காற்றின் கையெழுத்து



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

‘காணவில்லை’ அறிவிப்புகளில் முதியவர்களின் படங்களைப் பார்க்கிறபோதெல்லாம் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்று எனக்குத் தோன்றாது; தங்களின் இருப்பை உணராத உறவுகளிடமிருந்து அவர்கள் தங்களைத் தாங்களே தொலைத்துக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றும்.

பூங்காக்களில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில முதியவர்கள் தங்கள் பேரக் குழந்தைகளை அழைத்து வந்திருப்பார்கள்; சில முதியவர்கள் தாங்கமுடியாத தங்களின் தனிமையை அழைத்து வந்திருப்பார்கள். மரங்கள் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும்.

இந்த வாரம் ஒரு செய்தி... தஞ்சாவூரில் காணாமல் போன 55 வயது சுப்புலட்சுமி என்ற அம்மாவை ஒரு வருடம் கழித்து சென்னை, திருவொற்றியூரில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தெருவில் ஒரு குழந்தையை அவர் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, ‘பிள்ளை பிடிப்பவள்’ என்று சந்தேகப்பட்டவர்கள் போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். விசாரணையில், அவரது கணவர் சேதுராமன் ஒரு துணி வியாபாரி என்பதும், குழந்தை இல்லாத ஏக்கம்தான் அவரை எல்லாக் குழந்தைகளையும் கொஞ்ச வைத்தது என்பதும் தெரிந்திருக்கிறது. ஒரு வருடமாக மனைவியைத் தேடியலைந்த கணவர், போலீஸுக்கு நன்ற¤ தெரிவித்து கையோடு மனைவியை அழைத்துப் போயிருக்கிறார். கண்ணீரைத் துடைத்துத் தோளில் கையணைத்துப் பரிவுடன் அவர் அழைத்துச்சென்ற படத்தை பத்திரிகையில் பார்த்தபோது நெகிழ்வாக இருந்தது.

குழந்தை இல்லாத தனிமை ஒரு துயரம்; குழந்தைகள் இருந்தும் அவர்கள் அருகில் இல்லாத முதுமை அதைவிடக் கொடிய துயரம்.

சென்னையில் பெரிய பெரிய வீடுகளில் இப்படியான முதியவர்களைப் பார்த்திருக்கிறேன். அந்த வீடுகளின் வாசல்களில் அதிகாலையில் ஒரு கோலம் போடப்பட்டிருக்கும்;

சாயங்காலமானால் ஒரு பல்பு எரிந்து கொண்டிருக்கும். அந்த வீடுகளின் வேலைக்காரப் பெண்கள்தான் அதைச் செய்துவிட்டுப் போயிருப்பார்கள். அவர்கள் சமைத்து வைத்துப் போவதுதான் அன்றைய சாப்பாடு. ‘அந்த முதியவர்கள் காலையில் எழுகிறார்கள்... இரவு தூங்குகிறார்கள்’ என்பதற்கு அந்தக் கோலமும் பல்பும்தான் சாட்சி.

பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிப்பார்கள். ‘அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடல்நிலை சரியில்லை... தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்’ என்றால் புறப்பட்டு வருவார்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். அதற்காகக் காத்திருக்கும்போதே எடுத்து வந்த விடுமுறை முடிந்து போயிருக்கும். பணத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டு விடுவார்கள். இல்லையென்றால் வேலைக்கு உலை வைத்துவிடும் கார்ப்பரேட் கம்பெனிகள்.

‘வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ’

நான்கு வரிகளும் பொய்யாகி, தன்னைத் தோள் கொடுத்துத் தூக்கப் போகும் நான்கு பேர் யாராக இருக்கும் என்று யோசித்தபடியே கண்மூடிவிடுவார்கள் அந்த முதியவர்கள்.
கூட்டுக் குடும்பத்திலிருந்தும் உறவுகளின் தேவையிலிருந்தும் நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம். விவசாய நாடான இந்தியா, தொழில்மயமானபோதுதான் நாம் நிறம் மாறத் தொடங்கினோம். காலமும் பொருளாதாரமும் நம்மைத் துரத்துகின்றன. பணம் என்பதை நோக்கிய பயணமாகவே நமது வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிகிற பன்னாட்டு நிறுவன மனோபாவம், நமது இதயங்களிலும் புற்றுநோய் போல பரவத் தொடங்கியிருப்பது பயமாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஓர் அம்மா. அவருக்கு ஏழு பிள்ளைகள். ஐந்து ஆண்; இரண்டு பெண். எல்லோரும் நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், அம்மாவைத் தன்னோடு வைத்துக் கொள்ள யாருக்கும் பிரியமில்லை. ‘யாராவது என்னை வைத்துக் கொள்ளுங்களேன்’ என்று ஒவ்வொரு பிள்ளையிடமும் கேட்டுக் கேட்டு, முதியோர் விடுதியிலேயே இருந்து தனது மூச்சை விட்டுவிட்டார். பிள்ளைகள் கூடி பிணத்தைச் சந்தனக் கட்டைகளால் எரித்தார்கள். அந்தப் பிணம் வெந்ததா வேகவில்லையா என்பது விறகுக்குத்தான் தெரியும்.

