என்னை வைத்து விளம்பரம் தேடும் கல்லுரிகள்! வருந்துகிறார் மயில்சாமி அண்ணாதுரை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    ‘விளம்பரம் இல்லையேல் வியாபாரம் இல்லை’ & இந்த வாசகம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். ஆனால் அந்த விளம்பரவேட்கை அத்துமீறும்போது, நல்ல நோக்கோடு செயல்படும் பொதுநலவாதிகள் பாதிக்கப்படுகிறார்கள். அண்மையில் அப்படி பாதிக்கப்பட்டவர், மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமான ‘சந்திரயான்’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் பிறந்து, அரசுப்பள்ளியில் படித்து, சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் அளவு வளர்ந்து, இந்தியாவின் கௌரவத்தை உயர்த்தியவர் மயில்சாமி அண்ணாதுரை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழியில் மாணவர்களைச் சந்தித்து, தன்னம்பிக்கை ஊட்டுவதை முக்கியப்பணியாகச் செய்து வருகிறார். அண்மைக்காலமாக சில தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அவரை முன்னிறுத்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் வேதனை அடைந்த அவர், ‘இனி தனியார் பள்ளி, கல்லூரி விழாக்களில் பங்கேற்பதில்லை’ என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

‘‘ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுகிற சக்தி கல்விக்கு உண்டு. அதற்கு நானே உதாரணம். நம் சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்பவரே ஜெயிக்க முடியும். இன்றைக்கு இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் சூழ்நிலைகள் நிறைய இருக்கின்றன. அவற்றைக் கடந்து கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இதுபற்றிப் பேசி, மாணவர்கள் மத்தியில் பொறுப்புணர்வை உருவாக்கத்தான் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிறேன். 2008 நவம்பர் முதல் இப்பணியைச் செய்து வருகிறேன். இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களோடு கலந்துரையாடி உள்ளேன். அழைக்கும் கல்வி நிறுவனங்களின் தரத்தை எல்லாம் நான் பார்ப்பதில்லை. மாணவர்களை மட்டுமே மனதில் கொண்டு செல்கிறேன்.

அண்மையில் சில தனியார் கல்லூரிகள், மெட்ரிக் பள்ளிகள் என் படத்தைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வது என் கவனத்துக்கு வந்தது. இது என்னை மிகவும் பாதித்தது. எந்தக்கல்வி
நிறுவனங்களையும் முன்னிலைப்படுத்துவது என் நோக்கமல்ல. என் வேலையும் அதுவல்ல. என் நல்ல நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், விளம்பரத் தூதர் போல பயன்படுத்த முனைவது என்னைக் கொச்சைப்படுத்துவது போல ஆகிவிடும். அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவேதான் இந்த முடிவு.

இன்னொரு விஷயம். நான் ஆங்கில வழிக்கல்வியை ஏற்பவனில்லை. தமிழ்வழிக் கல்வியை ஆதரிப்பவன். இதையும் தனியார் கல்வி நிறுவன நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

எதை விதைத்தாலும், பணம்தான் விளைய வேண்டும் என்று எதிர்பார்க்கும் கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானியின் வேதனையைப் புரிந்து கொண்டால் சரி!
வெ.நீலகண்டன்