டி.வி. பார்ப்பதை கண்டிக்கலாமா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           நான், துரை, பழனி என்ற சிறுநண்பர் கூட்டத்தில் முதலாவதாக கல்யாணம் ஆனது துரைக்குத்தான். திருமணத்தின்போது பழனியை உள்ளடக்கிய ஆராய்ச்சிக்குழு ஆய்வக விபத்தொன்றில் சிக்கிக்கொண்டதில், காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக நேர்ந்ததில் அவனால் திருமணத்துக்கு வர முடியவில்லை. சென்னை சென்று அவனுக்கு ரத்தம் கொடுத்துவிட்டு நான்கூட துரை தாலி கட்டும்போதுதான் வந்தேன்.

மனைவி சாந்தியை அறிமுகப்படுத்தினான் துரை. கைகூப்பி வணங்கினாள். துரை காட்டியிருந்த புகைப்படத்தைவிட நேரில் வேறு மாதிரித் தெரிந்தாள். பிரமாத அழகு என்று துரை வியந்திருந்தான். அப்படி எல்லாம் சொல்லிவிட முடியாது என்றாலும், அவளிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருந்தது. சராசரிப் பெண்ணின் உயரம்... புஷ்டியாக இருந்தாள். தோழிகளுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.

கல்யாணமான புதிதில் துரை அவளது காலடிகளில் கிடந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். வாயைத் திறந்தால் சாந்தி; வார்த்தைக்கு வார்த்தை சாந்தி. ‘‘அவ ரொம்ப ஓப்பன் ஹார்ட்டுடா... சின்ன வயசுல நடந்தது எல்லாம் சொல்லீட்டா. இதுவரை நாலு பேர் லவ் லெட்டர் கொடுத்திருக்கான். இவ லவ் பண்ணினது நடிகர் அஜித்தை. என்னையும் மீசையை எடுக்கச் சொல்றாடா...’’ & எடுத்து விட்டான்.

அவன் சொன்னதிலிருந்து சாந்தியைப் பற்றி நான் புரிந்துகொண்டது இவைதான் - சராசரி குடும்பப் பெண். டி.வி சீரியல்களில் துக்கமும் சிரிப்பும் கொள்கிற; பக்கத்து வீட்டுக்காரிகளுடன் அரட்டை, குசும்பு பேசிக்கொண்டு வாழ்க்கையை எளிதாக வைத்திருக்கிற; ‘ஒரு தீப்பெட்டி இலவசம்’ என்றால் தேவையின்றி இரண்டு ஜோடி செருப்புகள் வாங்குகிற; ஆடித்தள்ளுபடியை உண்மையென்று நம்பி தீபாவளிக்கும் சேர்த்து துணிகள் வாங்கி வைக்கின்ற - பெண்.

காலம் விளக்கு பூஜைகளோடும், கோடைக்கால வற்றல் - வடாம் உற்பத்திகளோடும், இரண்டு பிரசவங்களோடும் நகர்ந்திருந்தது. முதலில் இரட்டை ஆண் குழந்தைகள். அப்புறம் ஒரு பெண்.
திடீரென துரையிடமிருந்து எனக்கு போன். பொதுவாக இந்த நேரத்தில் போன் செய்ய மாட்டான். எனவே, அவன் கூப்பிட்ட இடத்துக்கு உடனே சென்றேன். மது அருந்திக் கொண்டிருந்தான். வாந்தியோடு வார்த்தைகளையும் கொட்டினான்.

‘‘சாந்தியை மாதிரி ஒரு பேராசைக்காரியைப் பாத்ததே இல்லடா... எப்பப் பாத்தாலும் பணம் பணம்... தா தான்னா எங்கருந்து கொடுக்கறது? அவளப் பாக்கவே பிடிக்கலைடா. அவளுக்குப் பணம்தான் முக்கியம்... பேராசைக்காரி...’’

‘‘...........’’

