தனியாக இல்லை... தனித்துவமா இருக்கேன்!



‘தாரா’வுக்கு ஹார்ட்டின் விட்ட தமிழ் சினிமா, ‘ஷோபனா’வுக்கு ஹார்ட்டினுடன் சேர்ந்து அம்பும் விட்டது. யெஸ். எந்த அளவிற்கு ‘ஓகே கண்மணி’ தாரா இனிமையான பாதிப்பை ஏற்படுத்தினாரோ... அதைவிட அதிகமான பாதிப்பை ‘திருச்சிற்றம்பலம்’ ஷோபனா ஏற்படுத்தினார். விளைவு அந்தக் கதாபாத்திரம் தேசிய விருது வரை சென்று சிறந்த நடிகைக்கான விருதுடன் திரும்பி இருக்கிறது. கைகளில் விருதும் கண்களில் உற்சாகமும் மின்ன ஒரு சேர பேசத் துவங்கினார் நித்யா மேனன்.

முதல் தேசிய விருது..?

ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படின்னு வெறும் வார்த்தைகளால் வரையறுக்கவே முடியாது. அந்த அளவுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் சேர்ந்த தருணம் இது. 15 வருடங்களுக்கு மேல சினிமாவில் இருக்கேன். 60 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். எப்பவுமே என் மனசுக்கு இந்தக் கதை சரி அப்படின்னு தோணுனா மட்டும்தான் தேர்வு செய்வேன்.
இதனாலேயே சினிமா உலகில் கூட தனிச்சு இருக்குற மாதிரி ஒரு உணர்வு அடிக்கடி தோணும். சில நேரம் தனியா இருக்கற உணர்வு கூட இருந்திருக்கு.

ஆனா, இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு தேசிய விருது கிடைக்கும் போது இதுவரைக்கும் நாம கடந்து வந்த பாதை சரி அப்படிங்கற ஒரு அங்கீகாரம் கிடைச்ச மாதிரி இருக்கு. நான் தனியா இல்லை தனித்துவமா இருந்திருக்கேன் அப்படின்னு இந்த தருணம் எனக்கு புரிய வச்சிருக்கு.

தேசிய விருதுக்குப் பிறகு இனி இப்படியான கதைகள்தான் தேர்வு செய்யணும் என ஏதேனும் தீர்மானம் எடுத்திருக்கீங்களா?

நிச்சயமா கிடையாது. ஒரு படம் ஒரு கதாபாத்திரம் விருது வாங்கிடுச்சு என்கிறதுக்காக இதற்கு முன்னாடி செய்த அத்தனை படமும் தவறு அப்படின்னு சொல்லிட முடியாது. அப்போ இங்கே என்னுடைய தேர்வு தப்புன்னு நானே முடிவு செய்திட்ட மாதிரி ஆகிடும். இதற்கு முன்பும் சரி... இனியும் சரி... என் மனசுக்கு எந்தக் கதை எந்தக் கதாபாத்திரம் சரி அப்படின்னு தோணுதோ அதை தேர்வு செய்தால்தான் நான் நானா முடிவெடுக்கறதா இருக்கும்.

என்னுடைய பாடி லாங்குவேஜுக்கு பொருந்துகிற கேரக்டரை பலமுறை யோசித்துதான் இதுவரையிலும் நான் கேரக்டர்களை தேர்வு செய்து இருக்கேன். இனியும் அப்படிதான்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு விருது வரை எல்லாம் நான் யோசிக்கலை. ஆனால், இப்படியான எதார்த்த கதைகளுக்கும் கேரக்டர்களுக்கும் விருது கிடைக்கறது நல்ல துவக்கமாக பார்க்கறேன்.
 
உங்களைப் பொறுத்தவரை நடிப்புன்னா என்ன?