வேலைக்குப் போகும் தம்பதிகள் தங்கள் குழந்தைகளைக் காலையில் காப்பகத்தில் விட்டுவிட்டு மாலையில் அழைத்துச் செல்கிறார்கள். பெற்றோரை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார்கள். வீட்டைப் பூட்டிவிட்டு இரண்டு சாவிகளை ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில்தான் அவர்கள் கணவன்&மனைவி என்பதையே கொஞ்சம் உணர முடிகிறது.

நம்மையே நாம் கவனிக்க முடியாமல் நமக்கு யார் இவ்வளவு வேலைகள் இட்டார்கள்?

‘ரொட்டியின் விலை
குறைய வேண்டும்
மனிதனின் விலை
உயர வேண்டும்’

என்று ஒரு ரஷ்யக் கவிஞன் பாடினான். இன்று ரொட்டியின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது; மனிதனின் விலை குறைந்துகொண்டே இருக்கிறது. பெற்றோரைக்கூட கட்டிக்காக்க முடியாத வாழ்க்கையில் எதை நாம் கட்டிக் காக்கப் போகிறோம்?

முதுமையும்
ஒரு குழந்தைத்தனம்தான்;
தாலாட்ட வேண்டாம்
தள்ளாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
ரத்தம் மரணம் கச்சாமி

போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷேவின் நேர்காணலை ‘ஹெட்லைன்ஸ் டுடே’ செய்தித் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கற்பழிப்புகளையும் கொலைகளையும் ‘பொய்’ என்றார். சேனல்&4 காட்டிய கொடுமையான போர்க்களக் காட்சிகளை, ‘அடிப்படை ஆதாரமற்ற போலியான படப்பதிவு’ என்றார். போரில் காணாமல் போன தமிழர்களில் சில ஆயிரம் பேரைத் தவிர எல்லோரும் திரும்பி வந்துவிட்டார்களாம். தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்யப்பட வேண்டியதெல்லாம் செய்துவிட்டார்களாம்.

தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராகப் போடப்பட்ட தீர்மானம் அரசியல் ஆதாயம் கொண்டதாம். தமிழக மீனவர்கள் அவர்களது கடலில் வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டுமாம். கற்பழித்துக் கொல்லப்பட்ட இசைப்ரியா விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாதாம்.

நடுநிலையாளர்கள் யாரையும் பார்வையாளராக இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதாம். இலங்கை ஒரு ஜனநாயக நாடாம். தீவிரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்தில் ஒரு சில இடங்களில் இப்படியெல்லாம் நடப்பது சகஜம்தானாம். உலக சமூகம் அவர்களைப் போர்க்குற்றவாளி என்று சொல்வதில் உண்மையில்லையாம். இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இலங்கையை நம்புகின்றதாம். அவர்களுக்குக் கை கொடுத்து உதவுமாம்.

அவரைப் பேட்டி எடுத்த ராஜேஷ்சுந்தரம் மடக்கி மடக்கிக் கேள்விகளை வீசினார். அவரது கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், மனப்பாடம் செய்து ஒப்பிப்பதைப் போல கோத்தபய ராஜபக்ஷேவின் உதடுகள் உளறிக் கொண்டிருந்தன.

முன்பொரு முறை பி.பி.சி. நிருபர் ஒருவர் கொழும்பில் ஒரு புத்தபிட்சுவைப் பார்த்து, தமிழர்களுக்கு எதிரான வன்முறை குறித்துக் கேட்டபோது, ‘‘மனிதனைக் கொல்வது பாவம்; குற்றம்! ஆனால், தமிழர்களைக் கொல்வது பாவமல்ல; குற்றமல்ல’’ என்றானாம் அந்த பிட்சு. ‘புத்தமத பிட்சுவே, சந்நியாசியே இப்படி நினைக்கிறான் என்றால் ராஜபக்ஷேக்கள் எப்படி நினைப்பார்கள்?’ என்று புலவர் புலமைப்பித்தன் ‘ஒரு பூகோளமே பலிபீடமாய்’ என்ற தனது ஆதாரங்கள் அடுக்கிய நூலில் கேட்டிருந்தார்.

தமிழர் இடங்களில் இன்று சிங்களர் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். உண்ண உணவில்லை; சுத்தமான தண்ணீரில்லை; உடுத்த உடைகள் இல்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க மறைவிடங்கள் இல்லை. இலங்கை ராணுவ வீரர்களின் பலாத்காரத்துக்குப் பயந்து அடங்கிய தமிழ்ப்பெண்களின் விம்மல் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. காற்றெல்லாம் ரத்தம் கசிய நீள்கிறது முள்வேலி.

புத்தம் சரணம் கச்சாமி
ரத்தம் மரணம் கச்சாமி

முதியோர் இல்லம்

இந்த
மனிதக்காட்சிச் சாலைகளை
எப்போதாவது
பால் குடித்த விலங்குகள் வந்து
பார்த்துவிட்டுப் போகும்!
 நெல்லை ஜெயந்தா
(சலசலக்கும்)
பழநிபாரதி