வசூல் தீபாவளி!
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ என தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் இளம் இயக்குநர் நெல்சன். இப்போது ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘பிளடி பெக்கர்’ படத்தை தயாரித்துள்ளார். அதிவேகமாக வளர்ந்து வரும் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இவர் நெல்சனிடம் சினிமா கற்றவர். ரிலீஸ் பரபரப்பில் இருந்த சிவபாலனிடம் பேசினோம். தமிழில் டைட்டில் வெச்சிருக்கலாமே?
தமிழில டைட்டிலுக்காக நாங்களும் யோசிச்சோம். யோசிச்சு பார்த்ததுல ‘பிளடி பெக்கர்’ என்ற உச்சரிப்பு தொனி சரியா இருந்துச்சு. பொதுவா திட்டும்போது ‘பிளடி பெக்கர்’ன்னு திட்டுவோம். அதே சமயம் லீட் கேரக்டரை ரிலேட் பண்ற டைட்டில் தேவைப்பட்டுச்சு. லீட் கேரக்டர் எப்படின்னா, கையில எதுவுமே இல்லைன்னாலும் எல்லோரையும் நக்கல் பண்ற கேரக்டர்.
படத்தோட ஐடியாலாஜி என்னன்னு கேட்டீங்கன்னா, ஹீரோவுக்கு எந்த ஆசையும் இருக்காது. அதனால ‘என் இஷ்டத்துக்கு இருக்கிறேன். வேலைக்கு போகமாட்டேன். யாரும் என்னை கேள்விகேட்க முடியாது. அந்த உரிமையும் யாருக்கும் இல்லை. உங்களுக்கு வாழ்க்கை மீது ஆசை இருக்கு. அதனால அதைப் பிடிச்சுட்டு போறீங்க.
எங்கிட்ட எதுவுமே இல்லாததால நான் இப்படி இருக்கிறேன்’ என்ற மனநிலையை சார்ந்தவர்.இந்த ஐடியாலஜியில் இருக்கும் ஹீரோவுக்கு ஒரு நாள் விசித்திரமான ஆசை வருது. அந்த ஆசையை நிறைவேற்ற நினைக்கும் போது வரும் பிரச்னைகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன். ஹீரோ கெட்டப் ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை ஞாபகப்படுத்துகிறதே?
அந்தப் படம் காலத்துக்கும் பேசப்படும் படம். பிச்சைக்காரன் லுக் வந்தாலே ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை கம்பேர் பண்ணாம இருக்க முடியாது. எம்.ஆர்.ராதா சாரை வெச்சு ஒரு கனெக்ஷன் இருக்கு. ஆனால், அது ‘ரத்தக் கண்ணீர்’ வெர்ஷன்ல இருக்காது.கவின் வளர்ந்து வரும் ஹீரோ. அவருக்கு இளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்படி பிச்சைக்காரன் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார்?
கதை எழுதி முடிச்சதும், பெக்கர் கேரக்டர்ல யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். ஏற்கனவே அந்த மாதிரி கேரக்டர்ல நடிச்சவங்ககிட்ட போலாம்னுதான் முடிவு செஞ்சேன்.
எழுதி முடிச்சதும் ஆடியன்ஸ் யோசிச்சு பார்க்காத ஹீரோ நடிச்சா அது ஃப்ரெஷ் ஃபீல் கொடுக்கும்னு தோணுச்சு.கவின் என்னுடைய நீண்ட கால நண்பர். ஒப்பீனியனுக்காக அவரிடம் கேஷுவலா இந்தக் கதையை சொன்னேன். படத்தோட லைன் கேட்டதுமே ஆர்வமானார். இரண்டு முறை கதை கேட்டிருப்பார். ஸ்கிரிப்டையும் முழுசா படித்தார்.
கவினைப் பொறுத்தவரை எல்லா வகை ஜானரிலும் படம் பண்ணுபவர். அந்த வகையில் இந்தக் கதை, கேரக்டர், ஆர்ட் டிஸ்ட்டா எந்தளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணலாம் என்பதை தீர்க்கமா யோசிச்சபிறகு நான் பண்றேன்னு சொன்னார்.அதுமட்டுமல்ல, கவின் இளம் ஹீரோ. தன்னுடைய ரசிகர்களுக்காக இன்னும் படம் பண்ண ஆரம்பிக்கவில்லை. அதேசமயம் அவருடைய ரசிகர்களை மனசுல வெச்சு இந்தக் கதையை நகர்த்தவும் முடியாது.
மொத்த படத்திலும் அவர் பெக்கராதான் தெரிவார். ஹீரோ கவின் எங்கேன்னு தேடினால் கேரக்டர் அடிபட்டுவிடும். அதனால் இமேஜ், ரசிகர்கள் என எதையும் யோசிக்காம ரசிகர்களை எப்படி ரசிக்க வைக்கலாம் என்ற கோணத்தில் மட்டுமே பண்ணிய படம் இது.
கவின் ரோட்ல பிச்சை எடுத்தாராமே?