என்னுடைய மனதையும் ஆத்மாவையும் வெளிப்படுத்துகிற உணர்வுதான் நடிப்பு. இதுவரையிலும் பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ நான் எந்த கேரக்டரையும் தேர்வு செய்ததே கிடையாது. அப்படி இருந்திருந்தால் ஒரு பத்து படங்களில் நான் காணாமல் போய் இருப்பேன். இத்தனை வருடங்கள்... இதோ தேசிய விருது வரை எல்லாம் எனக்கு சினிமா இடம் கொடுத்திருக்காது. எனக்கு என் உணர்வுகள கலையா மாற்றிக் கொடுக்கும் மீடியம்தான் நடிப்பு.

தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ எப்படி தயாராகுது?

இப்பதான் படம் ஆரம்பிச்சிருக்கு. அதற்குள் ‘இட்லி கடை’ பற்றி அதிகம் பேச முடியாது. ஆனால், ஒண்ணு மட்டும் உறுதியா சொல்ல முடியும். ‘திருச்சிற்றம்பலம்’, ‘ஷோபனா’ மாதிரி ஒரு பொண்ணை இதுவரையிலும் நான் சந்தித்ததே கிடையாது. ரொம்ப வித்தியாசமா, அதிகம் பேசி எதையும் எதார்த்தமா டீல் செய்கிற கேரக்டர்.முதலில் நானே அப்படிக் கிடையாது. எனக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு கேரக்டருக்கு என்னை நான் தயார் செய்துதான் அந்த கேரக்டரில் நடிச்சேன்.

அதைக் காட்டிலும் இன்னும் ஓவர் டோஸ் கேரக்டர்லதான் ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிச்சிட்டு இருக்கேன். நிச்சயம் சூப்பர் ட்ரீட்டாக அந்தப் படம் இருக்கும். என்னுடைய கேரக்டரும் இதுவரையிலும் நான் செய்த கதாபாத்திரங்களில் இருந்து நிச்சயமா அதீத வித்தியாசத்தில் இருக்கும்.

நடிகர் தனுஷ்... இயக்குநர் தனுஷ்... யார் ரொம்ப சீரியஸ் நபர்?

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர்... இப்படி எதுவாக இருந்தாலும் முதலில் அவர் தனுஷ். அந்த கேரக்டரில்தான் எப்போதும் நான் பார்த்திருக்கேன்.

அவர் வேலையிலே சீரியஸ்... அதாவது பரபரப்பான டெடிகேஷன் பார்க்கலாம். ஆனால், அவர் சீரியஸாகியோ அல்லது டென்ஷன் ஆகியோ பார்த்ததே கிடையாது. இறுதியா இது டீம் வொர்க் என்கிற தெளிவு அவர்கிட்ட இருக்கும்.கிளாமர் கதாபாத்திரங்கள் என வரும் பொழுது ஒரு கட்டுப்பாட்டுடன் தேர்வு செய்யறீங்களா அல்லது, தானாகவே அதிகம் குடும்பப்பாங்கான கேரக்டர்கள் தேடி வருதா?

தானாக வருது அப்படின்னு சொல்ல முடியாது. கடைசியில் முடிவு என்னுடையதுதானே! எனக்கு எந்த கேரக்டர் செட் ஆகுமோ அதைத்தான் நான் தேர்வு செய்வேன்.
நிறைய கேரக்டர்கள் வரும். எந்த கேரக்டர் செய்தால் என்னவாக அது ஆடியன்ஸ் கிட்ட போய் சேரும்... இப்படி எல்லாத்தையும் யோசிச்சுதான் ஒரு கேரக்டரை நான் தேர்வு செய்வேன்.
முதலில் நான் எப்படி நடிச்சா ஆடியன்ஸ் ஏத்துக்குவாங்க அப்படின்னு பலமுறை யோசித்துதான் கதைகள் தேர்வு செய்யறதுண்டு.

இப்போதைய இந்திய சினிமா எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க?

