அன்ஹின்ஜ்டு
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி பார்வையாளர்களை மிரட்டிக்கொண்டிருக்கும் ஆங்கிலப்படம், ‘அன்ஹின்ஜ்டு’.பெருங்கோபம் கொண்ட சைக்கோ, டாம் கூப்பர். முன்னாள் மனைவியையும், அவளது காதலனையும் கொலை செய்துவிட்டு போலீஸின் பிடியில் மாட்டாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். இந்நிலையில் தனது மகனை காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறாள் ரேச்சல். மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு விரைவாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ரேச்சல் இருக்கிறாள்.
 ஆனால், கடுமையான டிராஃபிக். மன உளைச்சலுக்கு ஆளாகும் ரேச்சல் டிராஃபிக்கிலிருந்து தப்பிக்க குறுக்கு வழியில் செல்கிறாள். அவள் செல்லும் சாலையில் சிவப்பு சிக்னல் விழுகிறது. ரேச்சலின் வண்டிக்கு முன் டாமின் வண்டி நிற்கிறது. பச்சை சிக்னல் விழுந்த பின்னும் டாம் வண்டியை எடுக்கவில்லை. கோபமடையும் ரேச்சல் விடாமல் ஹாரனை அடிக்கிறாள். இந்தச் சம்பவம் ரேச்சலின் வாழ்வில் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதே வியப்பான திரைக்கதை.
நாம் அசால்ட்டாகச் செய்யும் செயல்கள் கூட பயங்கரமான விளைவுகளைக் கொண்டுவரலாம். அதனால் கொஞ்சம் இலகுவாக, விட்டுக்கொடுத்துப் போவது நல்லது என்று எச்சரிக்கிறது இந்தப் படம். படத்தின் இயக்குநர் டெர்ரிக் போர்ட்.
|