இது அவருடைய வயசுக்கு மீறிய ரோல். பெக்கர் லுக் கொண்டு வருவது பெரிய சவாலா இருந்துச்சு. சினிமாவுல விஸ்வநாத் சுந்தரம்ன்னு ஒரு கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட் இருக்கிறார். ‘பாகுபலி’ படத்துல ஒர்க் பண்ணியவர். அவரிடம் கவின் ஃபோட்டோவை கொடுத்ததும், பெக்கர் லுக் வரைஞ்சு காட்டினார். பாலிவுட் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் செரீனாவுடைய மேக்கப்ல கவின் ஒரிஜினல் பெக்கராகவே மாறினார்.
பப்ளிக் ரெஸ்பான்ஸ் எப்படி யிருக்குன்னு பார்க்கலாம்னு ரோட்ல இறக்கிவிட்டோம். ஆட்டோல இருந்த ஒரு அம்மா 20 ரூபா பிச்சை போட்டார்.
கவினுடைய டெடிகேஷனைப் பற்றி சொல்வதா இருந்தா பெர்சனலா நிறைய ரெஃபரன்ஸ் எடுத்தார். நான் சொன்ன விஷயங்களையும் கேட்டு மேனரிசத்துல வித்தியாசத்தைக் கொண்டு வந்தார்.
காம்ப்ரமைஸ் இல்லாம பண்ணுவார். ஒரு ஷாட்ல அவர் சும்மா நிக்கணும்னா கூட அதுல இன்புட் போடுவார். தேர்ந்த நடிகர்கள் எல்லாரும் அப்படிப் பண்ணுவாங்க. கவின் இளம் வயதிலேயே அதை பண்ண ஆரம்பிச்சுட்டார்.
ஹீரோயினை எப்ப கண்ணுல காட்டுவீங்க?
படத்துல லவ் இருக்கும். ஆனால், ஜோடி கிடையாது. இதுல தெரிஞ்ச முகம் என்றால் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், டி.எம்.கார்த்திக் மட்டுமே.
மற்றபடி அக்ஷயா ஹரிஹரன், மெரின் பிலிப், அனார்கலி நாசர், மாருதி பிரகாஷ் ராஜ்னு தொண்ணூறு சதவீதம் புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க. ‘போர் தொழில்’ சுனில் சுக்காடா வில்லனா வர்றார்.
உங்க தயாரிப்பாளரிடம் கேட்டிருந்தா அனிருத் கொடுத்திருப்பாரே?
கொடுத்திருக்க மாட்டார். நானும் கேட்கல. இந்தக் கதைக்கு இந்த பட்ஜெட் என்று சில கணக்கு இருக்கும். தயாரிப்பாளராக கதைக்கு நியாயமான எல்லா தேவைகளையும் நெல்சன் சார் செய்வார். ஒருவேளை என் இஷ்டத்துக்கு யாரையாவது கேட்டாலும் அவங்களுக்கு ஓகேன்னா பண்ணலாம்னுதான் சொல்வார்.மியூசிக் டைரக்டர் ஜென் மார்ட்டின் திறமைசாலி. நான்கு பாடல்களை பிரமாதமா கொடுத்தார். ‘துருவங்கள் பதினாறு’, ‘கணம்’ போன்ற படங்களில் வேலை செய்த சுஜித் சாரங்க் கேமரா ஹேண்டில் பண்ணியிருக்கிறார்.
நெல்சன் படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார்?
நானும் நெல்சன் சாரும் பத்து வருஷமா பழகி வர்றோம். ‘வேட்டை மன்னன்’, ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ என அவருடன் ஒர்க் பண்ணினேன். இந்தக் கதை ரெடியானதும் அவரிடம் சொன்னேன். ‘நானே தயாரிப்பு நிறுவனம் சொல்றேன்’னு சொன்னார்.அந்த பிராசஸ்ல அவருக்கு என்னுடைய கன்ட்ன்ட் மேல நம்பிக்கை இருந்துச்சு.
நெல்சன் சார் எதை செய்தாலும் தனித்துவமா இருக்கணும்னு நினைப்பார்.எல்லா மாதிரி கதைகளும் கேட்பார். எல்லா படங்களையும் பார்ப்பார். டைரக்ஷன் பண்ணுவதற்கு கதை மீது எவ்வளவு கவனம் செலுத்துவாரோ அதே கவனத்தை படத் தயாரிப்புக்கும் செலுத்துவார். ஏனெனில், டைரக்ஷன் மேல எவ்வளவு பேஷன் இருக்கிறதோ அதேஅளவுக்கு படம் தயாரிக்கணும் என்ற ஆர்வம் உள்ளவர். இது அவருடன் நெருங்கிப் பழகும்போது தெரிஞ்சுக்க முடிஞ்சது. முதல் படத்தைத் தயாரிக்க முன்வந்தப்ப அவருக்குன்னு சில அளவுகள் இருந்தது. அதே சமயம் ஸ்கிரிப்ட் கேட்டதோடு சரி, மற்றபடி எந்தத் தலையீடும் இல்லாம கிரியேட்டருக்கான முழு சுதந்திரம் கொடுத்தார். படம் பார்த்துட்டு ‘நல்லாயிருக்கு’ன்னு பாராட்டினார்.
எஸ்.ராஜா
|