ஹீரோயின் அப்படினா இப்படிதான் இருக்கணும்... இப்படிதான் நடிக்கணும் என்கிற குறுகிய மனப்பான்மை முதலில் மாறி இருக்கு. எந்த நடிகையும், எந்த கேரக்டரிலும் நடிக்கலாம், எந்த வயதிலும் நடிக்கலாம் என்கிற ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கு. ஒரு பாக்சுக்குள்ள அல்லது ஒரு மொழிக்குள்ள இருந்த சினிமா பாக்ஸை உடைத்து தேசிய அளவிலான கதைகளும் படங்களும் வர ஆரம்பிச்சிருக்கு.

இப்போ இந்திய சினிமா ரொம்ப பாசிட்டிவா இருக்கு. ஒரு நடிகை உடல்வாகு இப்படி இருக்கணும் என்கிற அழகியல் எல்லைகள் கூட நிறைய தளர்ந்து திறமையும் நடிப்பும்தான் பிரதானமா மாறி இருக்கு. வரவேற்கலாம்.

இதற்குமுன் நீங்க நடிச்ச எந்த கேரக்டருக்கு தேசிய விருது வரும்னு எதிர்பார்த்தீங்க?

2012ல் கன்னடத்தில் ‘மைனா’ என்கிற படத்தில் நடித்திருந்தேன். அதில் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணாக எனக்கு ஒரு கேரக்டர். நிறைய பேர் அந்தப் படம் வந்தபோது தேசிய விருதுக்கு அனுப்பி இருக்கலாமே அப்படின்னு சொல்லியிருந்தாங்க. ஏதோ ஒரு காரணத்தால் அப்படம் அனுப்பப்படல. அந்த கேரக்டர் தேசிய விருது தவற விட்டதா இப்போது வரையிலும் நான் மட்டும் இல்லாம கன்னட ஆடியன்ஸ் நிறைய பேர்  சொல்லியிருக்காங்க.

உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க..?

அடுத்த ரெண்டு வருஷம் தமிழ் சினிமாவில்தான் ‘உங்க ஷோபனா’ இருக்கப் போறேன். தனுஷ் உடன் ‘இட்லி கடை’... அந்தப்படமும் ஷூட்டிங்கில் இருக்கு.
அப்புறம் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். அந்தப் படம் காமெடி படம். ஆனாலும் இதுதான் ஸோனர் அப்படின்னு சொல்ல முடியாத ஒரு கதை. ரொம்ப வித்தியாசமான ஒரு ட்ரீட்டா அந்தப் படம் இருக்கும்.

ஜெயம் ரவியுடன் ‘காதலிக்க நேரமில்லை’ படம் முடிஞ்சு போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ல இருக்கு. இன்னொரு தமிழ் படம் படப்பிடிப்பில் இருக்கு. இந்தப் படம் பற்றிய மேல் விபரங்களை அதிகாரபூர்வமா படக்குழு அறிவிக்கும்.

சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு... உங்கள் பார்வை என்ன?

இத்தனை வருடங்களும் சினிமாவில் இருந்திருக்கேன்... எனக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் சினிமால இதுவரையிலும் இருந்ததே கிடையாது. எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறதுக்காக மத்தவங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்னு சொல்லிட முடியாது.

நான் இதுவரை பாதுகாப்பில்லாமல் உணர்ந்ததே கிடையாது. எல்லா சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் என்னை ஃப்ரெண்ட்லியா, சக பணியாளராதான் ட்ரீட் செய்திருக்காங்க.
அதேபோல நாம் யார் என்கிறதை நாம எப்படி ப்ரொஜெக்ட் செய்திருக்கிறோமோ அதிலிருந்து மத்தவங்க ஒரு எல்லையை கடைப்பிடிப்பாங்க. அதனால் நமக்கு நடக்கற எந்த விஷயத்திலும் நம்முடைய பங்கும் இருக்கு என்பதே என்னுடைய நம்பிக்கை.  

ஷாலினி நியூட்டன்