‘‘நம்ம குடும்பநிலை தெரிய வேணாம்? நான் என்ன வேலை பாக்கறேன், என் வருமானம் என்ன, எல்லாம் தெரிஞ்சுதான கட்டிக்கிட்டா? இவளுக்கு கார் வேணுமாம், ஏஸி வேணுமாம். நேத்து அவ ரிலேஷன் வீட்டுக்குப் போயிருக்கா... லேட்டஸ்ட் டி.வி. பாத்திருக்கா. உடனே அதுமாதிரி வேணும்ங்கறா... இவ ஆசையை நிறைவேத்த இங்க உள்ளவங்க அத்தனை பேர் கிட்னியையும் எடுத்து வித்தாலும் முடியாதுடா...’’

தள்ளாடியவனை ஆட்டோவில் ஏற்றினேன். வீட்டுக்குப் போக விருப்பமில்லை என்றான்; ‘தயவுசெய்து அந்த நரகத்திற்கு அழைத்துச் சென்று விடாதே; டாஸ்மாக்கில் தீவிர உறுப்பினராகி விட்டால் ஏதாவது சலுகை கிடைக்குமா...’ & இப்படியெல்லாம் புலம்பல்கள். வீட்டை அடைந்ததும் சாந்தி மெலிதான விசும்பலுடன் அவனைப் படுக்க வைத்தாள்.

துரையின் நண்பன் என்கிற முறையில் அவனது நல்ல விஷயங்களையும், குடும்ப வாழ்வில் விட்டுக் கொடுத்துப் போவது பற்றி எனக்குத் தெரிந்த சில கருத்துகளையும் சொன்னேன். வரவுக்கும் செலவுக்கும் ஏற்ற மாதிரி வாழ்க்கையைக் கொண்டு போவது அந்த உரையாடலில் பிரதான அம்சமாக இருந்தது. யாரையும் குற்றம் சாட்டாமல் பொதுப்படையாகச் சொல்வதாகத்தான் நான் நம்பினேன்.

ஆனால் சாந்தி நேரடியாக, ‘‘ஏன் அண்ணா, ஆசைப்படறது தப்பா? வாழ்க்கையில முன்னேற நினைக்கறதுல என்ன தப்பு? இவன் கிளாஸ்லயே கம்ப்யூட்டர் இல்லாத பையன் இவன் மட்டும்தான். இப்ப கண்டபடி குடிக்கறதுக்கு மட்டும் காசு இருக்கோ? ஆசைப்படுவோம். நடந்தா நல்லது. நடக்கலைனா என்ன தூக்குலயா போடப் போறாங்க? வாயைத் திறந்து பேசவே கூடாதுன்னா எப்படி?’’

பதில் சொல்ல முடியாமல் விழித்தவனிடம், ‘‘அண்ணே, உங்க வீட்ல செட்டிநாடு சிக்கன் ரெசிபி கேட்டிருந்தேன். கொஞ்சம் அவங்ககிட்ட நினைவுபடுத்துங்க...’’ என்றாள்.

அடுத்த மாசம் உழவர் சந்தையில் காய்கறி வாங்கித் திரும்பும்போது சாந்தியை பஸ் ஸ்டாப்பில் சந்தித்தேன். கையைப் பிடித்துக்கொண்டு அவளது பெண் குழந்தை. இரட்டைப் பையன்கள் பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘‘என்னம்மா, எங்க கிளம்பிட்ட?’’ என்றேன்.

நாகரிகமான கண்ணீருடன், ‘‘எங்கப்பா பேசினபடி வரதட்சணை எல்லாம் கொடுத்துட்டார். திரும்பத் திரும்ப வாங்கீட்டு வான்னா எங்க போறது? அவரே பாவம், இன்னும் மூணு பொண்ணுகள கரையேத்தணும். உங்க ஃபிரண்டு நீங்க சொன்னா கேப்பார்... ஏதாவது சொல்லுங்க உறைக்கிற மாதிரி. இல்ல, எனக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்க... ஐ.ஏ.எஸ்&க்கு ஆள் எடுக்கறதா கேள்விப்பட்டேன். அந்த மாதிரி ஏதாவது வேலை கெடைச்சாக்கூட போதும். டென்த்ல மேத்ஸ் மட்டும்தான் நான் ஃபெயில். அது ஒரு பிரச்னையா இருக்காதில்ல? சீக்கிரம் பஸ்ஸும் வந்து தொலைய மாட்டேங்குது. ‘தங்கக் கொலுசு’ சீரியல் முக்கியமான கட்டத்துல நிக்குது...’’ என்றாள்.

