு வராதவகையில் செயற்கை நரம்புகளால அதை பலப்படுத்தியிருக்கோம்.
இது துணி தைக்கிற மாதிரியான வேலையில்ல. இந்த நரம்புகள் ஒவ்வொண்ணும் கையினுள் புகுந்து புகுந்து போகும். அதனுடைய இயற்கை அமைப்பிலே அதனை வைச்சால்தான் இயல்பான நிலைக்கு விரல் அசைவுகளைக் கொண்டு வரமுடியும். எந்தெந்த இடத்துல தோலுடன் ஒட்டியிருக்கணும்.. எந்தெந்த இடத்துல எலும்புடன் ஒட்டியிருக்கணும்னு கவனமா செய்தாதான் நரம்பு நிற்கும். இது தொழில்நுட்பமா கஷ்டமானது.
அடுத்து, அவருக்குக் கொடுக்கப்பட்ட மயக்க மருந்தும் ஹைடெக்கானதுதான். தோள்பட்டையிலிருந்து கை வரை முழுமையாக மரத்துப் போகிற மாதிரி, கழுத்திலிருந்து கைக்கு போகிற நரம்புக்கு ஒரு ஊசி போட்டோம். இதை சூப்ரா கிளாவிகுலர் நெர்வ் ஃபளாக்னு சொல்வோம். அப்ப வலது கை மட்டும் மரத்துப் போகும். உடலின் மற்ற பாகங்கள் எல்லாம் இயங்கும். அவரும் நம்மகிட்ட இயல்பா பேசிட்டே இருப்பார்.
இப்படி எல்லா விஷயங்களையும் ரொம்ப ப்ளான் பண்ணி செய்தோம்...’’ என்கிறவரிடம், ‘சினிமா பார்த்தபடியே அறுவை சிகிச்சை... என்ன ஐடியா இது?’ என்றோம். ‘‘கடந்த ஆண்டு லண்டன் கிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைல ஒரு அறுவை சிகிச்சை செய்தாங்க. அதுல நோயாளிக்கு தலையில் சின்னதா இருக்கிற கட்டியை எடுக்கணும். அப்ப அவங்க அந்த நோயாளியை அவருக்குப் பிடிச்ச வயலின் வாசிக்க சொல்லிட்டு, தலையில் ஒரு ஓட்டையைப் போட்டு எண்டோஸ்கோப்பி மூலம் அந்தக் கட்டியை அகற்றினாங்க.
அந்தச் செய்தியை நான் பார்த்தேன். அது எனக்கு ஒரு ஆர்வத்தைத் தூண்டுச்சு. நான், நோயாளிக்குப் பிடிச்ச படத்தைப் போட்டுக் காட்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்னு நினைச்சேன். அதுக்கு நிறைய முயற்சிகள் செய்தேன். ஆனா, தொழில்நுட்பக் குறைபாடு வந்திட்டே இருந்துச்சு. டேப்லட்டுக்கு ஸ்டாண்ட் சரியா பொருத்தணும். நோயாளி அதை எளிதா இயக்கணும். இப்படியெல்லாம் இருந்துச்சு.
இதுதவிர, நோயாளிகளும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கணும். ஏன்னா, நிறைய நோயாளிகள் பயந்திடுவாங்க. ‘அறுவை சிகிச்சை செய்கிற நேரம் சினிமா பாருங்க’னு சொன்னா கேட்பாங்களா? ஆபரேஷன் தியேட்டரைப் பார்த்தாலே மயக்கம் போடும் நோயாளிகளைக் கட்டாயப்படுத்த முடியாது.