பத்து நாட்களுக்குப் பிறகு சிக்கன் கடையில் பழனியின் மனைவி மீனாவைச் சந்தித்தேன். பழனி அடுத்த மாதம் வரப்போகிறான் என்றும், அவனது ஆராய்ச்சி உருப்படப் போவதில்லை என்றும் தெரிவித்தாள். பேச்சு தற்செயலாக துரையின் பக்கம் திரும்பியது.

‘‘அந்த சாந்தி படற கஷ்டம் இருக்கே... கேக்கும்போதே உடம்பு பதறுது. சாப்பாட்டுக்குக் கூட சரியா பணம் கொடுக்க மாட்டாராம், உங்க ஃபிரண்டு. சரியா வீட்டுக்குக்கூட வர்ற தில்லையாம். கடன்காரன் எல்லாம் வீட்டு வாசல்ல நிக்கறான். சாந்தி ஒரு அப்பாவிப் பொண்ணுங்க... உலக அறிவு பத்தாது. எப்படி தனியா சமாளிக்கும்? இப்படி எல்லாம் வாழணும்னு தலையெழுத்து. போக்கிடம் இல்லாம அவ படற கஷ்டம் இருக்கே...’’

தேர்த்திருவிழா ஒன்றில் குழந்தைகளுக்கு பாப்கார்ன் வாங்கிக்கொண்டிருந்த என் மனைவியும் சாந்தியும் சந்தித்துக்கொண்டார்கள். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு என் மனைவி பெரும் கோபத்துடன் திரும்பினாள்.

‘‘த்தூ’’ என்று காறித் துப்பிவிட்டு பேச்சைத் தொடங்கினாள்... ‘‘உங்க ஃபிரண்டுக்கு மனசாட்சியே கிடையாதா? கண்ட கண்ட ப்ளூ ஃபிலிம் சிடியை எல்லாம் போட்டுக்காட்டி, சித்திரவதை பண்றாராம்... புள்ளைங்க எல்லாம் வளந்துக்கிட்டு இருக்கு... அதப்பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம இப்படிக் கூத்தடிக்கறது சரியா? அதுக கண்ணு முழிச்சா மானம் போயிடும்ங்கற அறிவு வேண்டாம்? ஒரு பொண்ணோட மனசை ஏன் யாருமே புரிஞ்சுக்கறது இல்ல?’’

துரையிடம் இதுபற்றி எல்லாம் எப்படிப் பேச முடியும்? வேறு கோணத்தில் யோசித்தால் இந்தப் பிரச்னைகள் எல்லாம் கொஞ்சம் கூடக்குறைய எல்லா வீடுகளிலும் இருப்பதுதான். என்றாலும் இங்கே வெளியே தெரிகிற அளவு பெரிசு படுத்தியது யார் என்று தெரியவில்லை. யார் மீது தப்பு என்றும் தெரியவில்லை.

இந்த சிந்தனைகளோடு துரை வீட்டுக்குச் சென்றேன். அங்கே நான் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. தாறுமாறாக அடிபட்டு ரத்தக்காயங்களுடன் சாந்தி. படுத்துக் கிடந்த அவளை ஆத்திரத்துடன் மிதித்துக் கொண்டிருந்தான் துரை. ஒரே சப்தம்; கூப்பாடு; ஓலம். குழந்தைகளின் அழுகைச் சப்தம்.

‘‘இனிமே வாயைத் திறப்பியா? எப்பப் பாத்தாலும் நை நைன்னு... அத வாங்கிக்கொடு, இத வாங்கிக் கொடுன்னு... ஏன்தான் உன்னைக் கல்யாணம் செஞ்சனோ... வர வர வீட்டுக்கு வரவே புடிக்கல... அதென்னடி, உனக்கு எப்ப பாத்தாலும் டி.வி? புருஷன் வர்றது கூடத் தெரியாம டி.வி?’’ என்றான் துரை. குடித்திருந்தான்.

‘‘உங்ககூட சூடு, சொரணை உள்ளவ வாழ மாட்டாங்க...’’ என்றாள் சாந்தி.

அக்கம்பக்கத்தினர் வந்து விட்டார்கள். துரையும் சாந்தியும் அனைவரது அறிவுரைகளுக்கும் அப்பாற்பட்டிருந்தார்கள். ஒரே களேபரம். சிரமப்பட்டு துரையை வெளியே கொணர்ந்து, ‘‘உணர்ச்சிவசப்பட வேண்டாம்; பொறுமை அவசியம். சகிப்புத்தன்மை முக்கியம்...’’ என்கிறரீதியில் பேசிவிட்டுத் திரும்பினேன்.

மறுநாள் அதிகாலையில் துரை என் வீட்டுக் கதவைத் தட்டினான். மௌனமாக ஒரு காகிதத்தை நீட்டினான். சாந்தியின் கையெழுத்தில், பிழைகளுடன் சில வரிகள்... ‘உங்களுடன் வாழ்ந்த வாள்க்கை போதும். விடைபெறுகிறேன். கண்டிப்பாக சாக மாட்டேன். இந்த உலகில் ஏதாவது ஒரு மூலையில் வாள்வேன். குழந்தைகளை நல்லபடி வளர்க்கவும் & சாந்தி’ வக்கீல் ஒருவரின் ஆலோசனைப்படி போலீசில் புகார் கொடுத்தோம். ‘‘எவன்கூடயாவது ஓடியிருப்பா...’’ என்றார் எஸ்.ஐ அலட்சியமாக. மாலைச் செய்தித்தாளில், ‘டி.வி. பார்ப்பதைக் கண்டித்ததால் மனைவி வீட்டை விட்டு ஓட்டம்’ என்று செய்தி வந்தது.

எண்ணற்ற நாக்குகள் கொண்ட ஊர், பொழுதுபோக்குவதற்கு இப்பிரச்னையை எடுத்துக்கொண்டு பல முடிவுகளுக்கு வந்தது. மூன்று குழந்தைகளையும் விட்டுச்செல்லும் அளவு ஒரு பெண்ணின் மனம் கல்லாக மாறி இருக்கிறது என்றால் இது கள்ளக்காதல் தவிர வேறு என்ன? தாடி வைத்த பெரியவர் ஒருவருடன் சாந்தி இப்போது இருக்கிறாள். ஒல்லியான ஒரு பையனுடன் அவள் பேசியதைப் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு  அழைத்துச்செல்லும் ஒரு ஆட்டோக்காரனையும¢ காணவில்லை. அவளை ஓசூரில் பார்த்திருக்கிறார்கள். இல்லை அவள் பூனாவில் இருக்கிறாள். துரையிடம் கூட ஏதோ கோளாறு. அந்தப் பெண் குழந்தை அவனது சாயலைப் பெற்றிருக்கவில்லை. எனவே...

இவ்வித அவமானங்களால் துரை ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. நிச்சயமாக இது அவனது ஆண்மைக்கும் தன்மானத்துக்கும் விடப்பட்ட சவால். அவனைத் தெரியாதவர்கள்கூட, அவனது மனைவி ஓடிப்போனதைத் தெரிந்திருக்கிறார்கள். சாந்தி அவனை நூறு ஜென்மங்களுக்குப் பழிவாங்கி விட்டாள். கண்டிப்பாக அவன் ஏதாவது செய்தே தீர வேண்டும். மீண்டும் சாந்தி அவனைத் தேடி வந்து அவன் இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கையில் அவள் அடைந்த இழிவுகளைப் பட்டியலிட்டு, அவனது காலில் விழுந்து கதற வேண்டும். அப்போது அவன் கம்பீரமாக அவளை அடித்து விரட்டுவான். அன்று அவன் சிறிது தூங்கியதில் அவள் முந்திவிட்டாள். ‘‘தப்பு பண்ணீட்டேன்டா... அந்த ஓடுகாலி ஓடறதுக்கு முன்னாடி, நானே அவளைத் துரத்தி விட்ருக்கணும்...’’ & அவனது ஒட்டுமொத்தக் கோபமே, சாந்தி அவனுக்கு எவ்வித வாய்ப்பும் தரவில்லை என்பதுதான்...