நோயாளிகள் தைரியமா இருந்து நமக்கு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே இது சாத்தியம். அதேநேரம், நாமும் அறுவை சிகிச்சைக்கென உள்ள நெறிமுறைகளையும் மீறக்கூடாது. அதனால, பயப்படுகிற நோயாளிகளுக்கு இந்த முறையைப் பரிந்துரைக்கிறதில்ல. இந்த அறுவை சிகிச்சை பற்றி இளைஞர் விஜய்கிட்ட சொன்னதும் ரொம்ப சந்தோஷமா முன்வந்தார். ‘எனக்கு பயம் இல்ல டாக்டர். நான் படம் பார்க்கிறேன். நீங்க அறுவை சிகிச்சை செய்யுங்க’னு சொன்னார். அவர்கிட்ட அறுவை சிகிச்சை செய்யும்போது உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கேட்டோம். விஜய் படம்னு சொன்னார். டேப்லட்டை முன்னாடி வச்சு அதுல ‘தலைவா’, ‘கத்தி’ உள்ளிட்ட மூணு, நான்கு விஜய் படங்களை சாய்ஸ் வச்சோம். ஏன்னா, அறுவை சிகிச்சை மூன்றரை மணி நேரம் நடக்கும். அதனால, அதுவரை அவருக்குப் பிடிச்ச படங்களைப் பார்த்துக்கலாம்னு சொன்னோம்.
அவரும் மூன்றரை மணி நேரம் படம் பார்த்திட்டு இருந்தார். இடையிடையே அவர் உறவினர்கள்கிட்ட ஹெட்போன்ல புளூடூத் வழியா பேசிட்டும் இருந்தார். வெளியே அவங்க அம்மா இருந்தாங்க. அவங்ககிட்டயும், ‘நான் நல்லாயிருக்கேம்மா’னு தைரியம் கொடுத்தார். நாங்களும் வெற்றிகரமா இந்த அறுவை சிகிச்சையை முடிச்சோம். ஓர் ஆண்டுல மட்டும் 112 கேஸ் வரை வெற்றிகரமா செய்திருக்கேன். சொந்த உபகரணங்களை வச்சுதான் இந்த அறுவை சிகிச்சைகளை செய்றேன்.
பொதுவா மற்ற மருத்துவர்கள், ‘இங்க இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடியாது. சென்னைக்குப் போங்க’னு பரிந்துரை செய்திட்டு போயிடுவாங்க. எனக்கு அதில் உடன்பாடில்ல. ஏன்னா, இந்தத் தாலுகா மருத்துவமனையை நம்பி சட்டை போடாத தாத்தாக்களும், ஜாக்கெட் அணியாத பாட்டிகளுமே அதிகம் வர்றாங்க. அவங்க எப்படி மேல் மருத்துவமனையை தேடிப் பிடிச்சு போவாங்க? அதனால, அவங்களுக்கு இங்கேயே மருத்துவத்தை கொடுத்திடணும்னு நினைக்கிறேன்.
நான் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரா இருக்கிறதால இங்கே என் துறையில் மட்டும் பனிரெண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்திருக்கேன். இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை எல்லாம் ஒருகாலத்துல சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில்தான் செய்யும்படி இருந்தது. இப்ப நாங்க சாதாரணமா துணை தாலுகா மருத்துவமனையில் செய்திட்டு இருக்கோம்.
தவிர ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை எல்லாம் இங்க பண்றோம். உந்துதல் இருந்தால்போதும், எந்த மருத்துவமனையிலும் எந்த சாதனையையும் செய்யலாம்.
இப்படி நல்லா சேவை பண்ற திறமையான மருத்துவர்கள் நிறைய பேர் இருக்காங்க. இவங்கள அரசு ஊக்குவிக்கணும்னு கேட்டுக்கறேன்.
அதேமாதிரி அறுவை சிகிச்சை பண்ற மருத்துவர்களுக்கு மயக்க மருந்து நிபுணர்கள் தேவை. நான் மயக்க மருந்து மருத்துவர்களை வெளியிலிருந்து பேசி வரவழைக்கிறேன். அதுக்கான பணத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்துல கொடுக்குறோம். அதுவே இங்கேயே ஒரு மயக்க மருந்து மருத்துவர் இருந்தால் இன்னும் நல்லாயிருக்கும். அதனால, திறமை இருக்கிற இடத்துல தேவையானவற்றை துறை அதிகாரிகள் செய்து கொடுக்கணும். அப்பதான் அந்த மருத்துவமனை எந்த இடத்தில் இருந்தாலும் சிறப்பானதாக மாறும்...’’ என்கிறார் மருத்துவர் ஜான் விஸ்வநாத்.
பேராச்சி கண்ணன்
|