எனக்கோ & டி.வி. சீரியலில் கதாநாயகியின் கரு கலைந்ததற்கு அழுத பெண்; சென்னையும் ஈரோடும் ரொம்பப் பக்கத்தில் இருக்கிறது என்று நினைத்த பெண்;  ஐ.ஏ.எஸ். வேலை கிடைச்சாலும் போதும் என்று புலம்பிய பெண் & எப்படி உணவு தேடி, உறைவிடம் தேடி, கண்ணியம் காத்து... இந்த உலகம் ஒரு பெண்ணுக்கு அவ்வளவு எளிதான சுவாசங்களை அளித்து விடுமா என்ன...

‘‘அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு’’ என்றான் பழனி. அவனது ஆராய்ச்சி ஏறக்குறைய பூர்த்தியாகி இருந்தது. இரண்டு பேருக்குமே மின்னலாக ஒரு யோசனை. அவனது ஆராய்ச்சியான ‘நாடிவேர்’ என்பது, நாடி சாஸ்திரத்தையும் சாஃப்ட்வேரையும் அறிவியல்பூர்வமாகக் கலந்து, எதிர்காலம் அறிதல் தொடர்பானது. ஒருவருடைய பிறந்த தேதி, நட்சத்திரத்தைக் கொடுத்து விட்டால் போதும்... ‘நாடிவேர்’ எதிர்காலத்தைத் தெரிவித்து விடும். துரையிடம் சாந்தியின் குறிப்புகளை வாங்கிச் சென்றான் பழனி.

துரையை கொஞ்ச நேரம் வெளியே உட்காரச் சொல்லிவிட்டு என்னை மட்டும் உள்ளே அழைத்து, ‘‘இருநூறு வருஷம் கழிச்சு, சாந்தியைப் பத்தி நாடிவேர் என்ன சொல்லுதுன்னா...’’ என்று மானிட்டரைக் காட்டினான் பழனி.

அந்த இனிய இரவில் பந்தபாசங்களிலிருந்தும், குடும்ப உறவுகளிலிருந்தும் சாந்தி தன்னை விடுவித்துக் கொள்ள திரு உளம் கொண்டார். அப்போது அவர்முன் தோன்றிய நூறு தேவதைகள் பூ மழை பொழிந்து, வாசற்கதவைத் திறந்து விட்டன. பூரண நிலவின் ஒளி மேலும் ஒளிர்ந்தது. உலகம் குளிர்ந்தது.

இங்ஙனம் சாந்தி வெளியே சென்ற இரவு, ‘இரவல் இரவை நீங்கி சொந்த இரவை அடைதல்’ என்று உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கான அவரது தொண்டர்களால் போற்றப்படுகிறது. வீட்டை விட்டு இறங்கிய சாந்தி, உலகமாகிய வீட்டை அடைந்தார். பின் ஆதிவீட்டையும் அடைந்தார்.

இப்புனித நாளில் இவரைப் பின்பற்றுவோர் வீட்டினைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வெளியேறி, ஆதி வீட்டைத் தேடுவது மரபு. இவ்வாறு வீதியில் இறங்கிய ஆத்மாக்களுக்கு புகலிடங்களை சாந்தி ஆங்காங்கே ஏற்படுத்தினார். இவரது வழியைப் பின்பற்றுவோர் ‘சாந்தியர்’ என்றழைக்கப்பட்டனர். அவரது மறைவுக்குப் பிறகு இவ்வியக்கம் வெறிகொண்டு வளரலாயிற்று. ‘வீட்டைத் துறந்து வீதியில் இறங்கு...’ என்பது இவர்தம் கொள்கை.

தொடக்கத்தில் பெண்கள் மட்டுமே இவ்வியக்கத்தில் இணைந்தார்கள் என்றாலும், மனைவியரைத் துறந்த கணவர்களும் பின்னர் இதில் இணைய அனுமதிக்கப்பட்டனர்... இவர்களின் புனித நூல்...

‘‘இதையெல்லாம் சொன்னால் துரை இந்த மிஷினையே உடைத்து விடுவான்’’ என்றான் பழனி. ‘‘ஆனால் நாடிவேர் பொய் சொல்லாது. என்னடா யோசிக்கற... துரையை உள்ளே கூப்பிடலாமா?’’

உண்மையில் நான் துரையின் சிறிய வீட்டில் நூறு தேவதைகளும் எங்கெங்கே நின்றிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
 ஷங்கர்பாபு